Nov 07, 2018 07:09 AM

’சர்கார்’ விமர்சனம்

85f46efd42bd2ba97b8ec1f0cc73553d.jpg

Casting : Vijay, Keerthy Suresh, Varalakshmi, Radharavi, Pazha Karuppaiah

Directed By : AR Murugadass

Music By : AR Rahman

Produced By : Sun Pictures

 

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படமான ‘சர்கார்’ பஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஆரம்பத்திலேயே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, பிறகு படம் குறித்து ஆடியோ ரிலீஸில் விஜய் பேச்சு, கதை திருட்டு விவகாரம் என்று எதிர்ப்பார்ப்பை எகிற வைத்த படத்தின் ரிசல்ட் எப்படி என்பதை பார்ப்போம்.

 

அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான விஜய், தனது ஓட்டை போடுவதற்காக சென்னைக்கு வருகிறார். வாக்குச்சாவடிக்கு சென்றதும் அவரது வாக்கை வேறு ஒருவர் போட்டுவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைபவர், நீதிமன்றம் மூலம் தனது வாக்கை திரும்ப பெற சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறுவதோடு, தன்னைப் போல மற்றவர்களையும் தங்களது வாக்குகளை திரும்ப பெற சட்டப்போராட்டம் நடத்த தூண்டுகிறார். விஜயின் இந்த நடவடிக்கையால், முதல்வராக பதவி ஏற்க இருந்த பழ.கருப்பையாவுக்கு நீதிமன்றம் தடைவிதிக்க, அவர் விஜய் மீது கோபம் கொள்வதோடு, அவரையும் அவரது குடும்பத்தையும் அழிக்க நினைக்கிறார். இதனால் தேர்தலில் நிற்க முடிவு செய்யும் விஜய், முதல்வர் வேட்பாளாரான பழ.கருப்பையாவின் தொகுதியில் நிற்பதோடு, தமிழகம் முழுவதும் அந்த அந்த தொகுதியில் உள்ள நேர்மையானாவர்களை தேர்வு செய்து அவர்களை வேட்பாளராக்கி, புதிய தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். 

 

பழ.கருப்பையாவுக்கு அவ்வபோது ஆலோசனை வழங்கி வரும் அவரது மகள் வரலட்சுமி, நேரடியாக அரசியல் களத்தில் இறங்குவதோடு, விஜய்க்கு பலவிதத்தில் பிரச்சினைகளை கொடுக்கிறார். அத்தனை தடைகளையும் எதிர்கொள்ளூம் விஜய், தனது அரசியல் பயணத்தில் ஜெயித்தாரா இல்லையா, என்பது தான் ‘சர்கார்’ படத்தின் கதை.

 

அரசியலைப் பற்றி மட்டும் பேசாமல், நெல்லை கலெக்டர் அலுவகத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே  தீக்குளித்த சம்பவம் என சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கும் அரசியல்வாதிகள் தான் காரணம், என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், அரசியல்வாதிகளை கேள்வி கேட்க வேண்டும் என்பதை மக்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்திருப்பதோடு, தமிழகத்தில் நடைபெறும் சமகால அரசியல் பற்றியும் பேசியிருக்கிறார்.

 

உலக நாடுகளே பார்த்து பயப்படும் அளவுக்கு கார்ப்பரேட் கிரிமினிலாக சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய், தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் பலதரப்பட்ட பர்பாமன்ஸை பக்காவாக கொடுத்திருப்பதோடு, அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைத்து சினிமா ரசிகர்களும் கை தட்டும் விதத்தில் நடிப்பில் அதகளப்படுத்துகிறார். பல ஆயிரம் கோடி சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் மனிதராக ஸ்டைலிஷாக வரும் விஜய், தீ காயம் பட்ட குழந்தையை பற்றி பேசும் போது படம் பார்ப்பவர்களையும் கண் கலங்க வைப்பவர், அரசியல் வில்லன்களுடன் மோதுவதில் அதிரடியை காட்டி, முழு படத்தையும் தன் தோள் மீது தூக்கி சுமந்திருக்கிறார்.

 

பழ.கருப்பையா, ராதாரவி அரசியல் வில்லன்களாக நடிப்பில் மிரட்ட, இவர்களை ஓவர் டேக் பண்ணும் அளவுக்கு வரலட்சுமியின் வேடமும் அவரது நடிப்பும் அசத்தலாக இருக்கிறது. “அவன் கார்ப்பரேட் கிரிமினல்னா, நான் கருவிலேயே கிரிமினில்” என்று வசனம் பேசி மிரட்டுவதோடு, நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.

 

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. விஜயுடன் ஒரு பாடலுக்கு மட்டும் டூயட் பாடும் கீர்த்தி சுரேஷின் நிலை, “ஐயோ பாவம் தான்”. அவரை பெரிதாக இயக்குநர் பயன்படுத்தவில்லை, அது படத்திற்கும் தேவைப்படவில்லை. 

 

கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்களாக இருக்கிறது. அதிலும் “சிம்டாங்கரன்” பாடலும், அதை படமாக்கிய விதமும் திருவிழா அனுபவத்தை கொடுக்கிறது. ராம் லக்‌ஷ்மனின் ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடியாக இருந்தாலும், சில நேரங்களில் தெலுங்குப் படத்தின் ஆக்‌ஷனை பார்ப்பது போலவும் இருக்கிறது.

 

நீட், ஹைட்ரோ கார்பன், கந்துவட்டி என அனைத்து பிரச்சினைப் பற்றியும் படத்தில் பேசியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழக அரசியல் குறித்து தைரியமாக பேசுவதோடு, “மரம் வச்சா மழை வரும்னு சொல்றாங்க, கடல்ல மரமா இருக்கு, அங்க மழை வரல? இதை கேட்டா நான் முட்டாள்னு சொல்றாங்க” என்று ஆளும்கட்சி தலைவர் ஒருவர் பேசுவது போன்ற காட்சியை வைத்து, தற்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த சிலரை நமக்கு நினைவுப் படுத்துகிறார்.

 

நாட்டில் நடக்கும் அத்தனை மாற்றங்களின் பின்னணியிலும் ஒரு அரசியல் இருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் முருகதாஸ், படத்தில் பலவிதமான பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தாலும் எதையுமே முழுமையாக பேசவில்லை.

 

விஜயின் எண்ட்ரி, அரசியல் தலைவர்களுடனான மோதல் என்று படத்தின் முதல் பாகம் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தாலும், இரண்டாம் பாதி முழுவதும் வசனங்கள் மூலமாகவே நகர்வதால் படத்தில் தொய்வு ஏற்படுகிறது. இருப்பினும்  வரலட்சுமியும், விஜயும் பேசும் பன்ஜ் வசனங்கள் ரசிகர்களிடம் கை தட்டல் பெறுகிறது.

 

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதை நிராகரித்துவிட்டு, தான் எப்போதும் எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சியாளர்களை கேள்வி கேட்பேன், என்று விஜய் சொல்வதோடு, படத்தை முடித்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், தேர்தலை வியாபரமாக்கிய அரசியல்வாதிகளுக்கு மக்கள் சக்தியின் வீரியத்தை புரிய வைத்திருப்பதோடு, வாக்கை பொருளாக கருதி விற்பனை செய்யும் வாக்காளர்களுக்கு, அது தங்களுடைய வாழ்க்கை என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘சர்கார்’ அரசியல் சரவெடியாக வெடிக்கிறது.

 

3/5