Take a fresh look at your lifestyle.

‘அனந்தன் காடு’ திரைப்பட விமர்சனம்

4

90 களில் நடக்கும் கதைப்படி, தமிழீழப் போராளியான ஆர்யா, இலங்கை ராணுவத்துடனான மோதலுக்குப் பிறகு தப்பித்து கேரளாவில் தஞ்சம் அடைகிறார். அங்கிருக்கும் குடிசைப்பகுதியில் வாழும் குற்றப் பின்னணி கொண்ட சிலர் அவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர்.

இதற்கிடையே, தனது அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக, காவல்துறை உயர் அதிகாரி மூலம், குற்றப் பின்னணி கொண்ட கும்பலை பயன்படுத்தும் கேரள மாநில முதல்வர், அவர்கள் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். அந்த கும்பல் முதல்வரின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக, அவர்கள் அடைக்கலம் கொடுத்த ஆர்யா, அந்த நபரை கொடூரமாக கொலை செய்கிறார். அது ஏன் ?, அந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு ஆர்யாவின் வாழ்க்கையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையும் என்னவானது ? என்பதை ஆக்‌ஷன் பாணியில் சொல்வதே ‘அனந்தன் காடு’.

தமிழீழப் போராளி கதாபாத்திரத்தை கதையின் நாயகனாக வடிவமைத்திருப்பதால், இந்த படம் தமிழர்களை கொண்டாடும் படம் என்று நினைத்துவிட வேண்டாம். இதன் உள்நோக்கம் முழுக்க முழுக்க தமிழர்களை இழிவுப்படுத்துவது போல் தான் இருக்கிறது.

குறிப்பாக, கேரள மாநில முதல்வர் கொலை செய்ய திட்டம் போடும் அந்த செல்வந்தரை முதலியார் என்று அழைப்பதோடு, அவரை தமிழீழ துரோகியாக சித்தரித்து, தமிழீழப் போராளி ஆர்யாவின் மூலம் அவர் கொடூரமாக கொலை செய்யப்படுவது போல் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலியார் சமூகத்தின் மீது படக்குழு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது கற்பனை காட்சி என்றாலும், அந்த கதாபாத்திரத்தை பெரும் செல்வந்தர், ஜமீன் அல்லது தொழிலதிபராக வடிவமைத்திருக்கலாம். அதை விட்டு விட்டு, தமிழக வரலாற்றில் பெரும் கல்வியாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளாக அறியப்படும் முதலியார் சமூகத்தினராக சித்தரித்திருப்பது பெரும் கண்டனத்திற்குறியது. அதே சமயம், தமீழிழப் போராளியை காட்டிக் கொடுக்காமல் மலையாளிகள் உயிர் விடுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் தமிழர்களை தமிழர்கள் தான் காட்டிக்கொடுப்பது போன்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லம் தமிழர்களை இழிவுப்படுத்தும் வேலையை சத்தமில்லாமல் செய்யும் கேரள திரையுலகினர் இந்த முறையும் அதை சாமர்த்தியமாக செய்திருப்பது, தமிழகத்தில் சாதி பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களோ!, என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா தனது வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருப்பவர் அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்தாலும், தமிழர்களை கொச்சைப்படுத்தும் சில விசயங்களை கவனித்து தவிர்த்திருக்கலாம்.

குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கேரள மாநில காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், கேரள முதல்வராக நடித்திருக்கும் விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா 90-காலக்கட்டத்தையும், சம்பவங்களையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

பி.அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை அழுத்தமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

ரோஹித் வி.எஸ்.வரியத்தின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது. ரஞ்சித் கோத்தேரியின் கலை பணி செயற்கையாக தெரிந்தாலும், காட்சிகளை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் முரளி கோபி, ஒரு குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதை கமர்ஷியல் ஆக்‌ஷன் பாணியிலான படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். அவரது திரக்கதை சுவாரஸ்ம் மிக்கதாக இருந்தாலும், சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் தமிழகத்தில் சர்சையை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.

ஜியென் கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் படம் விறுவிறுபாகவும், வேகமாகவும் பயணித்தாலும், தேவையில்லாத பல விசயங்கள் திணிக்கப்பட்டவையாகவே இருக்கிறது. குறிப்பாக, கேரள முதல்வர், ஆந்திராவை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி, தமிழ் போராளி, கேரள குடிசைப்பகுதியின் குற்றப் பின்னணி கொண்ட மக்கள், இவர்களை சுற்றி நடக்கும் கதையின் முடிவு ராஜஸ்தானில் நடப்பது, என்று மிகப்பெரிய சுற்று சுற்றியிருக்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த விதம், நடிகர்களிடம் வேலை வாங்கியது மற்றும் மேக்கிங் ஆகியவை, ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், அதில் சொல்லப்பட்ட உண்மைக்கு புறம்பான கருத்தியல் மற்றும் காட்சியமைப்புகளால் தமிழகர்களின் கண்டனத்திற்குரிய மலையாளப் படங்களின் வரிசைக்கு தள்ளப்படும்.

மொத்தத்தில், ‘அனந்தன் காடு’ தமிழ்நாட்டுக்கு கேடு.

ரேட்டிங் 2.5/5