‘பிரணய விலாசம்’ பட புகழ் நிகில் முரளி இயக்கத்தில், ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹலோ காதல்’. கடந்த ஆண்டு ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தைப் பற்றிய அறிவிப்பைத் தயாரிப்புக் குழுவினர் வெளியிட்டனர். அப்போது, “காதல் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது” என்ற சுவாரஸ்யமான வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தனர். அன்றிலிருந்து, ஆர்யாவை ஒரு புதிய காதல் கதாபாத்திரத்தில் காண ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘பிரணய விலாசம்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய எழுத்தாளர்களான சுனு ஏ.வி. மற்றும் ஜோதிஷ் எம். ஆகியோருடன் இயக்குநர் நிகில் முரளி மீண்டும் இணைந்துள்ளார். மேலும், இயக்குநர் ஹலிதா ஷமீம் எழுத்துக் குழுவில் இணைந்து, வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைப் பணிகளைக் கவனித்துள்ளார். அவரது பங்களிப்பு, இப்படத்தின் படைப்புக் கூட்டணிக்கு மேலும் ஒரு சுவாரஸ்யமான பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பினு நெப்போலியன் படத்தொகுப்பு செய்ய, ஏ.ஆர்.மோகன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.
தி ஷோ பீப்பிள் (The Show People) சார்பில் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆர்யாவின் 40 வது படமான ‘ஹலோ காதல்’ டீசருடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.