முதல் காதல் தோல்வியில் முடிந்தால், அந்த வலிக்கு மருந்து மற்றொரு காதல், என்று வரிசைக்கட்டி காதலிக்கும் அதர்வா, எதிலும் வெற்றி பெறாததால், தன் மாமா பார்த்த பெண்ணை மணக்க முடிவு செய்கிறார். அதர்வாவின் காதல் தோல்விகளின் சுவாரஸ்யம் ஒரு பக்கம் இருக்க, காதல் கைகூடாமல் போனால் என்ன, மனைவியை காதலிக்கலாம் என்ற முடிவில் பயணிக்கும் அவர், அதிலாவது வெற்றி பெற்றாரா ? என்பதை கலகலப்பாகவும், கலர்புல்லாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
சொல்லாமல் போன ஒருதலை காதல் தோல்வியை வலியோடு சொன்ன படம் முரளியின் ‘இதயம்’. அதர்வா முரளியின் பல ஒருதலை காதல் தோல்வியை கலகலப்பாக சொல்வது தான் ‘இதயம் முரளி’.
அதர்வா முரளி இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். பாணி, உடை என அனைத்தும் அவரை புதிதாக காட்டியிருக்கிறது. நடிப்பை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்றாலும், காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் நடிக்கவே தேவையில்லை, பார்ப்பது, சிரிப்பது, கண் சிமிட்டுவது என்று தங்கள் அழகு மூலமாகவே காதல் காட்சிகளின் அழகியலை அதிகரிக்க செய்திருக்கிறார்கள்.
அதர்வாவின் மாமா வேடத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜை காக்கி சட்டை இல்லாமல் பார்ப்பதே பெரும் ஆறுதலாக இருக்க, நடிகர் ரஜினிகாந்தின் பாதிப்பு இல்லாத நடிப்பில் பார்ப்பது கூடுதல் ஆனந்தம் தருகிறது.
தமன்.எஸ், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா ஆகியோர் காமெடி நடிகர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாகவும் திரையை நிரப்பியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தின் மிகப்பெரிய பலம். திரைக்கதை நிகழ்த்தாத மேஜிக்கை மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் உருவான காட்சிகள் நிகழ்த்தியிருக்கிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளை மட்டும் இன்றி, படத்தில் இடம் பெறும் சிறு சிறு நடிகர்களை கூட திரையில் மிளிர செய்திருப்பவர், படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓவியம் போல் ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி இருந்தாலும், மனதில் நிற்கும்படி இல்லை. பின்னணி இசை எந்திர இசைக்கருவிகளின் ஆதிக்கம் நிறைந்தவையாக பயணப்படுவதால் அதுவும் பலவீனமே.
பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு காட்சிகளில் இருக்கும் பிரமாண்டத்தை சிதைக்காமல் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.
ரமணகிரிவாசனின் வசனம் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம் ஆகியோரது கூடுதல் வசனங்கள் காதலுக்கும் கைகொடுக்கவில்லை, காமெடி காட்சிகளிலும் பெரிய அளவில் சிரிக்க வைக்கவில்லை.
ஹீரோவின் பல காதல் தோல்வியும், அதன் பின்னணி சுவாரஸ்யங்களும், என்ற பாணியில் பல படங்களை பார்த்திருந்தாலும், தனது பாணியில் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், அதை தன் எழுத்து மூலம் நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல தடுமாறியிருந்தாலும், காட்சி மொழியில் பிரமாண்டமாக சொல்வதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘இதயம் முரளி’ கலர்புல்லான காதல்.
ரேட்டிங் 3/5