ராஷ்மிகாவின் ‘மைசா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்திய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் ‘மைசா’. தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை உழைத்திருக்கும் ராஷ்மிகா, தான் ஏற்று நடித்திருக்கும் கோண்ட் பழங்குடியின பெண் கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, ‘மைசா’ திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

ரிலீஸ் தேதிக்கான போஸ்டரில், கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா காட்சியளிக்கிறார். அவரது முகத்தில் போர்க்காயங்களும், பின்னணியில் ஏராளமான மக்கள் கூட்டமும், தீப்பிழம்புகளும் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய உடைகள், ஆயுதங்கள், தீக்காட்சிகள் மற்றும் ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான முகபாவனை ஆகியவை போஸ்டருக்கு வலிமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான தோற்றத்தை அளிக்கின்றன.

மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மைசா’, நவீன இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு புதிய அளவுகோலை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளுடன், பார்வையாளர்களுக்கு பரபரப்பும், அட்ரினலின் நிறைந்த அனுபவத்தையும் வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது.

பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்களின் எல்லைகளை மட்டுமின்றி, இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான தரத்தையே புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘மைசா’ உருவாகி வருகிறது.

படப்பிடிப்பில் மிகவும் சவாலான அதிரடி காட்சியில் நடித்தபோது ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து வரும் அவர், விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளார். படப்பிடிப்பில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அதே நேரத்தில், படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமான காட்சியமைப்பை உருவாக்கும் வகையில் அதிநவீன VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனுடன், படத்தின் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா மேற்கொள்ள, இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் நிபுணர் ஆண்டி லாங் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், கேச்சா காம்பாக்டீ ஸ்டண்ட் பணிகளை கவனித்துள்ளார்.

mysaamysaa release date announcerashmika manthanatamil movie mysaaமைசாமைசா வெளியீட்டு தேதி அறிவிப்புராஷ்மிகா மந்தனாவின் மைசா
Comments (0)
Add Comment