Latest News :

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு அதன் ஊடாக அழகான ஒரு காதல் கதையை இதில் சொல்லி இருந்தார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இந்த இரண்டும் சேர்ந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட படம் தொடர்பான அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நேற்று மாலை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸுக்கு முன்னால் ஒரு பிரஸ்மீட் நடக்கும். அதற்கு பின்னால் ஒரு சக்சஸ் மீட் நடக்குமா என தெரியாது. ஆனால் இந்த படத்திற்கு நாங்கள் பிரஸ்மீட் வைக்கவில்லை. இப்போது சக்சஸ் மீட் வரை வந்துள்ளோம். அந்த வகையில் இது எனக்கு ஒரு ஸ்பெஷல் மேடை. தியேட்டரில் சென்று படம் பார்க்கும் ரசிகர்களை சந்தித்தபோது, அவர்கள் உற்சாகத்தை பார்த்து நாங்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறோம் என அவர்களிடம் சொன்னோம். ஆனால் அவர்களோ உங்களைவிட நாங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இந்த படத்தை பார்த்து ரசித்தோம் என்று கூறியது இன்னும் அதிக சந்தோஷத்தை தந்தது.

 

இந்த படம் ஹிட்டாகும் என தெரியும். ஆனால் இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இந்த பெருமை எல்லாம் எங்களது கேப்டன் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு தான் சேரும். கிரிக்கெட் கதையிலும் கிராமத்து கதையிலும் நடிக்க வேண்டும் என் நீண்ட நாள் ஆசை இரண்டுமே இந்த ஒரே படத்தில் எனக்கு நிறைவேறியது அதிர்ஷ்டம் தான். அதற்கு தயாரிப்பாளர்கள் லக்ஷ்மன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். இயக்குனர் தீவிரமான விஜயகாந்த் ரசிகர். அதை ஸ்கிரிப்ட் படிக்கும் போது உணர முடிந்தது. ஆனால் தியேட்டரில் படம் பார்க்கும் போது தான் விஜயகாந்தின் ஆசீர்வாதம் எங்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது” என்றார்.

 

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசுகையில், “இயக்குநர் சொன்ன ஐடியா எங்களுக்கு பிடித்து போய் நட்சத்திரங்களிடம்  கூறியபோது அனைவருமே ஒரு ஈடுபாட்டுடன் இந்த படத்திற்குள் வந்தார்கள். ஒரு குழுவாக செட் ஆன போது மனதிற்கு நிறைவாக இருந்தது. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே இது ஒரு பெயர் சொல்லும் படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. பத்திரிக்கையாளர்களும் ரசிகர்களும்  ஏகோபித்து ஆதரித்த படமாக இதை பிரின்ஸ் பிக்சர்ஸில் இருந்து கொடுத்தது ரொம்பவே மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இது வெறுமனே ஒரு ஸ்போர்ட்ஸ் படம் அல்ல. இதற்குள் மனித உணர்வுகளை காதல் கலந்து சொல்லும் போது எந்த அளவிற்கு சொன்னால் அது சுவாரசியமாக இருக்கும் என்பதை உணர்ந்து இதை உருவாக்கினோம். பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் இதன் உருவாக்கும் பணி கடினமாக இருந்தது. பத்திரிக்கையாளர்களின் பாராட்டுடன் இதை தியேட்டர்களில் ரசிகர்களுக்கு எடுத்துக்கொண்டு நம்பிக்கையுடன் சென்றபோது அவர்கள் கொடுத்த வரவேற்பும் எங்களை உற்சாகப்படுத்தியது. என்னுடைய எல்லா படங்களுக்கும் எனக்கு பின்னணியில் தூணாக இருப்பது என்னுடைய இணை தயாரிப்பாளர் வெங்கடேஷ். அவருக்கும் இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இரண்டு ஹீரோக்கள் என்கிற கதையில் எந்த ஈகோவும் இல்லாமல் குறித்த நேரத்தில் நடித்துக் கொடுத்த ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுக்கும் நன்றி” என்றார்.

 

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசுகையில், “அருண்ராஜா காமராஜின் ‘கனா’ படத்தில் நான் பாடல் எழுதியபோது அங்கே உதவியாளராக பணியாற்றியவர் தான் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. நான் படம் பண்ணும் போது நிச்சயமாக உங்களை கூப்பிடுவேன்.. அப்போது நீங்கள் எனக்கு பாடல் எழுதி தர வேண்டும் என்று கூறியிருந்தார். இயக்குநர் கூறிய காட்சிகளை மனதில் நிறுத்தி என்னால் அழகாக பாடல் வரிகளை எழுத முடிந்தது. குட் நைட், லவ்வர் என தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வருகிறார் இயக்குனர் ஷான் ரோல்டன். இன்று எனது பிறந்தநாள் என்பதால் இந்த வெற்றியை எனது பிறந்தநாள் பரிசாக எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.

