’அன்பே டயானா’ திரைப்பட விமர்சனம்

சென்னை, பெரம்பூர் பகுதியில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகன், அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதலே காதலித்து வருகிறார். பாரியின் காதலை ஏற்க மறுக்கும் ரம்யா அவருடன் நட்பாக பழகி வருகிறார்.

ஒருதலைக் காதலோடு பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கும் பாரிக்கு ரம்யா சம்மதம் சொல்கிறார். ஆனால், ரம்யாவின் காதலை ஏற்பதில் திடீரென்று தயக்கம் காட்டும் பாரி, அவரிடம் இருந்து விலகிச்செல்ல முயற்சிக்கிறார். அது ஏன்?, அவரது காதல் என்னவானது ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘அன்பே டயானா’.

நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், பக்கத்து வீட்டு பையன் போல் எளிமையான தோற்றத்தோடும், இயல்பான நடிப்போடும் கவனம் ஈர்க்கிறார். பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்த காதல் கைகூடும் போது, பலவித குழப்பங்களால் அதை ஏற்க தயக்கம் காட்டுவது முதல் கண்டிப்பான அம்மாவுக்கு கட்டுப்பட்டு காதலை சொல்ல முடியாமல் தவிப்பது வரை, எந்தவித அலட்டல் இல்லாமல் அசால்டாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ இந்திய பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவதோடு, ஆங்கிலம் கலந்த சென்னை தமிழிழை அசத்தலாக உச்சரித்திருக்கிறார். தன்னிடம் இருந்து விலகிச்செல்ல முயற்சிக்கும் காதலனை மிரட்டுவது, காதலரின் தந்தையிடம் அதிரடியாக பேசுவது என்று தன் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ரம்யா ரங்கநாதன், தன் சிறப்பான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், இவ்வளவு நாளாக எங்கிருந்தார்? என்று கேட்கும் அளவுக்கு அசத்தலாக நடித்திருக்கிறார். காலையில் மனைவிக்கு பயந்த கணவர், மாலையில் அனைவருக்கும் பயம் காட்டும் குடும்ப தலைவர் என்ற சாதாரண கதாபாத்திரத்தை தன் சிறப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜா, தோற்றம், பேச்சு, நடிப்பு என அனைத்திலும் கம்பீரத்தை வெளிப்படுத்தி கவர்கிறார். கண்டிப்பான குடும்ப தலைவியாக இருந்தாலும், தன் மனதுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் காட்சியிலும், தன் தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சியிலும் தன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, பெங்களூர் தமிழர் வேடத்தில் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். மாங்கபாபு கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும் செல் முருகன், தன் பங்கிற்கும் சிரிக்க வைக்கிறார்.

நாயகனின் மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி, நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் நடிகர், நடிகை என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், திரைக்கதைக்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியை அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். பார்த்து பழக்கப்பட்ட இங்களாக இருந்தாலும், தன் கேமரா மூலம் அப்பகுதியின் அழகியலை அதிகரிக்கச் செய்திருக்கும் ஒளிப்பதிவாளஃர் ஷெல்லியின் பருந்து கோணக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் இயல்பு தன்மைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

கதாபாத்திரங்களும், அவர்களது வசனங்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதை உணர்த்து காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் பார்த்தா.எம்.ஏ, படத்தை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்.

கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பரிதி இளவழகன், சாதாரண காதல் கதை என்றாலும், இயல்பான திரைக்கதை மூலம் அன்லிமிடெட் பொழுதுபோக்கை வழங்கியிருக்கிறார்.

படத்தின் பலமே கதாபாத்திரங்களின் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அதில் இயல்பாக நடித்த நட்சத்திரங்கள் தான். நடிகர்களிடம் இருந்து சரியான முறையில் வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் பாரி இளவழகன், முதல் பாதியை ஊட்டி மலை ரயில் போல் மெதுவாகவும், மென்மையாகவும் நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியை வந்தே பாரத் ரயில் போல் வேகமாக நகர்த்தி செல்வதோடு, பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கவும் செய்கிறார்.

ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருந்தாலும், எளிமையான வசனங்கள் மூலம் சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாட்டை களைந்து மனிதர்களை அன்பால் ஒன்றிணைக்கும் மேஜிக்கை அனைவரும் ஏற்கும்படி நிகழ்த்தி இயக்குநர் பாரி இளவழகன் கைதட்டல் பெறுகிறார்.

மொத்தத்தில், ‘அன்பே டயானா’ அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த படம்.

ரேட்டிங் 4/5

anbe diana movie reviewanbe diana reviewtamil movie anbe diana reviewஅன்பே டயானா திரைப்பட விமர்சனம்அன்பே டயானா முதல் விமர்சனம்அன்பே டயானா விமர்சனம்தமிழ்ப் படம் அன்பே டயான விமர்சனம்
Comments (0)
Add Comment