’சத்தியவான் சாவித்திரி’ திரைப்பட விமர்சனம்

சட்டம் படித்து முடிக்கும் கீர்த்தி சுரேஷ், சாருகேஷை திருமணம் செய்து கொண்டு, சென்னையில் உள்ள பிரபல வழக்கறிஞர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தனது குரு மிஷ்கினுக்கு எதிராக வழக்கு ஒன்றில் வாதாடி வெற்றி பெறும் கீர்த்தி சுரேஷ், யாராலும் வீழ்த்த முடியாத மிஷ்கினை முதல் வழக்கிலேயே வீழ்த்தியதால் வழக்கறிஞராகவும் பிரபலமடைய, திடீரென்று ஏற்படும் உடல்நிலை பாதிப்பால் கரு சிதைவடைந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கபப்டுகிறார். இதனால், வழக்கறிஞர் பணியை கைவிட முடிவு செய்பவர், மீண்டும் தாய்மை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஷில்பா மஞ்சுநாத் கொலை செய்யப்பட்ட வழக்கில் கீர்த்தி சுரேஷின் கணவர் சாருகேஷ் கைது செய்யப்படுகிறார். தவறு செய்யாத தன் கணவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற கீர்த்தி சுரேஷ், மீண்டும் வழக்கறிஞராக களம் இறங்க, அவரிடம் தோல்வியடைந்த வழக்கறிஞர் மிஷ்கின், அவரை பழிவாங்கும் நோக்கோத்தோடு அரசு வழக்கறிஞராக களம் இறங்குகிறார்.

கணவரை காப்பாற்றுவதற்காக மனைவியாக மட்டும் இன்றி வழக்கறிஞராகவும் போராடும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கினை எதிர்த்து மீண்டும் வெற்றி பெற்றாரா?, தனது கணவரை காப்பாற்றினாரா ?, என்பதை புதிய பாதையின் மூலம் சொல்வதே‘சத்தியவான் சாவித்திரி’.

எமனிடம் வாதாடி இறந்த கணவரை மீண்டும் உயிர்பெறச் செய்த சத்தியவான் சாவித்திரியை போல், செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு சென்ற கணவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற போராடும் ஒரு மனைவியின் கதை என்றாலும், எதிர்பார்க்காத திருப்பம் மூலம் இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய், கதையை கையாண்ட விதம் சாவித்திரிக்கு வேறு ஒரு பிம்பத்தை கொடுத்து, பார்வையாளர்களிடம் பாராட்டை பெற்று விடுகிறார்.

கதையின் நாயகியாக சாவித்திரி கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தன் கணவரின் உயிரைக் காப்பாற்றப் போராடும் ஒரு மனைவியின் தவிப்பையும், எதார்த்தமான உடல்மொழி மூலம் ஒரு வழக்கறிஞரின் உறுதியையும் தன் கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

மூத்த மற்றும் பிரபல வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிஷ்கின், தனது முதிர்ச்சியான நடிப்பு மற்றும் வித்தியாசமான மேனரிசம் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, நீதிமன்ற காட்சிகளில் தனது ஒவ்வொரு அசைவுகளையும் உற்று நோக்க வைக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் கணவராக நடித்திருக்கும் சாருகேஷ், காதல் உணர்வுகளையும், செய்யாத குற்றத்திற்காக அனுபவிக்கும் தண்டனையால் மனதில் ஏற்பட்ட தவிப்பையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் சீனியராகவும், பிறகு அவரது உதவியாளராகவும் பயணிக்கும் பாலசரவணன், இறுக்கமான சூழல்களை கடந்து பார்வையாளர்களை அவ்வபோது சிரிக்க வைக்கும் பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா, தீபா சங்கர், மதுசூதன் ராவ், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ், ஆர்.சுந்தராஜன் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாகவும், திரைக்கதையின் பயணத்திற்கு பலம் சேர்க்கும் விதமாகவும் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், நீதிமன்றக் காட்சிகளில் கையாண்ட கோணங்களும், ஒளியமைப்பும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளன. கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் ஆகியோரின் நேருக்கு நேரான வாதங்களின் போது ஏற்படும் இறுக்கத்தையும், த்ரில்லர் உணர்வையும் ஒளியமைப்பு மூலம் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியுள்ள அருள் வின்சென்ட், கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தையும், புலனாய்வுத் திருப்பங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், பின்னணி இசையில் காட்டிய வேகத்தையும் ஆழத்தையும் பாடல்களில் சற்று குறைவாகவே உணர முடிகிறது, இதனால் பாடல்கள் மனதில் நிற்கத் தவறுகின்றன. அதே சமயம், கதையின் மையக் கருவான உணர்வுப்பூர்வமான காட்சிகளில் மென்மையான இசையைக் கையாண்டு பார்வையாளர்களைக் கதைக்குள் ஒன்ற வைத்துள்ளார்.

கதையின் துவக்கம் முதலே யூகிக்கும்படியும், நம்பகத்தன்மையின்றியும் காட்சிகள் நகர்ந்தாலும், திரைக்கதையில் இருக்கும் திருப்பத்தை எதிர்பார்க்காத தருணத்தில், சரியான இடத்தில் சொல்லி, முழுப்படத்தையும் கொண்டாட வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே.

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் எஸ்.விஜய், நாம் அறிந்த வழக்கமான கதைக்கு வேறு ஒரு பிம்பத்தை கொடுத்து எழுதிய திரைக்கதைக்கு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

நீதிமன்ற வாதங்கள் கொண்ட கதைக்களம் என்றாலும், அதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் கையாண்டதோடு, அதன் பின்னணியையும், சஸ்பென்ஸ் முடிச்சையும் படத்தின் முடிவில் அவிழ்த்திருப்பது, நீதிமன்ற நாடகத்தன்மை கதைக்கு புதிய வடிவத்தை கொடுத்திருக்கிறது.

படத்தின் முதல் பாதியும், கீர்த்தி சுரேஷின் வாதத்திறமையும் சினிமாத்தனமாகவும், நாடகத்தனம் மிக்கதாகவும் இருந்தாலும், இரண்டாம் பாதியில் கொலை வழக்கின் தீர்ப்பு பின்னணியில் இருக்கும் திருப்பத்தை மிக சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருக்கும் இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய், படத்தின் மீது இருந்த அனைத்து குறைகளையும் மறந்து பார்வையாளர்களை பாராட்ட வைத்து விடுகிறார்.

மொத்தத்தில், இந்த ‘சத்தியவான் சாவித்திரி’ புராண நாயகியாக அல்லாமல் புதிய நாயகியாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

ரேட்டிங் 3.8/5

sathiyavan savithiri movie reviewsathiyavan savithiri reviewsathyavan savithiri cinema reviewsathyavan savithiri movie reviewsathyavan savithiri reviewtamil movie sathiyavan savithiri reviewகீர்த்தி சுரேஷ்சத்தியவான் சாவித்திரி திரைப்பட விமர்சனம்சத்தியவான் சாவித்திரி விமர்சனம்தமிழ்ப் படம் சத்தியவான் சாவித்திரி விமர்சனம்மிஷ்கின்
Comments (0)
Add Comment