Sep 30, 2017 07:38 AM

‘கருப்பன்’ விமர்சனம்

05186c0e7743fd6839ab062bf693e259.jpg

Casting : விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம் புலி

Directed By : ஆர்.பன்னீர் செல்வம்

Music By : டி.இமான்

Produced By : ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ்

 

கிராமத்து பின்னணி கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம் ‘கருப்பன்’.

 

கிடைக்கும் வேலைகளை செய்துக்கொண்டு, வாங்கும் கூலிக்கு மது குடித்துவிட்டு ஊர் சுற்றினாலும், தனது அம்மா மீது அதிகம் பாசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்ளும் ஹீரோயின் தான்யா, அவரை மட்டும் இன்றி அவரது அம்மாவையும் ரொம்ப அக்கறையாக பார்த்துக்கொள்கிறார்.

 

எப்படியோ போக வேண்டிய தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய தனது மனைவி தான்யா மீது கொள்ளை பாசத்தை விஜய் சேதுபதி வைத்திருக்கிறார். இதற்கிடையே தான்யவின் உறவினரான பாபி சிம்ஹாவின் சகுனி தனத்தால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு, விஜய் சேதுபதியும் அவரது மனைவியும் பிரிய நேரிடுவதோடு, தான்யாவின் அண்ணனான பசுபதி, விஜய் சேதுபதியின் உயிரை எடுக்கவும் துணிந்துவிட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘கருப்பன்’-னின் கதை.

 

அறிமுக நாயகனாக கிராமத்து கதையில், கதையின் நாயகனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, இந்த ‘கருப்பன்’-னில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.

 

கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் பாசம் தான் படத்தின் மெயின் பாய்ண்ட் என்பதால், தனது மனைவியை கொஞ்சுவதில் ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. தனது சிறு சிறு ரியாக்சன் மூலமாகவும், மேனரிசம் மூலமாவும் கதாபாத்திரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவரான விஜய் சேதுபதி, இதிலும் அதே பாணியை கையாண்டிருந்தாலும், சரியாக எடுபடவில்லை. அதிலும், மனைவியை அவர் கொஞ்சுவது ஒரு கட்டத்தில் ரொம்ப ஓவராகிவிட, அவரது நடிப்பும் ஓவர் டோசாக மாறி சில இடங்களில் ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது.

 

குடும்ப பாங்கான கேரக்டருக்கு ரொம்ப கச்சிதமாக பொருந்தும் தான்யா, புடவையில் ரொம்ப லஞ்சனமாக இருப்பதோடு, நடிப்பிலும் கவர்கிறார். தன் மீது மோதும் விஜய் சேதுபதியை பளார் என்று கண்ணத்தில் அறையும் தான்யா, தன்னை கடத்தும் பாபி சிம்ஹாவிடம் மட்டும், தனது தைரியத்தை காட்டாமல் பம்புவது ரொம்ப நாடகத்தனமாக இருக்கிறது.

 

தங்கை மீது பாசம் வைத்திருக்கும் அண்ணன், வீரமான ஹீரோ, சகுனியை போல களகம் செய்யும் வில்லன், என்று தமிழ் சினிமாவில் ஏற்கனவே அறைத்த மாவு தான் என்றாலும், அதை விஜய் சேதுபதி என்ற ஸ்பெஷல் கிரைண்டர் மூலம் அறைத்தால், அது புதுசா இருக்கும் என்ற நம்பிக்கையில் இயக்குநர் பன்னீர் செல்வம் அறைத்திருக்கிறார்.

 

அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைப்பை விஜய் சேதுபதி போட்டிருந்தாலும், படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள், அப்பப்பா....எத்தனை வருஷ பழசு...என்று சில ரசிகர்களை புலம்ப வைக்கிறது.

 

அதிலும், பாபி சிம்ஹாவின் அந்த கதாபாத்திரம் தென்மாவட்ட மக்களை அசிங்கப்படுத்துவது போல அமைந்திருக்கிறது. அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசைப்படும் கதாபாத்திரமா, கூப்பிடு பாபி சிம்ஹாவ, என்பது போல மனுஷன் படத்திற்கு படம் இப்படி ஆசைப்படுகிறாரே...ஐய்யோ பாவம்.

 

யாரும் அடக்க முடியாத காளை மாட்டை அடக்கும் ஹீரோ, எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று தும்சம் செய்யும் ஹீரோ, என ஒரு மாஸ் ஹீரோவாக மாற ஆசைப்பட்ட விஜய் சேதுபதியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பசுபதி போன்ற நல்ல நடிகர்களை இயக்குநர் பன்னீர் செல்வம் ரொம்ப நன்றாகவே பலி கொடுத்திருக்கிறார்.

 

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் முனுமுனுக்க வைக்கிறது. கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவில் ஜல்லிக்கட்டு போட்டியும், ஆக்‌ஷன் காட்சிகளும் மிரட்டுகிறது. சண்டைப்பயிற்சியாளர் ராஜசேகர் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், கட்டிய பல வீடுகளை இடிப்பதிலே குறியாக இருக்கிறார். பொதுவாக சண்டைனு வந்துட்டா, வீடு கட்றத பாக்குரியா...என்று கேட்பாங்க, ஆனா ராஜசேகர் மாஸ்டரோ, கட்டிய வீடுகளை இடிப்பதையே ஆக்‌ஷனாக வடிவமைத்திருக்கிறார்.

 

விஜய் சேதுபதி, தான்யா இருவருக்குமான கெமிஸ்ட்ரியை போல, சிங்கம் புலியுடனான விஜய் சேதுபதியின் காமெடி காட்சிகளும் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதிலும், டாஸ்மாக் பாரில் சிங்கம் புலியின், “நேத்து ராத்திரி...” நடனம் திரையரங்கையே அதிர வைக்கிறது.

 

கதையின் நாயகனாக மட்டும் அல்ல, நாயகனுக்காக உருவாகும் கதையிலும் தான் நடிப்பேன், என்பதை கோடம்பாக்க இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி உரக்க சொல்லும் விதத்தில் அமைந்துள்ள இந்த ‘கருப்பன்’, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவன் தான் என்றாலும், மக்களை குறிப்பாக பெண்களை சினிமா தியேட்டருக்கு வரவைக்கும் அளவுக்கு கன்னியமான ஒருவனாகவும், கமர்ஷியலாகவும் இருக்கிறான்.

 

ஜெ.சுகுமார்