Latest News :

”நான் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன்” - ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழாவில் பிரபு தேவா பேச்சு
Monday September-23 2024

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபு தேவா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பேட்ட ராப்’. இதில் வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள் நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் படம் குறித்து நடிகர் பிரபு தேவா பேசுகையில், “இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம், என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருந்தது.  ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, பக்ஸ், வையாபுரி, ஜே பி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷமாக இருந்தது. 

 

இமான் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் எனக்கு அவர் ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன். அவருடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர் எப்போதும் பாசிட்டிவ்வானவர். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார்.

 

நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் தான் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள்.  நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன். 

 

பாலிவுட் நடிகர் சல்மான்கான் 'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாமா..? என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார்.  அதனால் 'பேட்ட ராப் ' படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக நேர்த்தியாகவும் , திறமையாகவும் திட்டமிடுகிறார். பயங்கர புத்திசாலி. அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தால் உச்சம் தொடுவார்.‌

 

இந்தப் படத்தில் இயக்குநரும், கதாசிரியர் தினிலும் இணைந்து உருவாக்கிய திரைக்கதை எனக்கு பிடித்திருந்தது. நான் லீனியர் பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும். தயாரிப்பாளரும், இயக்குநரும் மிகச் சிறந்த நண்பர்கள். அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றவும், பயணிக்கவும் விரும்புகிறேன். 

 

நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா..! அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.  

 

செப்டம்பர் 27ஆம் தேதியன்று 'பேட்ட ராப்' வெளியாகிறது. இதற்காக முதலில் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தையை எழுதியவர் அவர்தான். அதனுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மானுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஜோபி பி சாம் பேசுகையில், ”என் தொழில் சார்ந்த வாழ்க்கை தமிழகத்திலிருந்து தான் தொடங்கியது. 2000 ஆண்டில் ஸ்ரீ பெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணியின் போது பிரபலமான தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினேன். அந்தத் தருணத்தில் ஏராளமான தமிழர்கள் எனக்கு நண்பர்களாக கிடைத்தார்கள். இதை தொடர்ந்து தற்போது தமிழில் திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறேன். தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள்.‌ அதனால் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்தில் முதன் முதலாக பணியாற்றத் தொடங்கி எனக்கு நண்பர்கள் கிடைத்த மாதம் செப்டம்பர். அதே செப்டம்பர் மாதத்தில் தமிழில் முதன் முதலாக தயாரித்த 'பேட்ட ராப்' எனும் திரைப்படம் வெளியாகிறது.  இதனை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும். எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

 

இயக்குநர் எஸ் ஜே சினு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இந்த தருணம் ... கனவு நனவான தருணம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வருகை தந்து பிரபுதேவா மாஸ்டரை சந்தித்து கதையை சொன்னேன்.  அந்த நிமிடத்தில் இருந்து இந்த நிமிடம் வரை இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெறும் தருணம் வரை... பிரபுதேவாவின் ஒத்துழைப்பு வியக்க வைக்கிறது. அத்துடன் இந்த படத்திற்கான வளர்ச்சியில் இறைவனின் ஆசியும் இருப்பதை உணர்கிறேன்.‌ இதனால் கடவுளுக்கும், தயாரிப்பாளருக்கும் , இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

இந்தப் படம் உருவானதற்கு முதல் காரணம் என்னுடைய நண்பரும் தயாரிப்பாளருமான ஜோபி பி சாம். இவருடைய ஆதரவு இல்லை என்றால் இந்த நிகழ்வு இல்லை. இந்தப் படத்திற்காக நான் சொன்ன அனைத்து செலவுகளையும் மறுக்காமல் முக மலர்ச்சியுடன் செய்தார்.  படப்பிடிப்பு தருணங்கள் தொடங்கி தற்போது இந்த நிகழ்வு வரை படத்திற்கு முக்கியத் தூணாக இருப்பவர் தயாரிப்பாளர். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

இதனைத் தொடர்ந்து பிரபு தேவா மாஸ்டர். ஒரு புது இயக்குநராக இருந்தாலும்.. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரை சந்தித்து கதையை சொன்ன போது, 'முழு திரை கதையுடன் வாருங்கள். இணைந்து பணியாற்றலாம்' என்றார். அதன் பிறகு கதாசிரியர் டினிலுடன் இணைந்து அவரிடம் முழு கதையையும் விவரித்தோம். அவரை சந்தித்த தருணத்திலிருந்து அவரிடம் உள்ள நேர்நிலையான அதிர்வலை எங்களை உற்சாகமடையச் செய்தது.  இந்த படத்திற்காக அவர் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க இயலாது. படப்பிடிப்பு நடைபெற்ற 65 நாட்களிலும் அவர் படப்பிடிப்பு தளம் முழுவதையும் மகிழ்ச்சியாகவே வைத்திருந்தார். இதற்காக இந்த தருணத்தில் அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

