Latest News :

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’. எஸ்.வி.ரிஷி பாடல் எழுதி இயக்கியிருக்கும் இந்த இசை ஆல்பத்தில் பேபி லக்‌ஷனா ரிஷி நடித்திருக்கிறார். சந்தோஷ் சாய் இசையமைத்திருக்கும் இப்பாடலை ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம் பிரியங்கா பாடியுள்ளார்.

 

‘எங்க அப்பா’ பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கே.பாக்யராஜ் மற்றும் பேரரசு சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பாடலை வெளியிட்டார்கள். மேலும், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “எங்க அப்பா பாடலை கேட்டோம், பார்த்தோம். அப்பா மீடியா தயாரிப்பில் ’எங்க அப்பா’ ஏசப்பா பாடல். பக்தியும், பாசமும் கலந்திருக்கிறது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் ஏசுவை பற்றிய பாடல் பாடினார்கள், ஆனால் எனக்கு அகிலாண்டேஸ்வரியை பரிசாக வழங்கினார்கள். நமக்கு எம்மதமும் சம்மதம். 

 

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது ஒரு விசயம் நன்றாக தெரிகிறது, தமிழ் திரையுலகில் இருக்கும் ஒட்டு மொத்த நகைச்சுவை நடிகர்களின் கட்டுப்பாடும் பி.ஆர்.ஓ கோவிந்தராஜிடம் தான் இருக்கிறது. அவரை பகைத்துக் கொண்டால் நகைச்சுவை படம் எடுக்க முடியாது போல. சூரி, சந்தானம், வடிவேலு ஆகியோர் மட்டும் தான் இங்கு வரவில்லை. அவர்கள் ஹீரோவாகி விட்டார்கள், இல்லை என்றால் அவர்களும் இங்கு வந்திருப்பார்கள்.

 

கே.பாக்யராஜ் சார் இங்கு வந்திருப்பது இந்த விழாவுக்கு சிறப்பு. அவரது ஆசீர்வாதம் லக்‌ஷனா அப்பாவோட ஆசீர்வாதம் போல, ஏசப்பா ஆசீர்வாதம் போல. இங்கு பக்தி பாடல் வெளியிடப்பட்டது என்றாலும் இங்கு அதிகமாக வெளிப்பட்டது அப்பா பாசம் தான். ஒரு மனுஷனுக்கு பாசம் மற்றும் பக்தி இரண்டுமே முக்கியமாக இருக்க வேண்டும். அது எந்த கடவுளாக இருந்தாலும் சரி, ஏசு, அல்லா, முருகன், பிள்ளையார் என எந்த கடவுளை வணங்கினாலும் சரி, மனிதனுக்கு பக்தி அவசியம் தேவை. பக்தி இல்லை என்றால் நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய்விடுவோம். கடவுள் இருக்கிறார், என்ற நம்பிக்கை வேண்டும். தவறு செய்தால் கடவுள் நம்மை தண்டிப்பார் என்று நினைக்க வேண்டும். அப்போது தான் நம் வாழ்வில் சுய ஒழுக்கம் இருக்கும், இல்லை என்றால் நம்மை கேட்க யாரும் இல்லை, என்ற நினைப்பு வந்துவிடும், அது பல தீய செயல்களில் ஈடுபட வைத்து இறுதியில் நம்மையே அழித்து விடும். அதனால் மனிதனுக்கு பக்தி அவசியம்.

 

எங்க அப்பா பாடல் ஏசப்பா பாடலாக பக்தியாக இருக்கிறது. ஆனால், இப்போது சினிமாவில் பக்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது. முன்பெல்லாம் ஏகப்பட்ட பக்தி படங்கள் வெளியாகும். ஆனால், இப்போது பக்தி படங்கள் வருவதுமில்லை, அதைப் பற்றி நாம் நினைப்பதும் இல்லை, அப்படி வந்தால் பார்ப்பார்களா? என்ற சந்தேகமும் வந்துவிட்டது. பக்தி படம் மட்டும் அல்ல குடும்ப படங்களும் வருவதில்லை, ஒரே வெட்டி குத்து என்ற ரீதியில் தான் தற்போது படங்கள் வருகிறது. அனைத்து பிள்ளைகளுக்கும் அம்மாவை தான் பிடிக்கும், ஆனால் கே.பாக்யராஜ் சாரின் ‘மெளன கீதம்’ படத்திற்கு பிறகு தான் பிள்ளைகளுக்கு அப்பாவை பிடித்தது. ”டாடி..டாடி...ஓமை டாடி...” என்ற பாடலை யாராலும் மறந்திருக்க முடியாது. இப்போதெல்லாம் அதுபோன்ற குடும்ப படங்கள் வருவதில்லை, கலாச்சாரங்களை சீரழிக்கும் படங்கள் தான் அதிகம் வருகிறது. ஆனால், இந்த சமயத்தில் இதுபோன்ற பக்தி பாடலை கேட்கும் போது ஆறுதலாக இருக்கிறது.

