‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்பட விமர்சனம்

1944 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சி.என். லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கிற்கும், இந்த படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. கவன ஈர்ப்புக்காக இத்தகைய தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், இப்படம் மூலம் மரண தண்டனையும் ஒரு விதத்தில் கொலை தான், என்ற விவாதத்தை முன் வைத்திருக்கிறார்.

குற்றவாளியின் சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் குற்ற பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதி வழங்க வேண்டுமே தவிர, வெறும் குற்றத்தின் அடிப்படையில், ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது நீதி அல்ல, என்பதை உரக்க சொல்வது தான் இப்படத்தின் மையக்கரு.

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வருமையில் சிக்கித்தவிக்கும் நாயகன் வெற்றி திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக வைத்துக்கொண்டு பயணிக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை வெற்றி முன் வைக்கிறார். அவரது வாதம் சரியா ? தவறா ? என்பதை மனித உணர்வுகளின் அடிநாதத்தை தொடும் விதத்தில் சொல்வது தான் ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’.

வெற்றியின் அலட்டல் இல்லாத, அளந்து கொடுத்த நடிப்பும், பதற்றம் இல்லாத வசன உச்சரிப்பும் திரைக்கதையில் இடம்பெறும் வாதங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இறுக்கமான மனநிலையோடு இருந்தாலும், தனது கருத்துகளை தெளிவாக எடுத்துக்கூறும் வெற்றி, படம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தாலும், அந்த காட்சிகளை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவுக்கு, கிராமத்து வேடம் சற்று ஒத்துப்போகவில்லை என்றாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக்கொள்ள முயற்சித்திருக்கிறார்.

சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, வெற்றியின் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யும் கதாபாத்திரத்தில் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாதிடுவது ரங்கராஜ் பாண்டேவுக்கு மிக எளிதான பணி என்றாலும், அதை ஒரு கதாபாத்திரமாக கையாளும் சவாலை மிக சாமர்த்தியமாக கையாண்டிருப்பவர், தனது அளவான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கும், திரைக்கதை ஓட்டத்திற்கும் பெரும் பலமாகவே பயணித்திருக்கிறார்.

வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியை தூக்கிலிடும் ஹேங்மேனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது கச்சிதமான நடிப்பின் மூலம் அந்த அந்த கதாபாத்திரமாகவே பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம், செயற்கையான வெளிச்சத்திற்குப் பதிலாக, கதையின் சூழலுக்கு ஏற்ப சூரிய ஒளியையும், குறைவான விளக்குகளையும் பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருப்பது பார்வையாளர்களையும் கதையுடன் பயணிக்க வைக்கிறது. சில இடங்களில் ஏஐ காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சில நிஜ காட்சிகளை கூட அதற்கு ஏற்ப படமாக்கியிருப்பதோடு, கேமரா அசைவுகள் மூலம் மாயாஜாலம் நிகழ்த்த முயற்சிக்காமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

தர்புகா சிவாவின் இசையும், பாரதியார், பாரதிதாசன் மற்றும் தயாள் பத்மநாபன் ஆகியோரது பாடல் வரிகளும் கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் மனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசை இறுக்கமான சூழல்களுக்கு ஏற்ப பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருப்பதோடு, பல இடங்களில் அமைதியான சூழ்நிலைகளை மெளனமாக கடந்து, கதாபாத்திரங்களின் நுணுக்கமான அசைவுகள் மற்றும் உடல் மொழியை கவனிக்க வைக்கிறது.

குற்றவாளியின் பார்வையில் மரண தண்டனை என்பது ஒருவருக்கான நீதி மறுக்கப்படுவதற்கு சமம், என்ற ரீதியில் காட்சிகள் வாதங்களாக நகர்ந்தாலும், அதை சுவாரஸ்யம் மிக்க படமாக நகர்த்துவதற்கு படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரியின் பணி கைகொடுத்திருக்கிறது.

கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் ஆகியோரது திரைக்கதை மற்றும் வசனங்கள் ஒரு எளிமையான கதைக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறது. படத்தில் வசன காட்சிகள் அதிகம் என்றாலும், வசனங்கள் அனைத்தும் கைதட்டி பாராட்டும் விதத்தில் இருப்பது படத்திற்கு பெரும் பலம். திரைக்கதையும் மரண தண்டனை தேவையா ? என்ற கேள்வியை கடந்து, அதை ஒரு எதிர்பார்ப்பு மிக்க படமாக நகர்த்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் தயாள் பத்மநாபன், எளிமையான கதை மூலம் மனிதர்களின் மனங்களையும், எண்ணங்களையும், தன் வலிமையான எழுத்துக்கள் மூலம் திரை மொழியில் பிரதிபலிப்பதில் வல்லவர். அப்படிப்பட்ட தன் எழுத்தின் மூலம் மரண தண்டனை அறவே நீக்கப்பட வேண்டும், என்ற தனது வாதத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையும் ஒரு கொலை தான், என்ற வாதத்தை முன் வைக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், அதன் பின்னணியில் இருக்கும் நியாயத்தை மட்டும் அல்ல நீதி என்பது என்ன ? என்பதையும் மிக தெளிவாக விவரித்து, ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு, அரசு உட்பட யாருக்கும் அந்த உரிமையைப் பறிக்கும் அதிகாரம் இல்லை, என்ற கருத்தை அழுத்தமாக சொல்லி, மீண்டும் ஒரு முறை மக்களுக்கான படைப்பை கொடுத்து பாராட்டு பெறுகிறார்.

மொத்தத்தில், ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ பாரட்டப்பட வேண்டிய கருத்தியல் படைப்பு.

ரேட்டிங் 4/5

lakshmigandhan kolai vazahakku reviewlakshmigandhan kolai vazhakku movie reviewtamil movie lakshmigandhan kolai vazhakku reviewதமிழ்ப் படம் லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு விமர்சனம்லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு விமர்சனம்
Comments (0)
Add Comment