இந்த படத்திற்கு நாங்கள் 'பாட்டு அடி ஆட்டம் ரிப்பீட்டு' என டாக் லைனை இணைத்திருக்கிறோம்.‌ இதனை இசையமைப்பாளர் இமானை சந்தித்தபோது சொன்னேன். அவரும் இதனை உணர்ந்து படத்திற்காக பத்து பாடல்களை இசையமைத்து வழங்கி இருக்கிறார்.  இந்த படத்தின் முக்கிய அம்சமே இன்னிசைதான். அதனை அதிரடியாக வழங்கி உற்சாகப்படுத்திய இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

 

படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை வேதிகா.‌ சிறந்த நடிகை மட்டுமல்ல அற்புதமான நாட்டிய கலைஞரும் கூட. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை சன்னி லியோன் எங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்த பரிசு. அவர் எப்போதும் பரபரப்பாகவே இருந்தார்.  இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தோம். அதன் பிறகு அவரை தொடர்பு கொண்டு மாஸ்டர் பிரபுதேவா உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று சொன்னோம். அவர் பிரபுதேவா என்று சொன்னவுடன் வேறு எதை பற்றியும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார்.  இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், நடன இயக்குநர், சண்டை பயிற்சி இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி ஆனந்த் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

தமிழ் திரையுலகில் நேர்மையாகவும், மரியாதையுடன் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள் என்பதை இந்த படத்தின் பணிகள் நடைபெற்ற போது தெரிந்து கொண்டேன். இதன் காரணமாகவே ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விரைவில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். 

 

27 ஆம் தேதி இன்று திரையரங்கில் வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த திரைப்படம் ஃபேமிலி வித் மியூசிகல் என்டர்டெய்னர். பத்து வயது முதல் அறுபது வயது வரை உள்ள அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார். 

 

Petta Rap

 

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ”கேரளாவில் இருந்து கிளம்பி தமிழ் திரையுலகத்திற்கு வருகை தந்து, இந்த திரைப்படத்தை இந்த குழு உருவாக்கி இருக்கிறது. இதற்காக முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  படத்தின் இயக்குநர் சினு என்னை சந்தித்து, 'பிரபுதேவா மாஸ்டர் - பாட்டு, அடி, ஆட்டம், ரிப்பீட்டு' என சொன்னதுடன் மியூசிக்கல் என்டர்டெய்னர் எனக் குறிப்பிட்டார். இதை சொல்லும்போது சுவாரசியமாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெற்ற கொண்டிருந்த தருணத்தில்.. இசைப்பணியும் நடைபெற்றது. படத்திற்கு அந்தந்த தருணங்களில் பாடல்கள் அவசியம் என்று சூழல் உருவானது. அதற்காக இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டு இருந்தோம். படத்திற்கு பின்னணி யிசையையும் நிறைவு செய்து இருக்கிறேன். அதில் ஏராளமான திரைப்பட பாடல்கள் சின்ன சின்னதாக இடம் பிடித்திருக்கிறது. லைட் ஹார்ட்டட் ஃபிலிமாக உருவாக்கியிருக்கிறது.  இந்த திரைப்படம் இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவு தேவை. 

 

நான் பிரபுதேவா மாஸ்டரின் ரசிகன்.‌ அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி. வேதிகா மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

 

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “இந்நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநரும் மேடையில் பேசினார்கள். ஒருவர் தமிழிலும், மற்றொருவர் மலையாளத்திலும் பேசினார்கள். அவர்களின் பேச்சு அனைவருக்கும் புரிந்தது.  இதற்காக அவர்கள் இருவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன்.‌ நான் எழுதிய பாடலுக்கான காட்சியாக்கம் வியப்படையச் செய்தது. இயக்குநர் சினு அற்புதமான மனிதர்.‌ அவருக்கு முழுமையாக தமிழ் தெரியவில்லை என்றாலும் பாடல் வரிகளை ரசித்தார். அவருடைய ரசனையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். 

 

இசையமைப்பாளர் இமானின் தொடக்க காலகட்டத்தில் இருந்து அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். எல்லா விதமான பாடல்களையும் வழங்கி தமிழ் திரையுலகில் இன்று மிக முக்கியமான இடத்திற்கு உயர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து தொடர்ந்து பாடல் எழுத வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. பிரபுதேவா மாஸ்டர் நடித்த 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற படத்தில் தான் அவருக்காக பாடலை எழுதத் தொடங்கினேன். நடிகராக இருந்த அவர் இயக்குநராக உயர்ந்த பிறகும்.. அவர் நடன இயக்குநராக பணியாற்றும் படங்களிலும்.. என ஏராளமாக பாடல்களை எழுதியிருக்கிறேன். 