 

இந்த நிகழ்ச்சியால் பலருக்கு அவங்க அப்பாவின் நினைவு வந்திருக்கும், எனக்கு என் அப்பாவின் நினைவு வந்தது. நான் இயக்குநரான பிறகுய் கூட அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஒரே ஒரு முறை என்னிடம் அவர் ஒன்றை மட்டும் கேட்டார். அது என்னவென்றால் ஒரு புத்தகம். பாக்யா வார இதழில், கேள்வி பதில்கள் என்ற ஒரு பக்கத்தை பாக்யராஜ் சார் எழுதி வந்தார். அவை ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தை என் அப்பா என்னிடம் முதல் முறையாக கேட்டார். அதற்கு முன்பு, நான் உதவி இயக்குநராக வேலை செய்த போது, எனக்கு ஊதியம் கொடுத்தார்கள். நான் சம்பாதித்த முதல் சம்பளம் என்பதால், அதை செலவு செய்யாமல் வைத்திருந்து ஊருக்கு சென்ற போது என் அப்பாவிடம் கொடுத்தேன், அவர் அதில் ஒரு வெள்ளி மோதிரத்தை வாங்கி போட்டுக்கொண்டார். என் பிள்ளை சம்பாதித்த முதல் சம்பளத்தில் இருந்து வாங்கிய மோதிரம் என்று என் நினைவாக என் அப்பா விரலில் இன்றளவும் அணிந்திருக்கும் அந்த மோதிரத்தை பார்க்கும் போது நான் கண் கலங்கிவிடுவேன். அதனால், அப்பா மீது பிள்ளைகள் பாசம் வைத்திருப்பதை விட பிள்ளைகள் மீது அப்பாக்கள் தான் அதிகம் பாசம் வைத்திருக்கிறார்கள். அம்மாவின் பாசத்தை நாம் உணர்ந்துவிடலாம், ஆனால் அப்பாவின் பாசத்தை உணர்வதற்கு நாம் பக்குவப்பட வேண்டும், அதற்கான காலம் வரும் போது அப்பாவின் பாசம் நமக்கு தெரிய வரும். நாம் அப்பாவான பிறகே அந்த பாசத்தை உணர முடியும்.

 

ஆண் குழந்தை பெற்றால் அரை அப்பா, பெண் குழந்தை பெற்றால் தான் அது முழு அப்பா, அப்போது தான் பலர் அப்பாவாக உணர்வார்கள். ரிஷி அவர்கள் ரக்‌ஷனா என்ற குழந்தையை பெற்றெடுத்து,அவரை ஒரு நட்சத்திரமாக உருவாக்கியிருக்கிறார். பாடலில் அவரது உதட்டு அசைவு மிக நேர்த்தியாக இருந்தது. குட்டி பத்மினி, ஸ்ரீதேவி, மீனா, ஷாலினி உள்ளிட்ட பலர் குழந்தை நட்சத்திரமாக மிகப்பெரிய வெற்றி பெற்றார்கள். அவர்களின் வரிசையில் பேபி லக்‌ஷனாவும் பெரிய நடிகையாக உருவாக வேண்டும். அப்பாவின் கனவுகள், லட்சியம் ஆகியவை எங்கேயாவது விடுபட்டிருந்தால், பிள்ளைகள் மூலம் நிறைவேற்ற பார்ப்பார்கள், தனக்கு கிடைக்காத வெற்றி நம் பிள்ளைகளுக்கு கிடைத்தால் மகிழ்ச்சியடைவார்கள். அது போல் ரிஷி சார் லக்‌ஷனாவின் வெற்றியை அவரது வெற்றியாக கொண்டாடுவார்.

 

இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், பக்தி பாடல் என்றாலும் அதை அழகாக அனைவரும் ரசிக்கும்படி கமர்ஷியலாக இசையமைத்திருக்கிறார். அவருக்கு என்வாழ்த்துகள், இன்னும் பல பெரிய உயரங்கலுக்கு செல்ல வேண்டும். இந்த பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள், பாடகி பிரியாங்காவுக்கு வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

 

Enga Appa

 

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் பேசுகையில், “லக்‌ஷனா ரிஷி என்பது பெற்றோர் வைத்த பெயர், என்னை பொருத்தவரை அவர் பெயர் லட்சிய ரிஷி தான். இன்று அவர் முதல் படிக்கட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதை தொடர்ந்து பல படிகட்டுகளில் அவர் அடியெடுத்து வைத்து பல உயரங்களை தொட வேண்டும்.

 

அப்பா என்றதும், பலர் இங்கு அப்பா பற்றி சிறப்பாக பேசினார்கள். இதில், ரிஷியின் உழைப்பு மற்றும் முயற்சி மிகவும் முக்கியமானது. குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய கலை, அது எல்லோராலும் முடியாது. கல்யாண ஆல்பத்தில் ஏன் நான் இல்லை, என்று கேட்பார்கள். அதை சமாளிக்க நாம் என்ன சொன்னாலும், அதை வைத்து அடுத்த கேள்வியை கேட்பார்கள், அந்த அளவுக்கு விவரமாக இருக்கிறார்கள். அதேபோல் நம் நினைப்பதை அவர்கள் மீது திணிக்க கூடாது. அந்த குழந்தையின் மனநிலை என்ன என்று தெரிந்துக்கொண்டு பண்ண வேண்டும். அந்த வகையில் ரிஷி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பயணித்தவர், அவரால் அது முடியாமல் போனதால் தன் மகள் மூலம் சாதிக்க நினைக்கிறார். அதை அந்த குழந்தையும் சரியாக செய்திருக்கிறார். அது எல்லோராமும் முடியாது, அதற்கான அனைத்து தகுதியும் அந்த குழந்தையிடம் இருக்கிறது. இதை தொடர்ந்து, லக்‌ஷனா ஒவ்வொரு படியும் முன்னேற்றம் காணப்போகிறார், அதற்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அப்பா - அம்மா இவ்வளவு தூரம் குழந்தை மீது அக்கரை கொண்டு செயல்படுகிறார்கள், இதுவே அந்த குழந்தையை மிகப்பெரிய இடத்தை தொட வைத்துவிடும். எனவே, லக்‌ஷனா ரிஷி, லட்சிய ரிஷியாக தொடர்ந்து வெற்றி பெறுவார், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

Related News

10047

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

‘திரைவி’ டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
Wednesday September-18 2024

நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் பி...

Recent Gallery