’லிங்கம்’ இணையத் தொடர் விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான கபடி வீரரான கதிர், சிறு வயதில் இருந்தே காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கிறார். ஆனால், அதே கபடி போட்டியில் நிகழ்ந்த எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அவரது கனவை சிதைத்து விடுகிறது. செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லும் கதிர், அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ஒதுங்கிச் செல்ல, ஒரு கட்டத்தில் எதிர்த்து நிற்க தொடங்குகிறார்.

இதற்கிடையே சிறையில் இருந்து வெளிவரும் கதிரை ஊர் மக்களும், காவல்துறையும் கொலைக் குற்றவாளியாகவே பார்க்க, காவல்துறையின் அடக்குகுறைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார். இதனால், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக சாராய வியாபாரியிடம் வேலைக்கு சேரும் கதிர், தன்னை சுற்றி நடக்கும் சில சம்பவங்களால், கன்னியாகுமரியையே நடுங்க வைக்கும் ரவுடியாக உருவெடுக்கிறார்.

சாராய வியாபாரம், கட்டப்பஞ்சாயத்து, அரசியல்வாதிகளுடனான தொடர்பு, காவல்துறை அதிகாரிகளுடனான நெருக்கம் என்று தனது சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தி விஸ்வரூபம் எடுக்கும் கதிர், துரோகத்தினால் சில இழப்புகளை சந்திக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை கத்தியும், இரத்தமுமாக சொல்வதே ‘லிங்கம்’.

லட்சியத்தோடு பயணிக்கும் இளைஞர் மற்றும் முரட்டுத்தனமும், வன்மமும் நிறைந்த ரவுடி என்ற மாற்றத்தை தனது தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் கதில் மிக சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார். தனது காவல்துறை பணி கனவு நிறைவேறாமல் போனதை எண்ணி கலங்கும் காட்சிகளிலும், ரவுடியான பிறகு துரோகத்திற்கு பழி தீர்ப்பதற்கான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் கண்கள் மூலமாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்தி லிங்கம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

கதிரின் நண்பராக நடித்திருக்கும் சத்யா, ஆரம்பத்தில் அமைதியான மற்றும் ஜாலியான கதாபாத்திரமாக வலம் வந்தாலும், தொடரின் இறுதி அத்தியாயத்தில் எடுக்கும் அவதாரம், தொடரின் அடுத்த பாகத்தில் அவரது ஆட்டம் பெரும் ஆட்டமாக இருக்கும் என்று தெரிகிறது.

போஸ் வெங்கட் வழக்கம் போல் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தி தனது வேலையை முழுமையாக செய்து தொடருக்கு பலமாக பயணித்திருக்கிறார். சாராய வியாபாரிகளாக நடித்திருக்கும் இரண்டு நடிகர்கள் மற்றும் இரு தரப்பிலும் இருக்கும் ரவுடிகள் என்று அனைத்து நடிகர், நடிகைகள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

திவ்யா பாரதி மற்றும் பூர்ணிமா ரவி இருவரும் தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்துமே தொடரின் தரத்தை அதிகரிக்கும்படி அமைந்திருப்பதோடு, தொடர் முழுவதையும் ஆக்‌ஷன் உணர்வோடு பயணிக்க வைத்து, காட்சிகளில் இருக்கும் பதட்டத்தை பார்வையாளர்களிடத்திலும் கடத்தி விடுகிறது.

80 மற்றும் 90 களில் நடக்கும் கதையில், தென் தமிழகத்தில் நிலவிய சாராய வியாபாரம் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியலையும், ரவுடிசத்தையும் அதீத வன்முறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் லட்சுமி சரவணகுமார், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லி 8 அத்தியாயங்களையும் கவனம் சிதறாமல் பார்க்க வைக்கிறார்.

ரவுடிசம், அரசியல், துரோகம், நட்பு அதன் மூலம் ஏற்படும் பழிவாங்கும் உணர்ச்சி என்று, கேங்ஸ்டர் படங்களின் வழக்கமான பாதையில் தொடரை பயணிக்க வைப்பதும், தொடரின் ஆரம்பத்திலேயே இப்படி தான் நடக்கும் என்று யூகிக்கும்படி திரைக்கதை நகர்வது தொடரை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், சில சஸ்பென்ஸ்களை, நான் லீனர் முறையில் சொல்லி, யூகங்களை கடந்து, ஒவ்வொரு அத்தியாயங்கள் முடியும் போதும், அடுத்து என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பை பார்வையாளிடத்தில் ஏற்படுத்தி தொடரை தொய்வில் இருந்து மீட்டு, சுமாரஸ்யமாக நகர்தி செல்கிறார் இயக்குநர் லட்சுமி சரவணகுமார்.

ஒரு எளிய மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எப்படி குற்றப் பின்னணி கொண்டவராக உருவெடுக்கிறார் என்பதையும், சிறைச்சாலையில் நடக்கும் சம்பவங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பல விசயங்களை தைரியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார். அதே சமயம், அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகளை வைத்து, ஓடிடி தளங்களுக்கான பாதையிலும் பயணித்திருக்கிறார்.

8 வது அத்தியாயத்தோடு தொடர் முடிந்தாலும், இரண்டாம் பாகத்திற்கான தொடக்கத்தோடு முடிவதோடு, முதல் பாகத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களின் விஸ்வரூபமும், அவர்களுக்கான சம்பவங்களும் இரண்டாம் பாகத்தில் மிக சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் லட்சுமி சரவணகுமார்.

மொத்தத்தில், ‘லிங்கம்’ ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு விருந்து, வன்முறை எதிர்பாளர்களுக்கு மருந்து.

ரேட்டிங் 3.5/5

lingam reviewlingam web series reviewtamil web series lingam reviewதமிழ் இணையத் தொடர் லிங்கம் விமர்சனம்லிங்கம் இணையத் தொடர் விமர்சனம்லிங்கம் விமர்சனம்
Comments (0)
Add Comment