 

வெகு சில நடிகர்கள் மட்டும்தான் பாடல்கள் குறித்து பாடலாசிரியருடன் தொடர்பு கொண்டு தங்களது கருத்துகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.‌ அதில் பிரபு தேவா மாஸ்டர் முக்கியமானவர். அவருக்கு பாடலாசிரியர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் பணியாற்றிய ஏனைய பாடலாசிரியர்களான மதன் கார்க்கி, மணி அமுதவன், பார்வதி மீரா ஆகியோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார். 

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், ”இயக்குநர் சினு படப்பிடிப்பு தளத்தில் மிக வேகமாக பணியாற்றினர். 'பேட்ட ராப்'- 90களில் இந்தியா முழுவதும் ஒலித்த பாடல். பேட்ட ராப் ஒரு வெற்றிகரமான வார்த்தை. முப்பது ஆண்டு கழித்து அந்த வார்த்தையை தலைப்பாக கொண்டு ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். பிரபுதேவா முப்பது ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் என்றால்.. அது மிகப்பெரிய விசயம். அவருடைய நடனத்தின்போது ரசிகர்கள் அவருக்கு எலும்பு இருக்கிறதா? இல்லையா? என பேசிக்கொள்வார்கள். இப்போது வரை எலும்பு வளரவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. அவரிடம் ஏற்பட்டிருக்கும் ஒரே ஒரு மாற்றம்.. அவருடைய தாடியில் நரை  தென்படுகிறது. ஆனாலும் அவர் ஆற்றலுடன் நடித்தும் வருகிறார். நடனமாடியும் வருகிறார்.  

 

பிரபுதேவாவின் அறிமுகம் எளிதாக இருந்தாலும், அவருடைய இன்றைய முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கடின உழைப்பும், திறமையும், தொழில் மீதான பக்தியும் தான் காரணம்.‌  அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட ராப் எனும் திரைப்படத்தில் அவருடைய ஆற்றலும், திறமையும் நிறைந்திருக்கும். அதனால் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும்.‌ 

 

தற்போது வெளியாகும் திரைப்படங்களில் நிறைய வன்முறை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது.‌ ஆனால் இது போன்ற படங்களில் இருந்து 'பேட்ட ராப்' முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். கலகலப்பான காமெடி ...அதிரடி சண்டை காட்சி... இனிமையான பாடல்கள்.. என எனது அற்புதமான  கமர்சியல் கலவையுடன் தயாராகி இருக்கிறது. பிரபுதேவா மாஸ்டருக்கு ஏற்ற வகையில் கதையும் இருக்கிறது.‌ இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் தயாரிப்பாளர் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார். 

 

நடிகை சன்னி லியோன் பேசுகையில், ”இந்த படத்தில் நடனமாடுவதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடியது மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

 

நடிகை வேதிகா பேசுகையில், ”நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நடித்திருக்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து தமிழில் இந்தப் படத்தில் நிறைய பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதுவரை நடிப்புத் திறமை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் தான் நாட்டியமாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பிரபு தேவா மாஸ்டர் உடன் இணைந்து நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பிரபு தேவா உடன் இணைந்து நடிக்க வேண்டும், என்ற ஆசை இருந்தது.  அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. 

 

நான் பிரபு தேவா நடனமாடி வெற்றி பெற்ற பாடல்களை மும்பையில் மேடையில் ஆடியிருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும், நடனமாடியதும் மறக்க இயலாத தருணங்கள். அதற்காக நிறைய முறை ஒத்திகை பார்த்தேன். நான் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்கிறேன் என்றதும் என்னுடைய வட இந்திய நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஏனெனில் பிரபு தேவா சர்வதேச அளவிலான புகழ்பெற்ற அடையாளம். அதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

படத்திற்கு என்ன தேவையோ அதனை தாராளமாக வழங்கி படத்தின் தயாரிப்பு தரத்தை உயர்த்தி இருக்கிறார் தயாரிப்பாளர் ஜோபி பி சாம். இயக்குநர் சினு.. ஒவ்வொரு காட்சியை திரைமொழியாக உருவாக்கும் போது தனக்கான தனித்துவமான பாணியை பின்பற்றுகிறார்.‌ அதனை படப்பிடிப்பு தளத்தில் உணர முடிந்தது.  அவருக்கு இந்தப் படம் பெரிய வெற்றியை அளிக்கும். 

 

இந்த திரைப்படத்தில் இசை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.‌ இசையமைப்பாளர் இமானும் இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார். அற்புதமான பாடல்களையும், நடனத்திற்கான இசையை வழங்கியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 27 ஆம் தேதி என்று வெளியாகும் 'பேட்ட ராப்' படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். 

 

வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘பேட்ட ராப்’ திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Related News

10049

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery