Nov 18, 2017 02:04 PM

‘தீரன் அதிகாரம் ஒன்று’ விமர்சனம்

12ddb409ad0cb3443b918680f75927f4.jpg

Casting : Karthi, Rakul Preet Singh

Directed By : Vinoth

Music By : Ghibran

Produced By : S. R. Prakashbabu, S. R. Prabhu

 

ஒரு திரைப்படத்தை கமர்ஷியலாக சொல்வதோடு, அதில் சமூகத்திற்குண்டான விழிப்புணர்வு விஷயத்தையும் சொல்லி, தனது முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தை வெற்றி படமாக்கிய இயக்குநர் வினோத், தனது இரண்டாம் படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் அப்படி ஒரு விழிப்புணர்வு விஷயத்தை தான் சொல்லியிருக்கிறார். அது என்னவென்று பார்ப்போம்.

 

நகரத்தை தள்ளி இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளை அடிக்கும் கும்பல், அந்த வீட்டில் இருப்பவர்களை கொடூரமாக கொலை செய்கின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து இப்படி பல கொள்ளை மற்றும் கொலைகள் நடக்க, இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான கார்த்தி, இப்படிப்பட்ட சம்பவங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடப்பதையும், இதை செய்வது ஒரே கும்பல் தான் என்பதையும் கண்டுபிடிப்பதோடு, குற்றவாளிகள் யார், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்கிறார்.

 

குற்றவாளிகள் வேறு மாநிலத்தில் இருப்பதால், அவர்களை பிடிப்பதில் காவல்துறை அதிகாரிகளில் சிலர் மெத்தனம் காட்டினாலும், அவர்களை பிடித்தே தீருவேன் என்று தனது டீமுடன் கிளம்பும் கார்த்தி, அந்த குற்றவாளிகளை எப்படி கைது செய்கிறார், அவர்களது பின்னணி என்ன, இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த மாதிரியான பிரச்சினைகள் வருகிறது, என்பதை துள்ளியமாக சொல்லியிருப்பதே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் கதை.

 

‘சிறுத்தை’ படத்தில் மாஸ் போலீசாக நடித்த கார்த்தி, இந்த படத்தில் கிளாஸ் போலீசாக நடித்திருக்கிறார். போலீஸ் என்பவர்கள் நம்மில் ஒருவர், என்பதை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் கார்த்தி ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்.

 

ஹீரோ என்றால் ஹீரோயின் வேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்டுள்ள கதாபாத்திரமாக ரகுல்ப்ரீத் சிங் இருக்கிறார். அவரை கதையோடு சேர்த்து காட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஒரு சில காட்சிகள் ரசிக்கப்பட்டாலும், பல காட்சிகள் மொக்கைத்தனமாக உள்ளது.

 

படத்தில் வில்லன்களாக நடித்துள்ள நடிகர்களின் தேர்வு கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக உள்ளதோடு, படம் முழுவதுமே தான் சொல்லும் அனைத்திற்க்கும் இயக்குநர் வினோத் ஆய்வு பூர்வமாக விளக்கம் அளித்திருக்கிறார்.

 

1995 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை கையில் எடுத்துள்ள வினோத், அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை வெறும் கற்பனையோடு சொல்லாமல், ஆய்வுப்பூர்வமாக சொல்லியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

 

ஜிப்ரானின் பின்னணி இசையும், சத்யன் சூரியனின் ஒளிப்பதுவும் படத்தின் விறுவிறுப்புக்கு கியர் கருவியாக பயன்பட்டிருப்பதோடு ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது. அதிலும் வில்லன்களை கார்த்தி நெருங்கும் அந்த பஸ் ஆக்‌ஷன் காட்சி மிரட்டலாக உள்ளது.

 

காவல்துறைக்கு சப்போர்ட் பண்ணும் விதத்தில் இயக்குநர் வினோத் திரைக்கதையை எழுதியிருந்தாலும், அவர்களிடம் இருக்கும் தவறுகளையும் சுட்டி காட்டியிருப்பவர், கொள்ளை கும்பலின் கொடூர செயல்களை மட்டும் சொல்லாமல், அவர்கள் அந்த நிலைக்கு வந்தது எப்படி, என்பதையும் சொல்லி தன்னை ஒரு டெக்னீஷியனாக நிரூபித்துள்ளார்.

 

படத்தில் சொதப்பல் என்றால், அதிகமான காதல் காட்சிகள் இருப்பது தான். படத்தின் ஆரம்பமே ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், காதல் காட்சிகளால் முதல் பாதியின் பெரும்பாலான காட்சிகள் ஆமைப்போல நகர்வதோடு, ரசிகர்களுக்கு தாலாட்டு பாடவும் செய்கிறது.

 

ஆனால், வில்லன்களை கார்த்தி தேடி செல்லும் போது, மீண்டும் வேகம் எடுக்கும் படம், அதன் பிறகு ராக்கெட் போல பறந்தாலும், இந்த படத்திற்காக இயக்குநர் வினோத், எந்த அளவுக்கு ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் என்பதையும், உழைத்திருக்கிறார் என்பதையும் காட்சிகள் அனைத்தும் நம்மிடம் விளக்கமாக சொல்லிவிட்டு செல்வது நம்மை படத்தோடு ஒன்ற செய்துவிடுகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி கிளாஷான படமாகவும் உள்ளது.

 

ஜெ.சுகுமார்