’ஹைகூ’ படம் அனைத்து தரப்பு வயதினரையும் கனெக்ட் பண்ணும்! – தயாரிப்பாளர் அருளானந்தம் உறுதி

’ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படங்களை தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்தம் தயாரித்திருக்கும் மூன்றாவது படம் ‘ஹைகூ’. ஏகன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகிகளாக ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் நடித்திருக்கிறார்கள்.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கூடுதல் திரைக்கதையை ஹரிஹரன் எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சக்தி பிரணேஷ்.பி படத்தொகுப்பு செய்துள்ளார். பிரேம் கருந்தமலை கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி, ஒரு சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக, மகளிர் கல்லூரியில் நாயகன் சேர்ந்து படிப்பது போன்ற காட்சி பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் தயாரிப்பாளர் டாக்டர்.டி.அருளானந்தம், நாயகன் ஏகன் மற்றும் நாயகி ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் படத்தின் கதை மற்றும் டிரைலர் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

படம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர்.டி.அருளானந்தம் கூறுகையில், “இந்த படமே ஒரு கவிதைப் போல தான். இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இந்த கதையை சொல்ல தொடங்கிய அரை மணி நேரத்தில் இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ’ஜோ’ படத்தின் கதையை கேட்கும் போதும் இப்படி தான் தோன்றியது. அதற்கு காரணம் டிரைலரில் இடம் பெறுள்ள மகளிர் கல்லூரியில் நாயகன் படிக்கும் அந்த சம்பவம். இது எப்படி சாத்தியம் ? என்ற கேள்வி நிச்சயம் அனைவரிடத்திலும் எழும். ஆனால், படம் பார்க்கும் போது, ஆமாம் இப்படியும் நடக்கலாம், என்று நினைக்க தோன்றும். அந்த அளவுக்கு ஒரு செயற்கையான விசயமாக இருக்கும். ஆனால், அது மட்டுமே படம் அல்ல, அது ஒரு பகுதி, அதை தானடிய பல விசயங்களை உள்ளடக்கியது தான் ‘ஹைகூ’.

நான் ஒரு தயாரிப்பாளர் என்பதை தாண்டி, 14 வயதில் இருந்தே நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன், அது நல்லா இருக்கும், இல்லை என்று சொல்வேன், அவ்வளவு தான் எனக்கு சினிமாவை தெரியும். அப்படி தான் இந்த கதையை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. ’ஜோ’ கதை கேட்கும் போதும் எனக்கு அப்படி தான் தோன்றியது. சமீபகால காதல் படங்களில் இருந்து இந்த படம் எப்படி வேறுபடுகிறது, என்று கேட்டால், அது கதை தான். ஒரு இளைஞனின் 19 வயது முதல் 26 வயது வரையிலான ஒரு பயணம் தான் கதை. அது அனைத்து தரப்பினருடனும் கனெக்ட் செய்வது போல் இருக்கும். படத்தில் இருக்கும் சில சம்பவங்கள் 45 வயதுள்ளவரை கனெக்ட் செய்யும், மற்ற விசயங்கள் சிலரை கனெக்ட் செய்யும், மொத்தத்தில் இந்த படத்தை பார்ப்பவர்கள் எதாவது ஒரு வகையில் படத்துடன் தங்களை நிச்சயம் தொடர்புபடுத்திக் கொள்வார்கள்.

நான் தயாரித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் என்றால் இது தான். ’ஜோ’ படத்தை நான்கு கோடி ரூபாயில் எடுத்தோம். ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படம் தயாரிப்பு இரண்டு மடங்கானது. ஆனால், இந்த படத்தை 6 கோடி ரூபாயில் என்னால் தயாரித்திருக்க முடியும், ஆனால் அப்படி செய்யாமல் அனைத்து விசயங்களையும் பெரிதாக செய்து ரூ.11 கோடியில் தயாரித்திருக்கிறேன். காரணம், இந்த கதையை கேட்கும் போதே இந்த படத்திற்கு என்று தனி வியாபாரம் இருப்பதை உணர்ந்தேன். அது படத்திலும் தெரிகிறது. அதனால் தான் இந்த படத்தின் கதையை மட்டுமே கேட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் படத்தை வாங்கியிருக்கிறார்கள். சாட்டிலைட் விற்பனையாகி விட்டது. படத்தின் பாடல்களை பெரிய தொகைக்கு சரிகமா வாங்கியிருக்கிறது. ஜோ படத்தின் பாடல்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் செலவு செய்தேன். அந்த பாடல்கள் எவ்வளவு பெரிய ஹிட்டானது. ஆனால், இந்த படத்தின் பாடல்களுக்கு ரூ.1.25 கோடி செலவு செய்திருக்கிறேன். அப்படியானால் இந்த படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கும் என்று பாருங்கள். இதுவரை படத்தை பார்த்த அனைவரும் இந்த படம் மிகப்பெரிய ஹிட் படம் என்று சொன்னதோடு, படத்திற்காக செய்யப்பட்ட செலவு திரையில் தெரிகிறது, இது நிச்சயம் பிரமாண்டமான காதல் படமாக இருக்கும், என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவரை நான் போட்ட முதலீட்டில் 80 சதவீதம் வந்துவிட்டது. இது இந்த படத்திற்கும், எனக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. என் முந்தைய படங்களில் நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, அது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எனக்கு சினிமா தொழில் அல்ல, இதில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் என்னுடைய மற்ற தொழிலில் தோல்வியடைந்தால் அது எனக்கு மட்டுமே தெரியும். ஆனால், சினிமாவில் தோல்வியடைந்தால் ஊருக்கே தெரிந்து விடுகிறது. அது எனக்கு மிகப்பெரிய மன கஷ்ட்டத்தை கொடுத்தது. எனவே, இந்த துறையில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முடிவில் தான் இந்த படத்தை தயாரித்தேன், நான் நினைத்தது போல் வெற்றியும் பெற்று விட்டேன்.” என்றார்.

