‘ஹலோ காதல்’ பார்வையாளர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் படமாக இருக்கும் – ஆர்யா நம்பிக்கை

நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹலோ காதல்’. காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகள் நிறைந்த ஃபீல் குட் (Feel Good) திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் காதல் உணர்வுகளையும், உறவுகளின் அழகையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், சுனில் கார்த்திக், விஜே பப்பு, முத்தமிழ், வினோதினி, நிகிலா விமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,“‘ஹலோ காதல்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. இப்படத்தில் நடித்து தயாரித்திருக்கும் ஜாமுடன் இணைந்து எனது திரைப் பயணத்தைத் தொடங்கினேன். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’ எனத் தொடர்ந்து இருவரும் இணைந்து பல முக்கியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளோம். மலையாளத்தில் வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் நிகில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ‘ராஜா ராணி’ படத்தைப் போலவே இனிமையான காதல் கதையைக் கொண்டுள்ளது. ஆர்யா, நிகிலா, வைஷ்ணவி ஆகிய மூவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்தில் ஆர்.ஜே. பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘கண்ணும் கண்ணும்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதற்கான பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஹலோ காதல்’ திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இப்படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

கராத்தே கார்த்தி பேசுகையில், “இந்தப் படம் எனக்கு மூன்று விதங்களில் சிறப்பானது. முதலாவதாக, கிராமத்துப் பின்னணியில் தென்காசி பேச்சு வழக்கில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் நிகில் முரளி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. இரண்டாவதாக, ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இயக்கத்தில் ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் இணைந்து முதன்முறையாக ஸ்டண்ட் காட்சியில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. மூன்றாவதாக, ஷெரிஃப் மாஸ்டர் என்னை நடனமாட வைத்துள்ளார். கதாநாயகன் ஆர்யா சார் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார். பல ஆலோசனைகளையும் டிப்ஸ்களையும் வழங்கி வருகிறார். அவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

யுவராஜ் கணேஷ் பேசுகையில், “என் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் நிகில் ப்ரோவுக்கு நன்றி. சிறு வயதிலிருந்தே ‘பட்டியல்’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘நான் கடவுள்’ போன்ற படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இன்று ஆர்யா சாருடன் இணைந்து நடிப்பது எனது நடிப்புப் பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். நிகிலா மேமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், வைஷ்ணவி மேமுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

சுனில் கார்த்திக் பேசுகையில், “இது எனது முதல் மேடை அனுபவம். இப்படத்தில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நிகில் சார், ஆர்யா சார், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

விஜே பப்பு பேசுகையில் ,“இன்று மேடையில் பேச அழைக்கப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் எனது அப்பாவுடன் ஜாக்கிங் செல்லும்போது ஆர்யா சாரையும் ஜாக்கிங் மற்றும் சைக்கிளிங் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட இடத்திலிருந்து இன்று ஆர்யா சாரின் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதை முதலில் வீட்டில் சொன்னபோது அப்பா கிண்டலாகப் பேசினார். வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் ஒரு விஷயம் என்றாவது ஒருநாள் நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அனைவருக்கும் நன்றி. படத்தை அனைவரும் பாருங்கள்” என்றார்.

முத்தமிழ் பேசுகையில், “‘குடும்பஸ்தன்’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். சிவா மற்றும் சிவபிரகாஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் நிகில் சாரைச் சந்தித்து இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏற்கெனவே ஜீவா சாருடன் நடித்திருந்தாலும், ஆர்யா சாருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆர்யா சாரும் நிகிலா மேமும் மிகவும் நட்பாகவும் கலகலப்பாகவும் பழகினார்கள். அதனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடிக்க முடிந்தது. படப்பிடிப்பின்போது ‘குடும்பஸ்தன்’ படம் குறித்தும் ஆர்யா சாரிடம் பேசினேன். ‘சர்வம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் பார்த்தது போலவே இப்போதும் ஆர்யா சார் இருக்கிறார். அவருடைய அறிவுரையால் எனது உடல் எடையையும் குறைத்தேன். நிகிலா மேம், நிகில் முரளி சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகை வினோதினி பேசுகையில், “இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்யா சாரின் படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நிறைய பிரார்த்தனை செய்திருக்கிறேன். எனது இரண்டு குழந்தைகளுக்கும் ஆர்யா சாரை மிகவும் பிடிக்கும். படப்பிடிப்புத் தளத்தில் இதுபற்றிக் கூறியவுடன், ஆர்யா சார் உடனடியாக வீடியோ கால் மூலம் எனது குழந்தைகளிடம் அன்பாகப் பேசினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய காலகட்டத்திலும் மிகவும் எளிமையாகப் பழகும் ஆர்யா சாரின் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றி” என்றார்.

கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன் பேசுகையில், “சந்தானம் சார் படங்களில் தொடர்ச்சியாகப் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஆர்யா சாரைச் சந்தித்தபோது, என்னைப் பார்த்து ரைட்டர் பொன் பார்த்திபன் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். இது ஓர் அற்புதமான காதல் கதை என்பதால், அதற்கேற்ப அழகான செட்கள், லொகேஷன்கள் மற்றும் இன்டீரியர்களை உருவாக்கியுள்ளோம். கிஷோர் சார் மற்றும் மதன் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தனர். ஜீவா சார் ஒவ்வொரு காட்சியையும், பாடல்களையும், புகைப்படங்களையும் மிக அழகாகப் படமாக்கியுள்ளார். இயக்குநர் நிகில் சாரின் திரைக்கதை, சிவா மற்றும் ஆர்ட் குழுவினரின் திட்டமிட்ட உழைப்பு, நடன இயக்குநரின் சிறப்பான பணி என அனைத்தும் படத்திற்கு வலுசேர்த்துள்ளன. சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்கும் சுவாரசியமான காதல் படமாக இது இருக்கும். அனைவருக்கும் நன்றி” என்றார்.

சண்டை இயக்குநர் சில்வா பேசுகையில்,“இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இருந்தாலும், ஆர்யா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு ஒரு சண்டைக் காட்சியில் பணியாற்ற வாய்ப்பளித்த நிகில் சாருக்கு நன்றி. பல நடிகர்கள் வெற்றிக்குப் பிறகு தங்களது உடலைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் ஆர்யா சார் விளையாட்டுப் பிள்ளை போலத் தெரிந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உடலைச் செதுக்கி வருகிறார். அவருடைய நட்பு வட்டாரமும் சிறப்பானது. ஜீவா சங்கர், மோகன் சார், நிகில் சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் தயாரிப்பு, நடிப்பு, இசையமைப்பு என மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் நௌஷத் அகமது பேசுகையில், “ஆர்யா சாருடன் ‘வேட்டுவம்’ படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. தொடர்ந்து ‘சார்பட்டா 2’ வரை எங்களது பயணம் தொடர்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆர்யா சாருக்கு நன்றி. இப்படத்தில் இவ்வளவு தூரம் பயணிக்க உறுதுணையாக இருந்த நிகில் ப்ரோவுக்கும், எனது குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

படத்தொகுப்பாளர் பினு நெப்போலியன் பேசுகையில், “இது எனது முதல் தமிழ்த் திரைப்படம். எனக்கு இது ஒரு கனவு நனவான தருணம். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நிகில், ஏ.ஜே.எஸ்.ஆர். கிஷோர் சார் மற்றும் மதன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடன இயக்குநர் எம். ஷெரிஃப் பேசுகையில், “ஆர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தில் ‘கண்ணும் கண்ணும்’ உள்ளிட்ட மூன்று பாடல்களுக்கு நடன அமைப்பு செய்துள்ளேன். ஜீவா சங்கர் சார் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகப் படமாக்கியுள்ளார். அறிமுகப் பாடலைப் பிரம்மாண்டமாக உருவாக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. இயக்குநர் நிகில், ஜி.வி. பிரகாஷ் சார், செல்வா மாஸ்டர், அருண், மதன், கிஷோர் சார், நிகிலா, ஷாம் சார், சதீஷ் சார் மற்றும் அபிஷேக் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாண்டிச்சேரியில் படமாக்கிய அனுபவம் எனக்குப் புதுமையாக இருந்தது” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் பேசுகையில் , “இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நேர்மறையான ஃபீல் குட் திரைப்படம் ஜாம் மூலமாகக் கிடைத்துள்ளது. ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் போது ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது. இப்படத்தின் மூலம் ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு ஜி.வி. பிரகாஷ் சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. கதையையும் காட்சிகளின் விவரங்களையும் மிகத் தெளிவாக வழங்கிய இயக்குநர் நிகில், தயாரிப்பாளர்கள் கிஷோர் மற்றும் ஜாம் ஆகியோரின் முழு ஒத்துழைப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவை சிறப்பாக இருந்தன. நடன இயக்குநர் ஷெரிஃப், எடிட்டர் பினு, செல்வா மாஸ்டர், நௌஷத், கலை இயக்குநர் மோகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. பாண்டிச்சேரியில் புதிதாக உருவாக்கப்பட்ட லொகேஷன்களில் படமாக்கிய அனுபவம் தனித்துவமானது. பாடல்களும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகர் சதீஷ் பேசுகையில், “ஆர்யா என்னை மிகவும் நேசிக்கும் ஒரு சிறந்த மனிதர். யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக நிற்பவர். என்னை ‘கஜினிகாந்த்’ படத்தில் நடிக்க வைத்ததோடு, ஆர்யாவின் திருமண விஷயத்திலும் நான் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் காலத்திலிருந்து எங்களது நட்பு தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ், நிகிலா, வினோதினி மேடம் மற்றும் மாஸ்டர் ஆகியோரின் திறமைகளைப் பாராட்டுகிறேன். எனது கடினமான காலகட்டத்தில் ஜி.வி. பிரகாஷ் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ‘ஹலோ காதல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

