’டோரதி’ எனக்கு ரொம்ப பர்சனலான படம்! – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இளையராஜா முதல் முறையாக கைகோர்த்துள்ள ‘டோரதி’ படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. “கல்யாண விருந்து…” மற்றும் “முத்துமணி..” ஆகிய இரண்டு பாடல்களும் அனைத்து சமூக வலைதளங்களில் மட்டும் இன்றி குடும்ப நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் பாடல்களாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்திராத புதிய முயற்சியாக, ‘டோரதி’ படத்தின் பின்னணி இசை தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இளையராஜா கூட்டணி வெளியிட உள்ளனர். இதற்காக வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு, அதில் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை (OST) வெளியிடுகிறார்கள்.

இது குறித்த தகவல் மற்றும் படம் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “’டோரதி’ என்னுடைய 10 வது படமாக இருந்தாலும், ‘பீட்சா’ படத்தின் போது பத்திரிகையாளர்கள் முன்பு எப்படி அமர்ந்தேனோ அதே நிலையில் தான் இப்போதும் இருக்கிறேன். காரணம், இந்த படம் எனக்கு ரொம்பவே பர்சனலான படம், இந்த திரைக்கதை எனக்கு ரொம்ப பர்சனல். இந்த கதையை படமாக பண்ண வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பாவே முடிவு செய்து விட்டேன். இதற்கான கதை எழுதிவிட்டு, சரவணன் சந்திரன் என்ற எழுத்தாளரிடம் கொடுத்து கூடுதல் கதை எழுத சொன்னேன். பிறகு நானே 6 முதல் 7 வடிவிலான திரைக்கதை எழுதினேன். அதேபோல், இதில் புது முகங்களை தான் ஹீரோக்களாக நடிக்க வைக்க வேண்டும், என்றும் முடிவு செய்தேன்.

மதுரை சார்ந்த கதை, மதுரையில் நான் வாழ்ந்த வாழ்வியல், நான் பார்த்த மனிதர்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை இது. சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் இரண்டு இளைஞர்கள், அவர்கள் வாழ்க்கையில் வரும் ஒரு பெண், அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது?, என்ற ரீதியில் தான் கதை இருக்கும். இப்போதைக்கு படத்தை பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும்.

இந்த படத்தை எப்போதே செய்திருக்க வேண்டியது. கதை முடிவானதும் படம் தொடங்கும் நேரத்தில், ’மகான்’ பண்ண வேண்டி இருந்தது, அதற்காக தள்ளி வைத்து விட்டேன். அந்த படம் முடிந்த பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ அதன் பிறகு சூர்யா சாரை சந்தித்து ‘ரெட்ரோ’ தொடங்க வேண்டி இருந்தது. இப்படியே இந்த படம் பண்ண முடியாமல் போன நிலையில், இப்போது பண்ணவில்லை என்றால் எப்போதும் பண்ண முடியாமல் போய் விடும் என்று புரிந்து விட்டது. அதனால் தான், உடனே தொடங்கி விட வேண்டும் என்று படத்தை ஆரம்பித்து விட்டேன்.

இந்த படத்தை சர்வதேச ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முன்பே முடிவு செய்தேன், அதனால் தான் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பினோம், அங்கு உலக பிரீமியர் திரையிடலுக்கு படம் தேர்வாகியுள்ளது. திரைப்பட விழாவில் பங்கேற்பதால் இது திரைப்பட விழாவுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். நம்ம மக்களுக்கு ஏற்ற, அனைத்து அம்சங்களும், திரையரங்க கொண்டாட்டங்கள், பாடல்கள் நிறைந்த படமாக இருக்கும். அதே சமயம், நம்ம கலாச்சாரம், நம்ம வாழ்வியலை உலகளவில் எடுத்துச் செல்லும் ஒரு படமாக இருக்கும். அதற்காக தான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்தோம். செப்டம்பர் 11 ஆம் தேதி டொரொண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் புதுமுகங்கள் அல்லது வளர்ந்து வரும் நடிகர்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம். இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றில் சனத் நடிப்பது, நான் கதை எழுதி முடித்த உடனே முடிவாகி விட்டது. அதற்காக அவரை தயாராக இருக்க சொன்னேன், அவரும் தயாராக இருந்தார். ஆனால், மற்றொரு கதாபாத்திரத்திற்கு நடிகர் தேர்வு செய்யப்படாமல் இருந்ததால் புதுமுகத்தை தேர்வு செய்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக பலரை ஆடிசன் செய்த போது ரிஷிகாந்த் ஆடிசனுக்கு வந்தார், அவரது ஆடிசனை பார்த்து அனைவரும் நன்றாக இருப்பதாக சொன்னார்கள், அப்படி தான் அவர் மற்றொரு கதாபாத்திரத்திற்கு தேர்வானர். இப்போது இவர்கள் இரண்டு பேரின் நடிப்பையும் பார்த்தால், இந்த கதாபாத்திரங்களுக்கு இவர்களை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள், என்று தோன்றுகிறது.

படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கிறது, இது ராஜா சாரின் மேஜிக். இந்த கதைக்கு அவர் தான் இசையமைக்க வேண்டும் என்று நான் முன்பே முடிவு செய்தேன், ஆனால் அவரிடம் கேட்க தயக்கமாக இருந்தது. என்னுடைய முந்தைய படங்களுக்கும் அவருடன் பணியாற்ற விரும்பினேன், ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தால் அவரை சந்திக்கவில்லை. ஆனால், இந்த கதையை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பும் போதே இசை ராஜா சார் தான் என்று போட்டு அனுப்புவேன். இருந்தாலும், படப்பிடிப்பை விரைவாக முடிக்க வேண்டும் என்பதால், இசையமைப்பாளர் பற்றி யோசிக்காமல் படப்பிடிப்புக்கு சென்று விட்டேன். படத்தை முடித்துப் பார்த்த பிறகு, இதை ராஜா சாரிடம் காட்ட வேண்டும், என்று முடிவு செய்தேன். அதன்படி அவரை சந்தித்து படத்தை காட்டினேன், அவர் பார்த்த உடன் மறுநாளே பணியை தொடங்கி விடலாம், என்றார். அப்படி தான் ராஜா சாருடன் என் பயணம் தொடங்கியது. அவருடன் இணைந்து பணியாற்றியது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கலையை அவரைப் போல் யாராலும் நேசிக்க முடியாது. பேஷன் என்ற வார்த்தைக்கு சரியான நபர் அவர் தான்.” என்றார்.

படத்தில் நடித்தது குறித்து ரிஷிகாந்த் கூறுகையில், “கார்த்திக் சுப்புராஜ் அண்ணன் படத்தில் நடித்தது கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது போல் இருக்கிறது. அதிலும், ராஜா சார் இசை, அவரது பாடலுக்கு நடித்தது, என்ன நடக்கிறது, என்று யோசிக்கும் அளவுக்கு இருக்கிறது.” என்றார்.

நடிகர் சனத் தன் அனுபவம் பற்றி கூறுகையில், “எனக்கு, ரிஷிகாந்த் மற்றும் கார்த்திக் அண்ணன் மூன்று பேருக்கும் இந்த படம் மிக முக்கியமான படம். எனவே, படம் வெளியான பிறகு படம் பற்றி பேசினால் நன்றாக இருக்கும், என்று நினைக்கிறேன்.” என்றார்.

ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியிடுவது குறித்து மேலும் கூறிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “இளையராஜா சார் படம் பார்த்து முடித்த உடனே, இந்த படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் அதாவது பின்னணி இசை தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே வெளியிடலாம். பாடல்கள் வெளியீட்டை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள், ஆனால் சவுண்ட் ட்ராக்கை நேரடியாக வெளியிடலாம், என்று கூறினார். அப்படியானால் வினைல்லையும் வெளியிடலாம் என்று நான் கேட்டுக்கொண்டேன். அப்படி தான் இந்த ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீட்டு ஐடியா உருவானது.

மொத்தம் 40 நிமிடங்கள் ஒலிக்க கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும். சிம்பொனி போல் படத்தின் பின்னணி இசையை ராஜா சார் நேரடியாக இசைக்க இருக்கிறார். இது ஒரு படத்தின் நிகழ்ச்சியாக பார்க்காமல், ராஜா சாரின் இசையை அனுபவிக்கும், அதில் பயணிக்கும் ரசிகர்களாக அனைவரும் பங்கேற்க வேண்டும், என்பது தான் என்னுடைய விருப்பம்.” என்றார்.

மேலும், டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் படம் பங்கேற்பது குறித்து பேசியவர், “கதை எழுதி முடித்த உடனேயே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட வேண்டும் என்று முடிவு செய்தேன். பிக் 5 என்று சொல்வார்கள், உலகளவில் 5 மிக முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்கள் இருக்கிறது. அதில் ஒன்றில் நம்முடைய படம் திரையிட வேண்டும், என்று நினைத்தேன். இது எனக்கு முதல் அனுபவம் தான், என்னுடைய படங்கள் வெளியீட்டுக்கு முன்பாக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டதில்லை. ஆனால், படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இதில் நிறைய அனுபவம் இருக்கிறது, அவர்கள் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கிறார்கள். அவர்களது முயற்சியின் மூலம் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கு படத்தை அனுப்பி வைத்தோம். அவர்கள் படத்தை பார்த்ததும், உலக பிரீமியரில் திரையிட தேர்வு செய்து விட்டார்கள்.” என்றார்.

ஷிக்யா எண்டர்டெயின்மெண்ட், தம்மம் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் குனித் மோங்கா கபூர், அச்சின் ஜெயின், ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன் எழுத, கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார்.

வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் ‘டோரதி’ செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

dorothyilayarajakarthik subburajrishikanthsanathtamil movie dorothyஇளையராஜாகார்த்திக் சுப்புராஜ்சனத்டோரதிதமிழ்ப் படம் டோரதிரிஷிகாந்த்
Comments (0)
Add Comment