Feb 23, 2018 04:41 AM

மெர்லின் விமர்சனம்

36d7d37ad5c9321288dd56c57adb4766.jpg

Casting : Vishnupriyan, Ashwini, Lollu Saba Jeeva, Risha

Directed By : V.Keera

Music By : Ganesh Ragavendira

Produced By : JSB Film Studios

 

ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிப்பில், வ.கீரா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திகில் பிளஸ் சஸ்பென்ஸ் படம் ‘மெர்லின்’.

 

உதவி இயக்குநரான விஷ்ணுப்பிரியன், படம் இயக்கும் பணியில் ஈடுபட்டிருக்க, அவர் அறையில் இருக்கும் அவரது நண்பர்கள் அவரக்கு தொந்தரவாக இருக்கிறார்கள். எப்போதும் ஆட்டம் பாட்டு, என்று ஒரே சத்தமாக இருக்கும் அந்த அறையில் இருந்துக்கொண்டு கதை எழுத முடியாத விஷ்ணுப்பிரியன், வேறு அறைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்க, தனது நண்பர்களை ஆப் செய்வதற்காக பொய்யான பேய் கதை ஒன்றை சொல்லி அவர்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார். அவர்களும் இரவு ஆனால் பேய் பயத்தால் அமைதிகாத்து வர, இந்த கேப்பில் தனது பணியில் மும்முரம் காட்டும் விஷ்ணுப்பிரியனுக்கு, தான் பொய்யாக சொன்ன அனைத்தும் நிஜத்தில் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் பொய்யாக சொன்ன மெர்லின் என்ற பேயே அவர் முன்னாள் வர, அச்சத்தில் உரைந்துப்போகிறவர், அதனால் பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்தவர் போலாகிவிட, அவரை பயமுருத்தும் பேய் யார்? என்பதும், அதில் இருந்து மீண்டு வந்து சினிமாவில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதும் தான் ‘மெர்லின்’ படத்தின் மீதிக்கதை.

 

பேய் இருப்பதாக பொய் சொல்ல, பிறகு உண்மையாகவே அங்கே பேய் இருக்கும், என்ற கதைகளை சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நாம் பார்த்து வந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் அதை சொல்ல முயற்சிக்க, பலர் அதை காமெடியாக மட்டுமே சொல்வதும் உண்டு. ஆனால், இப்படத்தின் இயக்குநர் வ.கீரா, அதே விஷயத்தை அறிவியல் பூர்வமாக சொல்லியிருக்கிறார்.

 

கோடம்பாக்கத்தை அவ்வபோது எட்டிப்பார்த்துவிட்டு போகும், நடிக்க தெரிந்த நடிகர்களில் விஷ்ணுப்பிரியனும் ஒருவர். கூத்துப்பட்டறை மாணவரான இவர், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தயாரிப்பாளரிடமும், ஹீரோவிடம் உதவி இயக்குநராக கதை சொல்லும் இடத்திலும், பேய் பயத்தால் உரைந்துப்போகின்ற இடங்களிலும் குறை வைக்காமல் நடித்திருப்பவர், தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

 

மெர்லின் என்ற டைடில் ரோலில் மட்டும் அல்லாமல் இஸ்லாமிய பெண் வேடம், இறுதியில் இந்து மத பெண் வேடம் என்று மூன்று வேடங்களில் தோன்றியிருக்கும் ஹீரோயின் அஸ்வினி, கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.

 

லொள்ளு சபா ஜீவா, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் காமெடி நடிகர்களாக அல்லாமல் குணச்சித்திர நடிகர்களாக வலம் வந்திருந்தாலும், அவர்களது சில பேச்சுலர் காமெடி சிரிக்க வைக்கிறது. 

 

ஹீரோ சொல்லும் போலியான மெர்லின் என்ற பேய் கதை உண்மையான பிறகு, அந்த மெர்லின் யார்? என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் இயக்குநர் கீரா, திரைக்கதையில் எதிர்ப்பாரத ட்விஸ்ட்டாக காதல் கதை ஒன்றை சொல்வதோடு, அதையும் பேய் கதையோடு சம்மந்தப்படுத்தி திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.

 

அதிலும், படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த மோகினி காட்சி, ஒட்டு மொத்த திரையரங்கையே சில நிமிடங்கள் பயத்தில் உரைய வைப்பதோடு, பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. பிறகு சகஜமான நிலைக்கு திரும்பும் திரைக்கதை ரசிகர்கள் யூகித்துவிடும்படி இருந்தாலும், நடு நடுவே வரும் ட்விஸ்ட் படத்தை எதிர்ப்பார்ப்புடனே நகர்த்துகிறது. 

 

ரிசா மூலம் எதையோ சொல்ல வருவது போல ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரத்தை காட்டும் இயக்குநர், பிறகு அந்த கதாபாத்திரத்தை டம்மியாக்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய ஓட்டையாக இருக்கிறது. இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருந்தாலும், இயக்குநர் வ.கீரா தான் சொல்ல வந்ததை, எந்த அளவுக்கு வித்தியாசமாக சொல்ல வேண்டுமோ அந்த அளவுக்கு சொல்ல முயற்சித்திருக்கிறார்.

 

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாகும், பாடல் வரிகள் புரியும்படியாகும் இருக்கிறது. முத்துக்குமரனின் ஒளிப்பதிவும், சாமுவேலின் படத்தொகுப்பும், பேய் இருக்கு, ஆனா இல்ல, என்பதை ரசிகர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் சொல்லியிருக்கிறது.

 

பேய் படத்தை காமெடியாக சொல்லி வந்த தமிழ் சினிமாவில், புதிய முயற்சியாக அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘மெர்லின்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

ஜெ.சுகுமார்