 

கலை இயக்குனர் வீரமணி கணேசன் பேசுகையில், “இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை 5 மணி நேரம் படித்தேன். படித்து முடித்ததுமே நிச்சயமாக இந்த படம் ஹிட் என இயக்குநரிடம் கூறினேன். அவர் வரிகளில் என்ன எழுதி இருந்தாரோ அதை அப்படியே காட்சியில் கொண்டு வந்துள்ளார்” என்றார்.

 

படத்தொகுப்பாளர் மதன் பேசுகையில், “தயாரிப்பாளர் என்னை அழைத்து இயக்குநரிடம் சென்று கதை கேளுங்கள் என கூறினார். நான் இயக்குநரிடம் எனக்கு முழு கதை வேண்டாம் படத்தின் லைன் மட்டும் சொல்லுங்கள் என்னுடைய ஸ்டைல் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும் என்று சொன்னேன். இயக்குநர் உங்களுக்கு எது வசதியோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். எங்கள் இருவருக்குமே கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் என்பதால் எளிதாக ஒன்றிணைந்து பணியாற்ற முடிந்தது. சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள கிரிக்கெட் கிரவுண்டில் தான் 25 வருடங்கள் பெரும்பாலும் இருந்தேன். படத்தில் பால சரவணன், ஜென்சன் இருவரும் கமெண்ட் எடுத்துக் கொள்வது போல எங்கள் போட்டிகளிலும் அதேபோல கலாட்டாக்கள் நிறைய இருந்தது. அதை படத்துடன் அழகாக தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. ரெண்டே முக்கால் மணி நேர படத்தை 20 நிமிடங்கள் சுருக்கி படத்தொகுப்பு செய்வது தான் சவாலானதாக இருந்தது. எங்கள் இருவருக்கும் கிரிக்கெட் பிடிக்கும் ஆனால் கிரிக்கெட் பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தை பார்த்தால் ரசிக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் தான் இதை உருவாக்கினோம். நான் சொன்ன சில ஆலோசனைகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு படத்தொகுப்பின் போது துணிந்து கிளைமாக்ஸை மாற்றினார் இயக்குநர்” என்றார்.

 

நடிகை தேவதர்ஷினி பேசுகையில், “ஒரு அழகான படம் எப்படி சென்றடைய வேண்டுமோ அதே போல சென்றடைந்து இருக்கிறது. இந்த படத்தில் குடும்பம், காதல், விளையாட்டு என எல்லாமே இருந்தாலும் என்னை பொறுத்தவரை இந்த படத்தின் அடிநாதம் என்பது காதல், ரொமான்ஸ் தான். அதை ரொம்பவே அழகாக வித்தியாசமான கோணத்தில் காட்டி இருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. ஹீரோயினைத் தாண்டி அவரது அம்மாவிற்கும் இந்த படத்தில் ரொமான்ஸ் வைத்து இருந்தது தான் செம க்யூட். நடுத்தர வயது ரொமான்ஸ் பெரும்பாலான படங்களில் பார்க்க முடியாது. இதில் அழகாக காட்டியதற்காக நன்றி. படப்பிடிப்பின்போது இயக்குநரிடம் சில வசனங்களை சேர்த்துக் கொள்ளலாமா என கேட்பேன். முதலில் ஸ்கிரிப்ட்டில் இருப்பதை பேசி விடுங்கள். அதன் பிறகு பார்க்கலாம் என்பார். ஆனால் கடைசியாக அவர் என்ன எழுதியிருந்தாரோ அதைத்தான் படத்தில் கொண்டு வந்திருக்கிறார். அதை பார்க்கும்போது அவர் செய்தது தான் சரி என்று தோன்றியது. அந்த வகையில் எங்களை அடக்கி வைத்ததற்கு நன்றி அம்மா கேரக்டர் தானே என்று முழு கதையும் எனக்கு சொல்லவில்லை. படத்தில் கிளைமாக்ஸ் பார்க்கும்போது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது” என்றார். 

 

Lubber Pandhu Success Meet

 

நடிகை சுவாசிகா பேசுகையில், “16 வருடத்திற்கு முன்பு தமிழில் நான் முதல் படம் பண்ணினேன். அப்போது பல கனவுகளுடன் இங்கே வந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் கேரளாவுக்கு சென்று விட்டேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் இப்படி ஒரு படம் எனக்கு கம்பேக் ஆக கிடைத்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு இரண்டாவது இன்னிங்ஸ் போல இதை உணர்கிறேன். தயாரிப்பாளர், இயக்குனர் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனாலும் எப்படி என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. 16 வயதில் உடைந்து போன அந்த கனவு இப்போது மீண்டும் நனவாக துவங்கியுள்ளது. இன்னும் நிறைய தமிழ் படங்கள் பண்ண வேண்டும். இங்கேயே வீடு கட்டி செட்டில் ஆக வேண்டும்.