படத்தின் நாயகன் ஏகன் கூறுகையில், “இதில் மனோகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். டிரைலரில் இடம்பெற்றுள்ள மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் படிப்பது எப்படி சாத்தியம் ? என்ற கேள்வி வைரலாகியுள்ளது. ஆனால், அதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. அதாவது ஒரு மாணவருக்கு கொடுக்கும் தண்டனையாகவும் அது இருக்கும். படம் பார்க்கும் போது இந்த விசயத்தை செய்திருக்க வேண்டாமே என்று தோன்றும், ஆனால் அதற்கான தண்டனையாக இதை பார்க்கும் போது, அதற்காக இப்படியும் செய்யலாமா என்று, நினைக்க வைக்கும்.

படத்தில் காதலை தாண்டிய விசயம் என்றால், இந்த படம் அனைத்து தரப்பு வயதினருக்கும் ஒரு முதிர்ச்சியை கொடுக்கும். காதலிப்பவர்களிடம் மட்டும் அல்ல, திருமணமாகி பல வருடங்களாக தம்பதியாக வாழ்ந்தவர்கள் கூட இந்த படத்தை பார்க்கும் போது, நாம் இதை இப்படி செய்திருக்க கூடாதோ…!, என்று நினைக்க தோன்றும். இந்த படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு அப்படி தான் தோன்றியது. படமாக பார்க்கும் போதும் அது தான் தோன்றியது. அப்போதே நாம் ஒரு நல்ல கதையை தான் தேர்வு செய்திருக்கிறோம், தப்பான படம் பண்ணவில்லை என்று தோன்றியது. எனவே, இது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கான படமாக அல்லாமல் அனைத்து தரப்பு வயதினருக்குமான படமாக இருக்கும். காதல் என்றால் இளம் வயதில் மட்டுமே வருவதில்லை, திருமணமானவர்கள் கூட காதலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது அனைத்து தலைமுறைகளுக்கான படம்.” என்றார்.

நாயகி ஃபெமினா ஜார்ஜ் கூறுகையில், “நான் ’மின்னல் முரளி’ படத்தில் நடித்திருக்கிறேன். என்னை தொடர்பு கொண்டு இந்த படத்தின் கதையை கேட்க சொன்னார்கள், கதை கேட்ட உடன் எனக்கு பிடித்து விட்டது, உடனே ஓகே சொல்லி விட்டேன். சிறப்பான கதாபாத்திரம், இதில் நடித்தால் என் சினிமா பயணம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது பெருமையாக இருக்கிறது. படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றாலும், அதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கிறது, என்று மட்டுமே யோசிப்பேன். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு முக்கியத்துவம் இருந்தால் நடிக்க ரெடியாகவே இருக்கிறேன். அந்த வகையில், இந்த கதாபாத்திரம் மிக சிறப்பானதாக இருந்தது. எனவே, இரண்டு அல்ல மூன்று நாயகிகள் இருந்தாலும் அதை பற்றி யோசித்திருக்க மாட்டேன்.” என்றார்.

வெளியீட்டுக்கு முன்பாகவே வியாபாரத்தில் புதிய உச்சத்தை தொட்டிருக்கும் ‘ஹைகூ’ திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்டி வரும் தயாரிப்பாளர் டாக்டர்.டி.அருளானந்தம், படத்தைப் போலவே படத்தின் விளம்பர பணிகளையும் மிகப்பெரிய அளவில் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

agenhaikuhaiku trailerlproducer arulandamtamil movie haikuஏகன்தமிழ்ப் படம் ஹைகூதயாரிப்பாளர் அருளானந்தம்ஹைகூஹைகூ டிரைலர்
Comments (0)
Add Comment