Latest News :

’ப்ளடி பெக்கர்’ காமெடி படம் இல்லை! - இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் விளக்கம்
Friday October-18 2024

’டாடா’, ‘ஸ்டார்’ என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கவின், தற்போது சுமார் 5 படங்களில் நடித்து வருகிறார். இதில் மிக முக்கியமான படமாக ‘ப்ளடி பெக்கர்’ பார்க்கப்படுவதோடு, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இயக்குநர் நெல்சல் திலீப்குமார் தயாரிக்கும் முதல் படம் என்பதோடு, சமீபத்தில் வெளியான இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வைரலானது தான். 

 

அதே சமயம், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படங்கள் போல், அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படமும் முழுக்க முழுக்க பிளாக் காமெடி ஜானர் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அதை மறுத்திருக்கும் படத்தின் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

 

படம் பற்றி கூறிய இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், “படத்தின் முதன்மை கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் தலைப்பு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த கதாபாத்திரம் எதுவும் இல்லாத, எந்த ஆசையும் இல்லாத ஒரு நபராக இருப்பதால் எந்த கவலையும் இன்றி, அனைவரையும் நக்கல் செய்துக் கொண்டு, திமிராக சுற்றி வருவார், அப்படிப்பட்டவருக்கு திடீரென்று ஒரு ஆசை வருகிறது, அதை நோக்கி பயணப்படும் போது வரும் பிரச்சனைகள் தான் கதை. முழுக்க முழுக்க நாயகன் கவினை சுற்றி தான் கதை நடக்கும். அவர் இதில் பிச்சைக்காரராக வருவதால், ‘ப்ளடி பெக்கர்’ என்று தலைப்பு வைத்தோம். இந்த வார்த்தை சவுண்டாக நன்றாக இருப்பதாலும், மக்களிடம் எளிதில் சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் தலைப்பாக தேர்ந்தெடுத்தோம்.

 

இதில் கவின் பிச்சைக்காரராக நடித்தாலும், படம் முழுவதும் அதே வேடத்தில் வர மாட்டார். ஆரம்பத்தில் பிச்சைக்காரராக இருப்பார், அவர் ஏன் அப்படி ஆனார், என்பதற்கான விளக்கமும் சொல்லப்பட்டிருக்கும். திடீரென்று அவருக்கு ஒரு ஆசை வரும், அதை நோக்கி செல்லும் போது ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள் மூலம் அவர் கதாபாத்திரம் மாற்றமடையும், அதுதான் திரைக்கதை.” என்றார்.

 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பாளர் ஆனது எப்படி ?

 

நான் பத்து வருடங்களாக அவருடன் பயணித்து வருகிறேன். வேட்டை மன்னன் படத்தின் போது அவருடன் உதவி இயக்குநராக பணியாற்றினேன், அந்த படம் கைவிட்ட பிறகு தொலைக்காட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிறகு படம் இயக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன். அப்போது நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை ஆரம்பித்த உடன் அவருடன் பணியாற்ற தொடங்கினேன். பிறகு மீண்டும் படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்ட போது, நெல்சனிடம் ஆலோசனைகள் கேட்பேன், அப்படி தான் இந்த படத்தின் ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவர் நன்றாக இருக்கிறது, இதை சரியான தயாரிப்பாளர் மூலம் செய்தால் பெரிதாக வரும், என்று கூறினார். அவருக்கு இந்த கதை மேல் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது, அதனால் தான் ஒரு கட்டத்தில் அவரே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார். 

 

நெல்சன் தயாரித்திருப்பதால் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அல்லது பிளாக் காமெடி படமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள், நிச்சயமாக அப்படி இருக்காது. முழுக்க முழுக்க ஒரு டிராமாவாகவும், திரில்லர் ஜானரிலும் தான் படம் இருக்கும். சில இடங்களில் சில காட்சிகள் நகைச்சுவையாக இருக்கும், ஆனால் ஒட்டு மொத்த படமாக பார்த்தால் இது காமெடி படம் இல்லை.