 

இயக்குநர் தமிழரசன் இந்த யசோதா கதாபாத்திரத்தை நான் நன்றாக பண்ணி இருக்கிறேன் என படப்பிடிப்பு தளத்தில் ஒருமுறை கூட நீங்கள் சொன்னதில்லை. இப்போதாவது சொல்லுங்கள். நான் நன்றாக பண்ணி இருக்கிறேனா என்று ? எல்லோரும் சொன்னதை விட அவர் அந்த வார்த்தையை சொல்ல வேண்டும் என்பதற்காக இவ்வளவு நாட்கள் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்காவது சொல்வார் என நினைக்கிறேன். என்னுடைய கெத்து தினேஷ் இன்று இங்கே வரவில்லை. அவருடன் ஏற்கனவே குக்கூ படத்தில் இணைந்து நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து நான் அவரது ஜோடியாக நடிக்கிறேன். அதுவும் ஒரு சந்தோஷம். எனக்கு ஒரு புதிய வாழ்க்கை கொடுத்ததற்கு மொத்த படக்குழுவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

 

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், “இந்த படத்திற்கு லப்பர் பந்து என்கிற டைட்டில் பொருத்தமாக இருக்கிறது என எல்லோரும் சொன்னார்கள். ஆனால் முதலில் இதை வைத்தபோது எனக்கு பிடிக்கவில்லை. உதவி இயக்குனர்கள் தான் இந்த டைட்டிலை கொடுத்தார்கள். அட்டகத்தி தினேஷிடம் இந்த படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்த போது படத்தில் அவருக்கு 40 வயது என்றும் அவருக்கு சஞ்சனா மகள் என்றும் கூறிய போது நான் எதிர்பார்த்த அளவிற்கு அவர் அதிர்ச்சி அடையவில்லை. அதன் பிறகு இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் சொல்லு என கேட்டவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். படத்தில் அவர் விஜயகாந்த் ரசிகராக இருந்தார். நான் எந்த அளவிற்கு விஜயகாந்தை ரசிக்கிறேனோ அதே அளவிற்கு அவரும் ஆராதிக்கிறார் என்பதை இந்த ஒன்றரை வருட காலத்தில் நான் புரிந்து கொண்டேன். அது கூட அவரை இந்த படத்திற்குள் இழுத்து வந்திருக்கலாம்.

 

சுவாசிகா அருமையாக நடித்திருக்கிறார். அவரை வேண்டுமென்று பாராட்டாமல் இருக்கவில்லை. நான் பாராட்டுவதை விட ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவருமே அவரது நடிப்பை பாராட்டினார்கள். வேடிக்கை பார்க்க வந்த என் மனைவி கூட என் தலைவி தாண்டா கெத்து என்று கூறினார். சுவாசிகா என்னிடம் கதை கேட்க ஆரம்பிக்கும் முன்பே எனக்கு தமிழில் ஒரு நல்ல ரீ என்ட்ரியாக இது இருக்க வேண்டும் என உணர்ச்சி பெருக்குடன் கூறினார். ஒரு ஹீரோயினுக்கு அம்மாவாக ஒரு ஹீரோயின் என்கிற கதாபாத்திரம் என்று கூறியதுமே ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது அவருக்கு மகிழ்ச்சி என்றால் உண்மையிலேயே இந்த படம் வெற்றி தான். தினேஷும் சுவாசிகாகவும் ஒரே கட்டத்தில் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்தார்கள். இந்த படத்தில் அது அவர்களுக்கு கிடைத்திருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.

 

ஹரிஷ் கல்யாணுக்கு படப்பிடிப்பு தளத்தில் நான் நிறைய கஷ்டங்கள் கொடுத்திருக்கிறேன். டார்ச்சர் செய்திருக்கிறேன்.. அவர் நினைத்திருந்தால் தயாரிப்பு தரப்பில் கூறி அதை எல்லாம் அவருக்கு சாதகமாக மாற்றி இருக்கலாம். ஆனால் இந்த கதையை நம்பி, என்னை நம்பி இதுவரை என்னுடன் பயணித்து வருகிறார். தயாரிப்பாளர் லஷ்மனிடம் நான் முதலில் கொண்டு சென்ற கதை ஒரு ரொமாண்டிக் காதல் கதை. அப்படி சொன்னதுமே அவர் வேண்டாம் என கூறிவிட்டார். அவர் எதிர்பார்த்தது வாழ்வியல் சார்ந்த ஒரு கிராமத்து கதையை. அதன் பிறகு தான் இந்த லப்பர் பந்து கதையை ஒரு 20 நிமிடம் கூறினேன்.. சில நாட்களில் கூப்பிடுவதாக கூறினார். இரண்டரை மணி நேரம் கதை கேட்டு கட்டிப்பிடித்து பாராட்டியவர்களே என்னை கூப்பிடவில்லை. இவர் எங்கே கூப்பிட போகிறார் என்று சந்தேகம் இருந்தது. அவரது தண்டட்டி படம் பூஜை போட்ட போது என்னையும் அழைத்து அன்றைய தினமே எனது அடுத்த படத்திற்கு நீ தான் டைரக்டர் என்று ஒப்பந்தம் போட்டு விட்டார்” என்றார்.


Related News

10063

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

கோலிவுட்டை கலக்க வரும் குட்டி நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி!
Thursday September-26 2024

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களின் கனவம் ஈர்த்தவர்கள், பின்னாளில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக உருவெடுத்திருக்கிறார்கள்...

Recent Gallery