Feb 03, 2018 04:21 PM

விசிறி விமர்சனம்

e78ffdca6ce8e060925b356efb0eefac.jpg

Casting : Ram Saravana, Raj Surya, Remona Stephni

Directed By : Vettri Magalingam

Music By : Thanraj Manikam, Sekar Saibharath, Naveen Shankar

Produced By : A.Jamal Saheep, A.Jafar Shathek

 

சில திரைப்படங்களில் அஜித்தின் புகைப்படத்தையோ அல்லது அவரது வீடியோவை காட்டினால் போது, அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். அதேபோல் விஜயின் புகைப்படத்தைக் காட்டினாலும் அவர்களது ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். இப்படி தனி தனியாக இவர்களது பெருமையை சில படங்கள் பேசினாலும், இருவரது பெருமையை மட்டும் அல்ல இவர்களது ரசிகர்களைப் பற்றியும் பேசியிருக்கும் படம் தான் ‘விசிறி’.

 

தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நடிகர்கள் என்றால் விஜய் மற்றும் அஜித் தான். ஏராலமான ரசிகர்களைக் கொண்ட இவர்கள் ஒன்றுமையாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் அவ்வபோது மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். சில ரசிகர்கள் நேரிலும், சிலர் சமூகவலைதளங்களிலும் மோதிக்கொள்ள, இந்த மோதலை மையமாக வைத்து, அதில் ஒரு காதலையும் வைத்து திரைகக்தை அமைத்திருக்கும் இயக்குநர் வெற்றி மகாலிங்கம், ரசிகர்களின் பலத்தை இப்படியும் பயன்படுத்தலாம் என்ற குட்டி மெசஜையும் சொல்லியிருக்கிறார்.

 

சென்னையைச் சேர்ந்த அஜித் ரசிகரான ராம் சரவணாவும், மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகரான ராஜ் சூர்யாவும், ஃபேஸ்புக்கில் எந்நேரமும் சண்டைபோட்டு வருகிறார்கள். அஜித் பற்றி ராம் போஸ்ட் போட்டால், சூர்யா அவரை கலாய்க்க, பதிலுக்கு விஜயை ராம் கலாய்ப்பார். இப்படி தொடர்ந்து ஃபேஸ்புக்கில் இவர்கள் சண்டைப்போட்டுக் கொண்டிருக்க, படிப்புக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் ஹீரோயின் ரெமோனா ஸ்டெபனி மீது ராமுக்கு காதல் ஏற்படுகிறது. விஜய் ரசிகையான ரெமோனா ஸ்டெபனியை கரெக்ட் பண்ணுவதற்காக தன்னை விஜய் ரசிகன் என்று கூறும் ராம் சரவணா ஒரு வழியாக ஹீரோயினை தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறார்.

 

இந்த நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ரசிகன் ராஜ் சூர்யாவை, ராம் சரவணா பார்த்துவிட, இருவரும் மோதிக்கொள்கிறார்கள். ஒரு வழியாக ராம் சரவணாவையும், ராஜ் சூர்யாவையும் சமாதானப்படுத்தி போலீஸ் அவர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்க, பிறகு தான் தெரிகிறது, ஹீரோயின் ரெமோனா ராஜ் சூர்யாவின் தங்கை என்று. விஜய் ரசிகன் என்று தன்னிடம் பொய் சொல்லியதற்காக, ரெமோனா ராம் சரவணாவின் காதலை கட் பண்ணுவதோடு, மதுரைக்கு சென்றுவிட, அவரை தேடி ராம் சரவணா மதுரைக்கு செல்ல, அங்கே நடக்கும் சம்பவத்தால், போட்டியாளர்களாக இருந்த விஜய், அஜித் ரசிகர்கள் போராளிகளாக மாறிவிடுகிறார்கள், அப்படி அவர்களை மாற்றிய சம்பவம் என்ன என்பதும், அதற்கு அவர்கள் தீர்வுக்கண்ட விதமும் தான் ‘விசிறி’ படத்தின் மீதிக்கதை.

 

அஜித் ரசிகராக நடித்துள்ள ராம் சரவணா, விஜய் ரசிகராக நடித்துள்ள ராஜ் சூர்யா இருவரும் புதியவர்கள் என்றாலும், தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். ஹீரோயின் ரெமோனா ஸ்டெபனியும் தனக்கு கொடுக்கப்பட்ட சிறிய வட்டத்திற்குள் சூப்பராகவே சுழன்றிருக்கிறார்.

 

இசை, ஒளிப்பதிவு என்று அனைத்தும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும் பயணித்திருக்கிறது. 

 

அஜித் பற்றி விஜய் ரசிகர் கலாய்ப்பது, விஜய் பற்றி அஜித் ரசிகர் கலாய்ப்பது போன்ற காட்சிகள் மூலம் நம்மை சிரிக்க வைக்கும் இயக்குநர், ஹீரோ அடிக்கடி சிகரெட் புகைக்கும் காட்சியை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

 

நடிகர்களாகட்டும், அவர்களது ரசிகர்களாகட்டும் யாரையும் காயப்படுத்தாத விதத்தில் காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர் வெற்றி மகாலிங்கம், படத்தில் சின்ன மெசஜ் ஒன்றை சொல்லியிருந்தாலும், ”வாலிப வயசுல இப்படி தான் இருப்பாங்க, பிறகு கல்யாணம், குழந்தை என்று மாறிவிட்டால், அவங்களும் மாறிடுவாங்க”, என்று இளைஞர்களுக்கு சப்போர்ட் செய்திருப்பதோடு, படத்தை ஜாலியான மூடிலேயே நகர்த்திச் சென்றிருக்கிறார். 

 

அறிமுக நடிகர்கள், பட்ஜெட் உள்ளிட்டவைகளால் படத்தில் சில இடங்களில் சிறு சிறு குறைபாடுகள் இருந்தாலும், இயக்குநர் தான் சொல்ல வந்ததை போரடிக்காமல் சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், தல மற்றும் தளபதியின் படங்களை தனி தனியாக கொண்டாடும் அவர்களது ரசிகர்கள் சேர்ந்து கொண்டாடும் விதத்தில் தான் இந்த ‘விசிறி’ உள்ளது.

 

 

ஜெ.சுகுமார்