Sep 16, 2017 07:11 AM

‘யார் இவன்’ விமர்சனம்

f970fa92b54e9effa81eb08f6ff87dae.jpg

Casting : சச்சின் ஜோஷி, ஈஷா குப்தா, கிஷோர், பிரபு, சதீஷ்

Directed By : டி.சத்யா

Music By : தமன்

Produced By : ரைனா ஜோஷி

 

தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள டி.சத்யா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளதோடு, தெலுங்கு, இந்தி சினிமாவை தொடர்ந்து சச்சின் ஜோஷி தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘யார் இவன்’.

 

தனது காதல் மனைவியை திருமணமான மறுநாளே கொலை செய்துவிட்டதாக, கபடி விளையாட்டு வீரரான ஹீரோ சச்சின் ஜோஷியை போலீஸ் கைது செய்கிறது. ஆனால், அவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஹீரோயின் ஈஷா குப்தாவின் உடல் போலீசாருக்கு கிடைக்காததால், சச்சினை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட, அவர் சிறப்பு கோவா சிறைக்கு மாற்றப்படுகிறார்.

 

ரொம்ப கொடூரமான கைதிகள் இருக்கும் கோவா சிறையில், சச்சினை கொலை செய்ய சிறை உயர் அதிகாரியும், சில கைதிகளும் திட்டம் போட, கொலை வழக்கை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரியான கிஷோர், சச்சின் அவரது மனைவியை கொலை செய்திருக்க மாட்டார் என்று நம்புகிறார். அதே சமயம், சச்சின் நடந்த உண்மை என்ன? என்பதை யாரிடமும் சொல்லாமல், கொலை செய்தது நான் தான் என்று கூறிவர, கொலை செய்யப்பட்ட இடத்தில் பெண் ஒருவரது கை மட்டுமே கிடைக்கிறது. அதை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பும் கிஷோருக்கு அது ஈஷா குப்தாவின் கை அல்ல என்று தெரிய வருகிறது. இதையடுத்து அந்த கை குறித்து சச்சினிடம் அவர் விசாரிக்கையில் அது கேத்ரின் என்ற மற்றொரு பெண்னுடையது என்றும், அவரும் ஈஷா குப்தா போலவே இருப்பார் என்றும் தெரிய வருகிறது.

 

நாயகி கொலை செய்யப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கான பதிலே தெரியாமல் முழிக்கும் கிஷோருக்கு இரண்டாவது கொலை மற்றும் அவரும் ஈஷா குப்தா போலவே இருப்பார், என்ற விஷயம் ரொம்ப குழப்பத்தை ஏற்படுத்த, இறுதியில் கொலைக்கான காரணத்தையும், சச்சின் உண்மையாகவே கொலை செய்தாரா? என்பதையும் கிஷோர் கண்டுபிடித்தாரா இல்லையா? என்பது தான் ‘யார் இவன்’ படத்தின் கதை.

 

அறிமுக ஹீரோ சச்சின் ஆள் தான் கொஞ்சம் குள்ளமாக இருக்கிறாரே தவிர ஆக்‌ஷன் காட்சிகளில் சும்மா...துள்ளி துள்ளி விளையாடுகிறார். காதல் காட்சிகளில் சாக்லெட் பாயாக ஜொலிப்பவர், நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

 

நாயகி ஈஷா குப்தாவை காட்டிலும் அவரது தோழியாக வரும் தன்யா பாலகிருஷ்ணன் கூடுதலாக நடிச்சிருக்காங்க. சதீஷ் காமெடி என்ற பெயரில் கடி..கடி..என்று கடிக்கிறார்.

 

போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர் எப்போதும் போல தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார். ஹீரோயினின் அப்பாவாக நடித்துள்ள பிரபு எதிர்ப்பார்க்காத கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்.

 

தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகும், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பினேந்த்ரா மேனன், செட் என்பதே தெரியாத வகையில் கோவா சிறைச்சாலை காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, கபடி போட்டியோடு நடைபெறும் ஆக்‌ஷன் காட்சியையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

 

மனைவியை எதற்காக சச்சின் கொலை செய்தார்? என்ற கேள்வியோடு தொடங்கும் படம், பிறகு அவர் கொலை செய்திருக்க மாட்டார், என்ற யூகத்துடன், உண்மையான குற்றவாளி யார்? என்று மறுபடியும் ஒரு கேள்வியோடு நகர, இடையில் கபடி போட்டி அதில் உயிரிழந்த தம்பிக்காக ஹீரோவை பழி வாங்க துடிக்கும் சிறை அதிகாரி என்று படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

 

அதேபோல், படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காகவும், சஸ்பென்ஸை தொடர்ந்து மெயிண்டெண்ட் பண்ணுவதற்காகவும் இயக்குநர் அமைத்த கிளை கதைகளும், அக்கதைகளின் மூலம் ஏற்படும் திருப்புமுனைகளும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

 

அதே சமயம், சுவாரஸ்யம் மிகுந்த சஸ்பென்ஸ் திரில்லர் ஜானராக திரைக்கதையை அமைத்துள்ள இயக்குநர் சத்யா, படத்தின் ட்விஸ்ட்டுகளை காட்சிகள் மூலம் விவரிக்காமல், கதாபாத்திரங்களே கதை சொல்வது போலவும், திருப்புமுனைகளுக்கான விடைகளையும் அவர்களே சொல்வது போலவும், படத்தை முடித்திருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

மொத்தத்தில், பழைய கதையை திரைக்கதை மூலம் புதியதாக காட்ட முயற்சித்திருக்கும் இயக்குநர் ஒரு கட்டத்தில் அது முடியாமல் போக, மீண்டும் பழைய பாணியிலேயே க்ளைமாக்ஸை முடித்து சுபம் போடும் இந்த ‘யார் இவன்’ சுமாருக்கும் சுமார் படமாகவே உள்ளது.

 

ஜெ.சுகுமார்