Latest News :

மனைவியுடன் சினிமாவில் கால் பதித்த அறிமுக இயக்குநருக்கு நேர்ந்த சோகம்!
Thursday October-03 2024

தமிழ் சினிமாவில் முதல் முறையாக நிஜமான கணவன் மனைவி தம்பதி, சதா நாடார் - மோனிகா செலினா கதையின் நாயகன், நாயகியாக நடித்திருப்பதோடு, இருவரும் இணைந்து இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘இ தகா சைஆ’. கப்புள் கிரியேஷன்ஸ் வழங்க, எஸ்.கே.டி பிலிம் பேக்டரில் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக எஸ்.கே.தனபால் பணியாற்றியிருக்கிறார். 

 

ஆக்‌ஷன் - ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிட இருக்கும் இப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு படம் பற்றி பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்ந சதா நாடார், மனைவியுடன் சினிமாவில் அறிமுகமாகி தான் எதிர்கொண்ட இழப்புகள் பற்றி புலம்பி தள்ளி விட்டார்.

 

தொடர்ந்து பேசிய சதா நாடார், “பெருந்தலைவர் காமராஜ் நினைவு நாளில் இந்த நிகழ்ச்சி நடப்பது பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னையே புதிதாக இருந்தது. சினிமா ஆர்வத்தில் வந்து இங்கே பார்த்தபோது சினிமா வேறொரு பிம்பத்தைக் காட்டியது. யாரை நம்புவது யாரைநம்பக்கூடாது என்று புரியவே இல்லை.

 

இந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்கு முன்னால் நான் இரண்டு கோடி ரூபாய் இந்த சினிமாவில் இழந்தேன். அதற்குப் பிறகுதான் பலதும் புரிந்தது. சினிமாவில் இழந்ததை சினிமாவில் தான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நானே தயாரித்து நானே இயக்கி நானே நடிப்பது என்று தீர்மானித்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். இந்த சினிமாவைக் கற்றுக் கொள்வதற்கு வகுப்புகளுக்கு எல்லாம் செல்வார்கள். ஆனால் நான் 2 கோடி ரூபாய் செலவு செய்து இந்த சினிமாவைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ தவறான ஆட்களைச் சந்தித்து எங்கெங்கோ முட்டி மோதி, இப்போது எல்லா ஆட்களும் நன்றாக சரியாக அமைந்து இந்தப் படம் வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது.அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

பணத்தை எதிர்பார்க்கும் மனிதர்கள் மத்தியில் பன்னிரண்டு ஆண்டுகளாக என்னுடன் நட்பில் இருக்கும் மனிதர் சுதந்திரன், இத்தனை ஆண்டுகளாக என்னிடம் எந்த காசையும் எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் அவசரக்காரன் பரபரப்பாக இருப்பேன். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தை எடுத்த போது நிதானம் காட்டி இந்தப் படம் உருவாவதற்கு ஒரு முதுகெலும்பு போல் இருந்தது என் மனைவி மோனிகா செலினாதான்.அவருக்கு நன்றி.

 

ஒருமுறை வெற்றிமாறன் சொன்னார் படத்துக்கு எடிட்டர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்று. அப்படி நாங்கள் யார் யாரையோ பார்த்து கடைசியில் வந்து சேர்ந்துள்ள  எடிட்டர் பரணி செல்வம்.  எப்படியோ இருந்த இந்தப்படத்தை இப்படி உருவாக்கியதில் அவர் பங்கு பெரியது.அதேபோல் இசையமைப்பாளர் ஜான்சனை பல நாள் காக்க வைத்தேன். அவர் சிறப்பாகச் செய்துள்ளார்.

 

ஏன் சினிமாக்கு வந்தாய்? என்று பலரும் கேட்டார்கள். இன்றும் எத்தனையோ தயாரிப்பாளர்கள் சினிமாவில் வெற்றிகரமாகச் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் ஒரு சிறிய தயாரிப்பாளராக வந்து வளர்ந்து பெரிய தயாரிப்பாளராக படங்கள் தயாரிப்பேன் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.நான் மனம் தளர்ந்த போதெல்லாம் முள்ளை முள்ளால் எடுப்பது போல் சினிமாவில் இருந்து தான் இழந்ததைப் பெற முடியும் என்று ஊக்கமாக என் தம்பிகள் இருந்தார்கள்.இதுவரை  பத்திரிகையாளர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி.  தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

சதா நாடார் என்று அவரது பெயரில் சாதி இணைத்து வைத்திருப்பதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அது என் அடையாளம். நான் எந்தப் பின்புலத்தில் இருந்து வருகிறேன் என்பது தெரிவதற்காக வைக்கப்பட்டது.ஆந்திராவில் கேரளாவில் எல்லாம் கவுடா மேனன், நாயர் என்று பெயருடன் வைத்துக் கொண்டுள்ளார்களே.

