மருந்து விற்பனை பிரதிநிதியான விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். குறைவான சம்பளமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விஷால், தனது நீண்ட நாள் கனவான கார் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். புதிய கார் வாங்க முடியாததால் பழைய கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காரால் அவரது குடும்பத்தை ஆபத்து துரத்த, அவரது மனைவியும், மகளும் கொல்லப்படுகிறார்கள்.
தன் மனைவி மற்றும் மகள் கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று நினைக்கும் விஷாலுக்கு, அவர் மீதான ஆத்திரம் அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் அவரது தந்தை அவரை பார்க்க வருகிறார். ஆனால், அவரை பார்க்க விரும்பாத விஷால், அவரை அவமரியாதை செய்து திருப்பி அனுப்பி விடுகிறார். விஷால் தன் தந்தை மீது கோபம் கொள்ள காரணம் என்ன ?, அவரது தந்தை யார் ?, மனைவி, மகளை கொலை செய்தவர்களை விஷால் என்ன செய்தார் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை காரசார மசலாத்தனத்தோடு சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘மகுடம்’.
விஷால் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம். அதர பழைய அப்பா – மகன் செண்டிமெண்ட் ஆக்ஷன் மசாலா கதை என்றாலும், அதை எப்படி எல்லாம் கிழித்து கந்தலாக்க முடியுமோ அப்படி எல்லாம் கிழித்து வைத்திருக்கிறார் இயக்குநர் விஷால்.
அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கும் விஷாலுக்கு, தோற்றம் மாற்றம் துளி கூட எடுபடவில்லை. நிஜமான தோற்றத்தில் மெடிக்கல் ரெப்பாக வரும் தோற்றமும், அதில் வெளிப்படுத்தும் நடிப்பிலும் குறையில்லை. ஆனால், அப்பா கதாபாத்திரத்தின் இளமை மற்றும் முதுமை கெட்டப்புகளும், அதில் வெளிப்படுத்திய நடிப்பும் சகிக்க முடியவில்லை.
அப்பா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலி, மீன் விற்பனையாளர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும் நடிப்பில் கொஞ்சம் ஓவர் டோஸ் தெரிகிறது. மகன் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார்.
ஜெயபிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா, சபுமோன் அபுசலிம், அஜய், அர்ஜய் பிரின்ஸ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்களது இஷ்ட்டத்திற்கு நடித்திருப்பதோடு, பொருந்தாத கதாபாத்திரத்தில் திணிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ஆகியோரது கேமரா மிக வேகமாக பயணித்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை அமர்க்களமாக படமாக்கியிருப்பவர்கள், 80 காலக்கட்டங்களை அதிகப்படியான வண்ணங்களோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்களோடும், பின்னணி இசை அதிரடி மற்றும் ஆரவாரமான காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையிலும் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த், பணியின் போது தூங்கி விட்டார் போலிருக்கிறது. அதனால் தான் வெட்டி வீச வேண்டிய காட்சிகளை அப்படியே தொகுத்து, படத்தின் நீளத்தை அதிகரித்திருப்பதோடு, பார்வையாளர்களின் பொறுமையையும் சோதித்திருக்கிறார்.
விஷால், தனது ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தையும் கேள்விக்குறியாக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் படம் என்றாலும், அதை தொய்வின்றி நகர்த்தி, கமர்ஷியல் பட விரும்பிகளை திருப்திப்படுத்தும் பணியை செய்ய தவறியிருக்கும் விஷால், திரையரங்கிற்குள் வரும் ஒருசிலரை கூட தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறார்.
யார் யார்க்கு எந்த கதாபாத்திரத்தை கொடுப்பது, யாரை எந்த இடத்தில் நடிக்க வைப்பது, நகைச்சுவை காட்சிகளை எப்படி கையாள்வது, என்று எந்த விசயத்திலும் கவனம் செலுத்தாமல், அவர் அவர் இஷ்ட்டத்திற்கு நடிக்க வைத்து அதை அப்படியே காட்சிப்படுத்தி, மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட படமாக கொடுத்திருக்கும் விஷால், இயக்குவதை விட்டு விட்டு நடிகராகவே தனது பயணத்தை தொடரலாம்.
மொத்தத்தில், ‘மகுடம்’ மண்ணை கவ்வி விட்டது.
ரேட்டிங் 2.5/5