‘ஆல் பாஸ்’ திரைப்பட விமர்சனம்

திருமணத்திற்குப் பிறகு சொந்த சகோதரர்கள் கூட ஒற்றுமையாக வாழ முடியாத இத்தகைய காலக்கட்டத்தில், வட சென்னை வாசிகளான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் சகோதர்களாக பழகுகிறார்கள். இவர்களைப் போல் இவர்களது குடும்பத்தாரும் ஒற்றுமையாக இருப்பதோடு, பிள்ளைகளும் ஜெயப்பிரகாஷை தங்களது பெரியப்பாவாக நினைத்து அவர் சொல்படி கேட்டு நடக்கிறார்கள்.

இந்த நிலையில், அப்பகுதி எம்.எல்.ஏ சரத் லோகித்ஷவா, தனது அரசியல் பணிக்காக பணத்தை பல இடங்களில் பதுக்கி வைக்கிறார். பழைய கிடங்கு ஒன்றில் அவர் பதுக்கி வைத்த ரூ.5 கோடியை மூன்று குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். இதை அறிந்த ஜெயப்பிரகாஷ், அவர்களை கண்டித்து பணத்தை எடுத்த இடத்திலேயே வைக்க சொல்கிறார். ஆனால், அவர் சொல்வதில் மூன்று குடும்பத்தாரும் விரும்பாததோடு, அனைத்து விசயங்களிலும் அவரது முடிவை ஏற்பவர்கள், இந்த பண விசயத்தில் அவரது பேச்சை உதாசினப்படுத்தி விடுகிறார்கள்.

பல கோடி ரூபாய் பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்வது, என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, மூன்று குடும்பத்தாரும் திட்டம் போட, மறுபக்கம் பணத்தை பறிகொடுத்த எம்.எல்.ஏ, தன் பணத்தையும், அதை எடுத்தவர்களையும் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதனால், குடும்பத்தார் திட்டமிட்டபடி பணத்தை செலவு செய்ய முடியாமல் தவிக்க, இறுதியில் எம்.எல்.ஏ பணத்தை கண்டுபிடித்தார ?, வறுமையில் வாடுபவர்கள் தங்களுக்கு கிடைத்த பணத்தை அனுபவித்தார்களா? என்பது தான் படத்தின் கதை.

வட சென்னை வாழ்வியலையும், அம்மக்களைப் பற்றியும் பேசும் கதையாக ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கும் படம், எம்.எல்.ஏ பதுக்கிய பணத்தை சிறுவர்கள் கைப்பற்றிய உடன் வேகம் எடுப்பதோடு, பார்வையாளர்களின் முழு கவனத்தையும் திரையின் பக்கம் ஈர்த்து விடுகிறது.

கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் எளிய மக்களை நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார்கள். இவர்களது மனைவிகளாக நடித்திருக்கும் செந்திகுமாரி, வினோதினி, மோகனா. ஆர் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இளம் ஜோடியாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் ஜனனி இருவரது காதல் மற்றும் அவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி கமர்ஷியலாக இருப்பதோடு, படத்திற்கு கைகொடுக்கவும் செய்திருக்கிறது.

மூன்று குடும்பத்தின் பிள்ளைகளாக நடித்திருக்கும் சிறுவர்கள் சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோர் வயதுக்கு ஏற்ப நடித்து திரைக்கதைக்கு சரியான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத் லோகித்ஷவா, கவுன்சிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அருவி மதன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறிய வேடம் என்றாலும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக பயணித்து பார்வையாளர்கள் கவனம் ஈர்க்கிறார்கள்.

செயற்கைத்தனம் மற்றும் மிகைப்படுத்துதல் அல்லாமல் வட சென்னை பகுதியையும், அம்மக்களையும் மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் தில்ராஜு, பாடல் காட்சிகளை கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி அழகியலோடு படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். காதல் பாடல் சூப்பர் ஹிட் ரகம். பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்பை அதிகரிகரித்திருப்பதோடு, காட்சிகளுக்கு உயிரூட்டும் விதமாக பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர், படத்தை தொய்வின்றி நகர்த்த பெரிதும் முயற்சித்திருந்தாலும், முதல் பாதி படத்தில் இருந்த சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதியில் தவற விட்டிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் மைதீன், அரசியல்வாதியின் கருப்பு பணத்தையும், எளியவர்களின் வாழ்வியலையும் வைத்து புதுவிதமான திரில்லர் கதையை சொல்லியிருப்பதோடு, அந்த பணத்தை கண்டுபிடிப்பதிலும், கையில் பணம் இருந்தும் அதை செலவு செய்ய முடியாமல் தவிப்பதையும் திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்லி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

இழந்த பணத்தை கண்டுபிடிக்க எம்.எல்.ஏ கையாளும் யுக்திகளும், அதனால் பணம் கையில் இருந்தும் செலவு பண்ண முடியாமல் தவிக்கும் குடும்பத்தார் மற்றும் அந்த பணத்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் பிளவு ஆகியவற்றை திரில்லராக மட்டும் இன்றி நல்ல அறிவுரையாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் மைதீன், பணம் எடுத்தவர்களை கண்டுபிடிக்க முடியாததற்கான காரணங்களையும் மிக லாஜிக்கோடு கையாண்டு, அடுத்து என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தி விடுகிறார்.

அதே சமயம், முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவதோடு கதையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதில் இயக்குநர் மைதீன் சற்று சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. இருந்தாலும், ஒரு நல்ல கதையை மிக நேர்மையாக கையாண்டிருப்பதோடு, அதை எந்தவிதமான லாஜிக் மீறல்கள் இல்லாமல் சொல்லி, ஒரு சுவாரஸ்யமான திரில்லர் மற்றும் குடும்ப படத்தை கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘ஆல் பாஸ்’ முதல் இடத்தை பெறும்.

ரேட்டிங் 3.6/5

all pass movie reviewall pass reviewtamil movie all pass reviewஆல் பாஸ் திரைப்பட விமர்சனம்ஆல் பாஸ் விமர்சனம்தமிழ்ப் படம் ஆல் பாஸ் விமர்சனம்
Comments (0)
Add Comment