குற்றவாளிகள் திருந்த பல வாய்ப்புகள் கொடுக்கலாம்! – ‘ல‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ பட இயக்குநரின் வாதம் சரியா ?

கன்னட சினிமாவில் சுமார் 20 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கும் தயாள் பத்மநாபன் கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார். சரியான திட்டமிடல், குறுகிய நாட்களில் படப்பிடிப்பு, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம் ஆகியவற்றின் மூலம் இவர் இயக்கும் படங்கள் வியாபா ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தொடர்ந்து வரவேற்பு பெற்று வரும் நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ‘கொன்றால் பாவம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தை இயக்கி தயாரித்தவர் தற்போது ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ என்ற தனது மூன்றாவது தமிழ்ப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் ஒன்றான லஷ்மிகாந்தன் கொலை வழக்கு என்ற தலைப்பே இப்பட்த்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் பற்றிய மேலும் சில தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் தயாள் பத்மநாபன், படத்தில் இடம்பெறும் வாதத்தில் தன்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கப்படுவது என்ன ? என்ற விபரத்தை தெரிவித்தது, நிச்சயம் மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்புவதோடு, பல விவாதங்களுக்கும் வழிவகுக்கும் என்பது உறுதி.

டிரைலரை பார்க்கும் போது, கதையின் நாயகன் வெற்றி திருடனாக இருந்து பிறகு ஒரு கொலை குற்றத்தில் சிக்கி மரணதண்டனை பெறுகிறார். அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சரியானது இல்லை, என்ற ரீதியில் ஒரு பார்வையும், இந்திய சட்டம் அனைவருக்கும் பொதுவானது, குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும், என்ற ரீதியில் ஒரு பார்வையும், என இரு வெவ்வேறு பார்வைகளுடன் திரைக்கதையை அனுகியிருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், தன்னுடைய பார்வையாகவும், வாதமாகவும் நிகழ்ச்சியில் பேசியது என்னவென்றால், ”ஒரு குற்றவாளி திருந்த எத்தனை முறை வேண்டுமானாலும் வாய்ப்பு கொடுக்கலாம்” என்பது தான்.

இயக்குநர் தயாள் பத்மநாபனின் இத்தகைய வாதம் அல்லது கருத்து, “ஒருவர் எத்தனை முறை குற்றம் செய்தாலும் மன்னிக்க வேண்டும்” என்று கூறிய இயேசு கிறிஸ்துவை நினைவுப்படுத்தினாலும், இது சாத்தியமா ? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது.

அதாவது ஒருவர் திருடிவிட்டால் அவர் பசிக்காகவோ அல்லது வருமைக்காகவோ திருடினார், என்று அவரை மன்னிக்கலாம், மற்றொரு முறை அதை செய்தாலும் கூட மன்னித்து விடலாம். கொலை குற்றவாளிகளை கூட, ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்தது என்று கருதி மன்னிக்கலாம். ஆனால், கற்பழிப்பு, ஆணவக் கொலைகள் போன்ற திட்டமிட்டு, கொடூர மனப்பான்மையுடன் நிகழ்த்தும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை இத்தகைய வழியில் மன்னிக்க முடியுமா ? அல்லது அவர்களுக்கு பலமுறை திருந்த வாய்ப்பு அளித்தால், அவர்கள் அத்தகைய குற்றங்களை தொடர்ந்து செய்ய வழிவகுத்தது போல் ஆகாதா?

இயக்குநர் தயாள் பத்மநாபன் குற்றவாளியின் பக்கம் இருந்து பேசினாலும், அவரது எதிர்தரப்பு வாதமாக சிறைச்சாலை அதிகாரியின் பார்வையை வைத்திருக்கிறார். அது என்ன ?, அவரது வாதம் எப்படி இருக்கிறது ? என்பது படம் வெளியானால் தான் தெரியும், என்பதால் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் வெளியான பிறகு தமிழ் திரையுலகில் மட்டும் அல்ல, சட்டத்துறையிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

2எம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் வெற்றி, பிரிகிடா சகா, கவிதா பாரதி, ரங்கராஜ் பாண்டே, சுப.வீரபாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். தயாள் பத்மநாபன் மற்றும் கவிதா பாரதி இணைந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். பூபதி வேதகிரி படத்தொகுப்பு செய்துள்ளார்.

தயாள் பத்மநாபன் கதை எழுதி இயக்கி, தனது டி பிக்சர்ஸ் மூலம் இணை தயாரிப்பு செய்துள்ள ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

lakshmigandhan kolai vazhakkutamil movie lakshmigandhan kolai vazhakkuதமிழ்ப் படம் லஷ்மிகாந்தன் கொலை வழக்கு இசை வெளியீட்டு விழாலஷ்மிகாந்தன் கொலை வழக்கு
Comments (0)
Add Comment