‘பிளாக் கோல்டு’ (Black Gold) திரைப்பட விமர்சனம்

கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் தலைமை பழுது பார்ப்பவராக பணியாற்றும் நாயகன் வெற்றி தந்தை, தாய், தங்கையுடன் அமைதியாக வாழ்ந்து வருவதோடு, தனது கல்லூரி தோழி நாயகி பிரியலயாவை காதலித்தும் வருகிறார்.

இதற்கிடையே, லாரி ஓட்டுநரான வெற்றியின் தந்தை லிவிங்ஸ்டன் ரூ.5 கோடி சரக்குடன் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருக்கும் போது, வழியில் திடீரென்று மாயமாகி விடுகிறார். லாரியுடன் ரூ.5 கோடி சரக்கை இழந்த முதலாளி லிவிங்ஸ்டன் மீது சந்தேகப்படுகிறார். காணாமல் போன தந்தையை நினைத்து கலங்கும் வெற்றி, அவர் மீது விழுந்த திருட்டு பழியை போக்க நினைக்கிறார்.

காவல்துறை அதிகாரி அபிராமி வெங்கடாச்சலம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தாலும், தன் தந்தையை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றிக்கு, கருப்பு தங்கம் பற்றிய பல அதிர்ச்சிகரமான மற்றும் ஆச்சரியமான உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ?, அதற்கும் அவரது தந்தை மாயமானதற்கும் என்ன சம்மந்தம் ?, என்பதை கிரைம் மற்றும் ஆக்‌ஷன் திரில்லராக சொல்வதே ‘பிளாக் கோல்டு’.

கச்சா எண்ணெயை கருப்பு தங்கம் என்று அழைப்பார்கள். ஆனால், நம் தலைமுடியும் தங்கத்திற்கு இணையான மதிப்புமிக்க ஒன்று, அதற்கு உலகளவில் பல கோடி வியாபாரம் உள்ளது என்பதை விவரிப்பதோடு, அதன் பின்னணியில் இருக்கும் தொழில் மற்றும் அதனால் ஏற்படும் போட்டிகளின் பின்னணி உண்மைகளை, கற்பனையுடன் சேர்த்து சினிமா பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.

இறுக்கமான முகத்துடன் அதே சமயம் தான் எடுத்துக் கொண்ட பணியில் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பயணிக்கும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கும் வெற்றி, காதல் காட்சிகளில் வழக்கம் போல் சற்று தடுமாறியிருக்கிறார். ஆனால், காதல் காட்சிகளை விட, தந்தைக்காக கலங்குவதும், அவரை தேடுவதில் காட்டும் தீவிரமும் அதிகம் என்பதால் வெற்றி அவரது பணியை மிக சிறப்பாக செய்து படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியலயாவுக்கு குறைவான காட்சிகள் என்றாலும், இன்னும் கூட அவரது காட்சிகளை அதிகரித்திருக்கலாம் என்று ஏங்க வைக்கும் அளவுக்கு அழகாக வந்து போகிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அபிராமி வெங்காடச்சலம், காக்கி உடைக்கான கம்பீரத்துடன் வலம் வருகிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் துளசி, அனுபவம் வாய்ந்த நடிப்பால் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நைனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள் டி.சங்கர், தங்கம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன முதலாளியாக நடித்திருக்கும் ஏ. வெங்கடேஷ், நைனா மகளாக நடித்திருக்கும் சபிதா ராய், ராமர், கராத்தே வெங்கடேஷ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமி, கிரைம் மற்றும் ஆக்‌ஷன் திரில்லர் பாணிக்கு ஏற்றவாறு காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணிக்கும் ஒவ்வொரு வண்ணங்கள் மற்றும் ஒளிகளை பயன்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார்.

கவாஸ்கர் அவினாஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருக்கின்றன. திரைக்கதையின் விறுவிறுப்பையும், காட்சிகளின் வேகத்தையும் அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கும் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது.

நான் லீனர் முறையில் காட்சிகளை தொகுத்து, பார்வையாளர்களை படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் இழுத்து விடும் படத்தொகுப்பாளர் தினேஷ் குமார், படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் தீரன் அருண்குமார், உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு மிக சுவாரஸ்யமான கிரைம் மற்றும் ஆக்‌ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

தங்கத்திற்கு இணையான மவுசு கொண்ட தலைமுடி பற்றி திரையில் சொல்லப்படாத பல தகவல்களை சினிமா பாணியில் மிக சிறப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் தீரன் அருண்குமார், சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் இரண்டு மணி நேரம் பார்வையாளர்கள் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுகிறார்.

மொத்தத்தில், ‘கருப்பு தங்கம்’ பார்வையாளர்கள் மனதை தாக்கும்.

ரேட்டிங் 3.5/5

black gold movie reviewblack gold reviewtamil movie black gold reviewதமிழ்ப் படம் பிளாக் கோல்டுபிளாக் கோல்டு திரைப்பட விமர்சனம்பிளாக் கோல்டு விமர்சனம்
Comments (0)
Add Comment