தினேஷ் குமார் பேசுகையில், “மலேசியாவிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைச் சிறப்பாக அழைத்து அறிமுகப்படுத்திய ஆர்யாவுக்கு நன்றி. சிறுவயதிலிருந்தே ஆர்யாவின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவரை மிகப்பெரிய உத்வேகமாகக் கருதுகிறேன். மலேசியாவில் வெளியான ‘மிஸ்டேக்ஸ்’ திரைப்படம் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து மேற்கொண்ட விளம்பரப் பணிகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆர்யா மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். ‘டெனிஸ்’ நம்பிக்கை வைத்து வாங்கிய படத்திற்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் பணியாற்றிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படத்தின் விளம்பரத்திற்காக எனது மனைவி விமலா பெருமாளுடன் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன். படத்தின் வெற்றிக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

ஷாம் பேசுகையில் , “‘ஹலோ காதல்’ திரைப்படம் மிகவும் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கிறது. திருமணமானவர்கள் மற்றும் காதலர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். ஜீவா சங்கர், நடன இயக்குநர் ஷெரிஃப் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோரின் திறமைகள் பாராட்டுக்குரியவை. ஜி.வி. பிரகாஷின் பாடல்களுக்கு நான் தீவிர ரசிகன். இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் காலத்திலிருந்து ஆர்யாவுடனான நட்பு தொடர்கிறது. அவருடைய எளிமையான குணமும் உதவும் மனப்பான்மையும் பாராட்டுக்குரியவை. அவரை வழிநடத்திச் செல்லும் தயாரிப்பாளர் கிஷோர் சாரின் பங்களிப்பும் சிறப்பானது. நிகில் மற்றும் சாயிஷாவுக்கு எனது வாழ்த்துகள். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில், “‘ஹலோ காதல்’ படத்தின் கதையை முதலில் மலையாளத்தில் கேட்டேன். இயக்குநர் தமிழுக்கு வந்த பிறகு இப்படத்தில் இணைந்தேன். ஆர்யா சாருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வைஷ்ணவியுடன் இணைந்து நடித்த காட்சிகளிலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் ஜீவா சார் என்னை மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி” என்றார்.

இயக்குநர் நிகில் முரளி பேசுகையில், “ஆர்யா சாரின் வீட்டிற்குச் சென்று கதையைப் பேசிய தருணமும், இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மிகவும் சிறப்பானது. படத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ், ஆர்யா, வைஷ்ணவி, ஜீவா சார், மோகன் சார், நௌஷத், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு மற்றும் சாயிஷா மேம் ஆகியோரின் திறமையும் ஒத்துழைப்பும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில் , “நீண்ட நாட்களாக ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால், சாயிஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு லைட்டான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தில் இணைந்தேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்திற்குப் பிறகு ஜீவா சாரின் ஆசீர்வாதமும் இப்படத்தில் கிடைத்துள்ளது. கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தபோது கிஷோர் சார் மூலமாக இப்படத்தின் கதையைக் கேட்டேன். மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் இல்லாமல், இன்றைய பார்வையாளர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் வகையில் இயல்பாகவும் புத்துணர்ச்சியுடனும் கதை அமைந்திருந்தது. ஜி.வி. பிரகாஷ், நிகிலா விமல், இயக்குநர் நிகில், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு, சதீஷ், ஷ்யாம், வெங்கட் சார் மற்றும் தயாரிப்பாளர்கள் கிரீஷ் மாத்ருபூதம், விக்னேஷ் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. படத்திற்குப் பலமாக இருக்கும் ஜீ குழுவினருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

arya in hello kadhalhello kadhalhello kadhal reviewtamil movie helle kadhalஆர்யாவின் ஹலோ காதல்ஹலோ காதல் டிரைலர் வெளியீட்டு விழாஹலோ காதல் விமர்சனம்
Comments (0)
Add Comment