காட்டின் பெரிய அண்ணன் பிரையர், அவன் தம்பி பிராம்பள் மற்றும் அவர்களின் நண்பன் விக் ஆகியோர், புராண நியான் (Nian) மான்ஸ்டரை சந்திக்கிறார்கள். அந்த மான்ஸ்டர் தனது மாய சக்திகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, அவர்களை மாய உலகமான ஈவ் சிட்டிக்கு அழைத்துச் செல்கிறது. பிரையர் தன் “பெரிய அண்ணன்” பதவியை இழந்து, மூவரிலும் பலவீனமானவனாக மாறுகிறான். இதனால் ஒரு பெரிய சதி வெளியாகி, மனித உலகமும் அழியாத உலகமும் ஆபத்தில் மாட்டுகின்றன. இந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள், என்பதை காட்சி விருந்தாக சொல்வது தான் ’பூனி பியர்ஸ் : தி ஹிடன் ப்ரொடெக்டர்’.
அனிமேஷன் படம் என்றாலும் புராண பின்னணியில் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் திரைக்கதை கையாளப்பட்டுள்ளதால் சிறுவர்களுடன் பெரியவர்களும் பார்த்து மகிழலாம். குறிப்பாக விக் கதாபாத்திரத்தின் நகைச்சுவை காட்சிகளுக்கு சிறுவர்கள் குலுங்கி குலுங்கி சிரிப்பது போல், டைமிங் நகைச்சுவை வசனங்களுக்கு பெரியவர்களும் சிரித்து மகிழ்வது உறுதி.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் தரமாக அமைந்திருப்பதோடு, போர்க்கள காட்சிகள் மற்றும் பிரமாண்டமான சண்டைக்காட்சிகள் அனிமேஷன் படம் என்ற அடையாளத்டை மறந்து, பிரமிக்க வைக்கும் ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.
நியான் மான்ஸ்டர் புராணத்தை புதுமையாக விளக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் கதையில், சீன புத்தாண்டு பழக்கவழக்கங்களுக்கு பின்னால் உள்ள காரணத்தை நகைச்சுவையாக சொல்லப்பட்டிருப்பது நகைச்சுவையாக இருந்தாலும், நம்மை நேசிப்பவர்களை மதிக்க வேண்டும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், சுய மதிப்பு, கூட்டு முயற்சி ஆகிய நல்ல விசயங்களை மிக அழகாக கையாண்டிருப்பது சிறுவர்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கிறது.
முதல் முறை படம் பார்ப்பவர்களுக்கு சில கிளைக்கதைகள் குழப்பமாக இருந்தாலும், நகைச்சுவை காட்சிகள் அந்த குழப்பத்தில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
’குங்பூ பாண்டா’, ‘அவதார் : தி லாஸ்ட் ஏர்பெண்டர்’ போன்ற படங்களை ரசித்தவர்களுக்கு இந்த படம் அதைவிட சிறந்த அனுபவத்தை கொடுக்கும். பிரமாண்டமான அனிமேஷன் சாகச திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் குழந்தைகளோடு திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய படம். காரணம், மனதுக்கு இதமான கதை, அழகான மற்றும் பிரமாண்டமான காட்சியமைப்பு, விறுவிறுப்பான ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகள் என அனைத்து அம்சங்களும் கொண்ட முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக உள்ளது.
மொத்தத்தில், ‘பூனி பியர்ஸ் : தி ஹிடன் ப்ரொடெக்டர்’ குழந்தைகளுடன் திரையரங்கிற்கு செல்வதற்கான சரியான தேர்வு.
ரேட்டிங் 4/5