‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்பட விமர்சனம

இறப்பு என்பதே இல்லாத ஒரு மனிதராக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிவின் பாலி, 8 ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்தாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன் காதலியை தேடும் பயணத்தை தொடர்கிறார். அத்தகைய ஒரு பயணத்தின் போது அவரை சூரி சந்திக்க நேரிடுகிறது. இருவருக்குமான சந்திப்பில் காதல் என்ற பேரன்பு பற்றியும், உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் ஒன்று தான், என்ற கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்வதோடு, அதை இயற்கையின் பின்னணியோடு சொல்லி பார்வையாளர்களுக்கு புதுவிதமான சினிமா உணர்வை கொடுப்பது தான் ‘ஏழு கடல் ஏழு மலை’.

இறப்பு இல்லாத மனிதராக நீண்ட முடியுடன் நடித்திருக்கும் நிவின் பாலி, அனைத்து காலக்கட்டங்களிலும் ஒரே மாதிரியாக தான் வருகிறார். ஆரம்பத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசினாலும், மிக முக்கியமான வசனங்களை இயக்குநர் ராம் குரலில் பேசியிருக்கும் நிவின் பாலி, தனது நீண்ட பயணத்தின் அனுபவத்தையும், அதில் சந்தித்த காதலையும் தன் நடிப்பின் மூலம் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.

நிவின் பாலியிடம் சிக்கிக்கொண்டு போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி, தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் வாழும் சராசரி மனிதரை தன் நடிப்பால் நேர்த்தியாக பிரதிபலித்திருப்பதோடு, பயம், பதட்டத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ஒரு சில காட்சிகளில் வந்தாலும், தேவையாக பார்வையாளர்கள் கண்களில் தங்கி விடுகிறார்.

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ரயில் பயணத்தையும், அந்த பயணத்தின் மூலம் இயக்குநர் திரையில் காட்ட நினைத்த உலகத்தையும் காட்சி வாயிலாக பார்வையாளர்கள் கண் முன் நிறுத்தியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அதிலும் “ஏழுஏழு கடல் தாண்டி” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மெருகேற்றியிருக்கிறது.

இயக்குநர் ராமின் பார்வையையும் அவரது எண்ணத்தையும் காட்சிகளாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் மதி.வி.எஸ், வித்தியாசமான உலகத்தை படம் பார்ப்பவர்களையும் உணர வைத்திருக்கிறார்.

இயக்குநர் ராம், தான் பார்க்கும் உலகத்தை காட்சி மொழியில் திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவரது கதையும், அதை காட்சிப்படுத்திய விதமும் புதியதாகவும், புரியாத புதிராக இருந்தாலும், அதன் மூலம் உகிற்கு அவர் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான், பேரன்பு மட்டுமே. இந்த படமும் அதே பேரன்பை பற்றி தான் மிக அழுத்தமாக பேசியிருக்கிறது.

இவ்வுலகில் அனைத்திற்கும் மூலக்காரணம் காதல் மட்டுமே, ஆனால் அந்த காதல் அனைவருக்கும் கைக்கூடுவதில்லை. பரவாயில்லை, எத்தனை ஜென்மங்களாயினும் காதலியை தேடும் கனவுலகில் இயற்கையோடு பயணிப்போம், என்ற கற்பனை உலகில் வாழ்பவர்களுக்கு ‘ஏழு கடல் ஏழு மலை’- யை தாண்டுவது சாத்தியமே.

மொத்தத்தில், ‘ஏழு கடல் ஏழு மலை’ புதிய பார்வை.

ரேட்டிங் 3.8/5

ezhu kadal ezhu malai movie reviewezhu kadal ezhu malai reviewtamil movie ezhu kadal ezhu malai reviewஏழு கடல் ஏழு மலை திரைப்பட விமர்சனம்ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்தமிழ்ப் படம் ஏழு கடல் ஏழு மலை
Comments (0)
Add Comment