பிரிட்டிஷ் இந்தியாவில் இந்திய முதலாளி வம்சத்திற்கு அடிமையாக வாழ்ந்துக் கொண்டிருந்த சவாரி இத்தனவர், சுதந்திர இந்தியாவில் தாங்களும் சுதந்திரமாக வாழ தங்களுக்கான அடையாளத்தை பெற நினைக்கிறார்கள். ஆனால், அடக்குமுறை குணம் கொண்ட முதலாளி வர்க்கம் அவர்களுக்கான அடையாளத்தை தடுத்து, அவர்களை அடிமைகளாகவே வைத்திருக்க நினைக்கிறது. அவர்களும் தங்களுக்கான அடையாளத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சவாரி இனத்தில் பிறக்கும் நாயகன் நானி, தனது தாயை போல், அடக்குமுறைக்கு எதிராக போராடி அடிமையாக இருக்கும் தன் இனத்தை மீட்டு, அவர்களுக்கான அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா ?, என்பதை இரத்தக் கடல் மற்றும் சடலங்களின் குவியல் பின்னணியில் சொல்வது தான் ‘தி பாரடைஸ்’.
ஜடால் என்ற கதாபாத்திரத்தில் இரட்டை ஜடையுடன் வலம் வரும் நானி, தனது ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் படத்தை தோளில் சுமந்தாலும், அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகளினால் அவரது நடிப்பு கவனம் ஈர்க்க தவறியிருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஆணுக்கு நிகராக பெண் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார். அவர் வரும் காட்சிகள் மட்டுமே பார்வையாளர்களுக்கான ஆறுதலாக இருப்பதால், அவருக்கு கூடுதல் காட்சிகளை கொடுத்திருக்கலாம், என்று நினைக்க தோன்றுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் மோகன் பாபு, ”வயதானாலும் சிங்கம் சிங்கம் தான்” என்ற வார்த்தைக்கு ஏற்ப கம்பீரமாக வலம் வருகிறார். இளமை மற்றும் முதுமை என இரண்டு விதமான தோற்றங்களில் நடித்தாலும், இரண்டிலுமே கம்பீரமாக நடித்து மாஸ் காட்டியிருக்கிறார்.
நானியின் அம்மாவாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னி, நண்பராக நடித்திருக்கும் சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய், குப்பை மற்றும் சகதி நிறைந்த பகுதியையும், அதில் வாழும் சவாரி இன மக்களையும், எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதிலும் செயற்கைத்தனம் நிரம்பியிருந்தாலும் அதை பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வன்முறை காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் உணர்ச்சி போராட்டங்களுக்கும் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
சண்டைக்காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தின் நீளத்தை அதிகமாக வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் நவீன் நூலியின் பணி பார்வையாளர்களை சோர்வடைய வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீகாந்த் ஓடெலா, அடிமை சங்கிலியை உடைக்க போராடும் நாயகன், என்ற ஒரு வரிக்கதையை வைத்துக்கொண்டு, அதற்கான திரைக்கதையை ஒரே இடத்தில் பயணிக்க வைத்திருக்கிறார். நாயகன் அடிக்கிறார், பிறகு அடி வாங்குகிறார். இப்படியே படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை திரைக்கதை பயணிப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதோடு, அதீத கற்பனையோடு வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
நானியின் நடிப்பு மற்றும் பாரடைஸ் என்ற அழுக்கு நிறைந்த பகுதி மற்றும் அதில் அடிமைகளாக வாழும் மக்களின் ஆடை போன்றவற்றை கையாண்ட விதம். செட் மற்றும் கிராபிக்ஸ் மூலம் பாரடைஸ் உலகத்தை வடிவமைத்தது, போன்ற விசயங்கள் ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் நீளம் மற்றும் படம் முழுவதும் நிறைந்திருக்கும் வன்முறை காட்சிகளும், திரை முழுவதும் ஓடும் இரத்த ஆறும், பார்வையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி விடுகிறது.
மொத்தத்தில், ‘தி பாரடைஸ்’ இரத்த குளியல்.
ரேட்டிங் 3/5