 

நான் என்ன சொல்கிறேன் என்றால், இப்போது தங்கலான் என்று ஒரு படம் வந்தது, கர்ணன் என்றொரு படம் வந்தது. தங்கலான ஜாதிப் படமா இல்லையா? சொல்லுங்கள். அதற்காக பா ரஞ்சித் ஜாதி வெறியர் இல்லை என்று சொல்ல முடியுமா?அவர் ஜாதி வெறி பிடித்துதான் படம் எடுக்கிறார்.  சிவ நாடார் இந்தியாவிலேயே பெரிய பணக்காரர்களில் ஒருவர். அவர் ஜாதி வெறி பிடித்தா அப்படிப் பெயர் வைத்துள்ளார் . நான் பெயரில் தான் ஜாதியை இணைத்து வைத்துள்ளேனே  தவிர என் படம் ஜாதியைப் பற்றி பேசவில்லை. பேசாது.” என்றார்.

 

கதாநாயகியாக நடித்துள்ள மோனிகா செலினா பேசுகையில், “எங்கள் அப்பா கன்னடத்தில் இரண்டு படங்கள் எடுத்தார் தாத்தாதான் தயாரித்தார். ஆனால் இரண்டுமே வெளிவரவில்லை.இந்த வகையில் சினிமாவுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது.  இந்தத் திரைப்படத்துக்குள் என்னை என் கணவர்தான் கொண்டு வந்தார். எனக்கு சினிமா பிடிக்கும். நடிப்பது என்று விருப்பப்பட்ட போது இந்தப் படத்தில் நானே கதாநாயகியாக நடிப்பது என்று முடிவானது. சினிமாவில் நுழைந்த பிறகு தான் வெளியில் இருந்து பார்த்த சினிமா வேறு உள்ளே இருந்த பார்க்கிற சினிமா வேறு என்று இருந்தது. அந்த அளவுக்கு அனுபவங்கள் புதிது புதிதாக இருந்தன. தினந்தோறும் பிரச்சினைகள் வரும். எனக்கும் கணவருக்கும் தினசரி சண்டைகள் வரும்.

 

நான் ஒரு காட்சியைச் சரியாக எடுக்க வேண்டும் என்று நிதானம் காட்டுவேன்.அது தாமதம் ஆனாலும் பரவாயில்லை சிறப்பாக வரவேண்டும் என்று நான் நினைப்பேன். அவர் முதல் போட்டுள்ளவர் அல்லவா? அவர் அவசரப்படுவார் .விரைவில் முடிக்க வேண்டும் என்று நினைப்பார். இப்படி எங்களுக்குள் தினசரி சரியாக வர வேண்டும் என்பதில் சண்டை நடக்கும். படம் நன்றாக வந்து இருக்கிறது. பல அனுபவங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்கள் ஆதரவு வேண்டும்.” என்றார்.

 

படத்தை வெளியிடும் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஜெனிஷ் பேசுகையில், “இந்தப் படம் ஒரு புதிய முயற்சி. நிச்சயமாக படம் பார்ப்பவர்களுக்கு எதிர்பாராத ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

 

பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “இவர் துணிச்சலாக சதா நாடார் என்று தனது ஜாதி பெயரைப் போட்டுக் கொண்டுள்ளார்.  இன்று பலரும் ஜாதிப் படம் எடுப்பார்கள் .ஆனால் ஜாதி பெயரைப் போட்டுக் கொள்ள மாட்டார்கள்.ஜாதி பெயரை சொல்ல வெட்கப்படும் நீ இனிமேல் ஜாதிப் படம் எடுக்காதே.உங்கள் ஜாதியை சொல்வதற்கு உங்களுக்கு துணிச்சல் இல்லை என்றால் நீங்கள் எதற்கு ஜாதியை வைத்து படம் எடுக்கிறீர்கள்? 'ல் தகா சைஆ ' அதாவது காதல் ஆசை. இந்தப் படத்தை வெளியிடும் ஜெனிஷ் சிறிய படங்கள் வெளியிட ஆதரவு தருபவர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

Related News

10074

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery