Apr 24, 2018 07:56 AM

‘முந்தல்’ விமர்சனம்

0062c4ad83def8d96adbc39da147295f.jpg

Casting : Appu Krishna, Muksha, Naan Kadavul Rajendran, VS Ragavan

Directed By : Stunt Jeyanth

Music By : K.Jeykrish

Produced By : Harvest Moon Pictures

 

ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் கே.பாலகுமரன் தயாரிப்பில், பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘முந்தல்’.

 

பல நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கொண்ட சித்த மருத்துவத்தில் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மருந்தும் இருக்கிறது. ஆனால், வியாபார நோக்கில் மறைக்கப்பட்ட அப்படிப்பட்ட அபூர்வ மருந்தின் பார்முலாவை சித்த மருத்துவர்கள் ஓலைச்சுவடியில் எழுதி வைத்து, அதை மிக பாதுகாப்பான இடங்களில் வைத்திருப்பதோடு, அந்த ஓலைச்சுவடி எங்கே இருக்கிறது என்ற தகவலை மற்றொரு ஓலைச்சுவடியிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

 

சித்தர்களின் பார்முலாவையும், அவர்கள் கொடுத்த மருந்தையும் வைத்து ஹீரோ அப்பு கிருஷ்ணாவின் தாத்தாவான சித்த மருத்துவர் வி.எஸ்.ராகவன், புற்றுநோய்க்கான மருந்தை கண்டுபிடித்து விடுகிறார். இதை அறிந்துக்கொள்ளும் மருத்துவர் நிழல்கள் ரவி, வி.எஸ்.ராகவனிடம் இருந்து அந்த மருந்து மற்றும் பார்முலாவை கைப்பற்ற முயற்சிக்கிறார். ஆனால், நிழல்கள் ரவியின் வியாபார நோக்கத்தை புரிந்துகொள்ளும் வி.எஸ்.ராகவன், அவரிடம் கொடுக்க மறுப்பதோடு, மருந்தின் பார்முலா கொண்ட ஓலைச்சுவடி இருக்கும் இடத்தை தனது பேரன் ஹீரோ அப்பு கிருஷ்ணாவிடம் கூறிவிட்டு, அந்த பார்முலாவை எடுத்து அனைவரும் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதே சமயம் நிழல்கள் ரவியின் ஆட்கள் வி.எஸ்.ராகவனை கொலை செய்துவிட, தாத்தா சொன்னது போல புற்று நோய்க்கான மருந்தின் பார்முலா கொண்ட ஓலைச்சுவடியை எடுக்க ஹீரோ அப்பு கிருஷ்ணா கம்போடியா பயணிக்கிறார். அதே ஓலைச்சுவடிக்காக நிழல்கள் ரவியும் கம்போடியா செல்ல, இறுதியில் அந்த ஓலைச்சுவடி யாரிடம் கிடைத்தது, என்பது தான் க்ளைமாக்ஸ்.

 

டிராவலிங் அட்வெஞ்சர் படம் என்பது தமிழ் சினிமாவில் அறிதான ஒன்று தான். அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘முந்தல்’.

 

புதுமுக ஹீரோ அப்பு கிருஷ்ணா நடிப்பை விட ஆக்‌ஷனில் தான் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அதிலும் விஜய்காந்த் ஸ்டைலில் கால்களாலேயே வில்லன்களை இவர் பந்தாடும் காட்சிகள் படு ஜோராக உள்ளது. படத்தில் இடம்பெற்ற பல ரிஸ்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கும் அப்பு கிருஷ்ணா, நடிப்பில் சற்று கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஹீரோவுக்கு சில சமயங்களில் உதவி செய்யவும், அவரது பிளாஷ்பேக்கை சொல்லுவதற்கு தூண்டுதலாகவும் இருக்கும் ஹீரோயின் முக்‌ஷாவின் கதாபாத்திரமும், அவரும் சுமார் தான்.

 

வில்லனாக நடித்துள்ள நிழல்கள் ரவி எப்போதும் போல தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். கொடூர வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடி நடிகராக மாறிய நான் கடவுள் ராஜேந்திரன், இந்த படத்தில் மீண்டும் டெரர் வில்லனாக நடித்திருக்கிறார். வி.எஸ்.ராகவன் நடித்த கடைசிப்படம் இது தான். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்.

 

கே.ஜெய்கிருஷின் இசையும், ராஜாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளில் ராஜாவின் கேமரா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறது. 

 

இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த், ஸ்டண்ட் மாஸ்டர் என்பதனால் தனது முதல் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் அட்வெஞ்சர் காட்சிகளுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், நல்ல கருத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறார்.

 

சித்த மருத்துவத்தில் அனைத்திற்கும் மருந்து இருந்தும் அவை வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணம், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கம் தான் என்பதை ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறார். 

 

படத்தில் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அவர்கள் எடுத்துக்கொண்ட கான்சப்ட் ரொம்பவே பெரிதாக இருப்பதோடு, அதற்காக அவர்கள் கொடுத்த உழைப்பும் பெரிதாகவே இருக்கிறது. முதல் பாதி ஆக்‌ஷன், காதல், டூயட் பாடல் என்று கமர்ஷியலாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் தொடங்கும் ஹீரோவின் பயணம், திரைக்கதையை அதிவேகமாக நகர்த்திச் செல்கிறது. அதுவும் கம்போடியாவுக்கு கடல் வழியாகவே பயணிக்கும் ஹீரோ செல்லும் இடங்கள் அனைத்தும் இதுவரை நாம் சினிமாவில் பார்த்திராத லொக்கேஷன்களாக இருக்கின்றன.

 

படத்தில் சில இடங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இரண்டாம் பாதி படம் அமைந்திருக்கிறது.

 

கம்போடியாவுக்கு கடல் வழியாக பயணித்தால், எந்த வழியாக செல்வது, அப்படி செல்லும் போது எந்த மாதிரியான இடையூறுகள் வரும் என்பதை இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த், ஒரிஜினலாகவே எடுத்திருப்பது விசுவல் ட்ரீட்டாக இருக்கிறது. 

 

 

ஜெ.சுகுமார்