 

இந்த கதாபாத்திரம் பற்றி எழுதும் போதே கவினை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தீர்களா?

 

நான் திரைக்கதை முடித்த உடன், அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும், என்று நினைத்தேன். ஆனால், இதுவரை இப்படி ஒரு வேடத்தில் நடிக்காதவர்கள், இப்படி ஒரு வேடத்தில் யோசித்து பார்க்காத ஒரு நடிகரை நடிக்க வைத்தால் அது புதிதாக இருக்கும், என்று தோன்றியது. அப்போது தான் கவினிடம் இந்த கதையை சொல்லி ஆலோசனை கேட்ட போது, அவருக்கும் இந்த கதை மீது விருப்பம் இருந்தது. அதனால், அவரையே இதில் நடிக்க வைக்க முடிவு செய்தோம். இதற்காக தோற்றம் ரீதியாக அவர் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவர் ஸ்டார் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான் இந்த படத்தை தொடங்கினோம், அப்போது அவர் இருந்த தோற்றத்தின் மீதே தாடி, மீசை போன்றவற்றை இணைத்து எங்கள் படத்திற்கான தோற்றத்தை வடிவமைத்து விட்டோம். நடிப்பை பொருத்தவரை, கதாபாத்திரத்தின் நடை, சில ரியாக்‌ஷன்கள் ஆகியவற்றை வித்தியாசமாக செய்வதற்காக சில யுக்திகளை மேற்கொண்டிருக்கிறோம். அதன் மூலம் இந்த கதாபாத்திரம் கவனம் ஈர்க்கும்.

 

கவின் தற்போது ஐந்து படங்களில் நடித்து வந்தாலும் எங்கள் படத்திற்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்று கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தினோம். அதில், எந்த ஒரு இடையூறும் இன்றி கவின் கலந்துக்கொண்டார். அவர் மூலம் எங்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பிச்சைக்காரர் கெட்டப் போட்ட பிறகு கூட, இப்படியே வெளியே செல்கிறாயா? என்று அவரிடம் கேட்டதற்கு, ஓகே என்று சொல்லி, தெரிவில் நடந்து சென்றார். அப்போது ஒரு பெண் அவரை நிஜமான பிச்சைக்காரர் என்று நினைத்து 20 ரூபாய் கொடுத்தார்.

 

திமிரு பிடித்த பிச்சைக்காரர் என்றாலே, ‘இரத்தக்கண்ணீர்’ எம்.ஆர்.ராதா நினைவுக்கு வருவார், அதன் பாதிப்பு இதில் இருக்குமா?

 

இந்த கதைக்கருவின் யோசனையை மற்றவர்களிடம் சொன்ன போதே, அதுபோல் இருக்கிறது என்று சொல்வார்கள். அப்போது எனக்கு தெரிந்து விட்டது, அந்த படத்தை மனதில் வைத்து செய்தால் நிச்சயம் எடுபடாது என்று, அதனால் அந்த படத்தின் பாதிப்பு துளி கூட படத்தில் இருக்காது. ஆனால், ‘இரத்தக்கண்ணீர்’ எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தின் தொடர்பு இந்த படத்தில் இருக்கும், அது என்ன என்பதை சொன்னால் கதை தெரிந்துவிடும்.

 

படத்தின் கதாநாயகி யார், அவர் என்னவாக வருகிறார்?

 

படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் என்று சொல்ல முடியாது, முதன்மை பெண் வேடம் ஒன்று இருக்கும். அதில் அக்‌ஷயா ஹரிஹரன் என்பவர் நடித்திருக்கிறார், அவர் தான் படத்தின் கதாநாயகி. ஆனால் அவர் கதாநாயகனுக்கு ஜோடியாக வர மாட்டார், படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக பயணிப்பார். அவர் படத்தில் என்னவாக வருகிறார் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதே சமயம், படத்தில் சிறு காதல் இருக்கும், கவின் ஏன் இந்த நிலைக்கு வந்தார் என்பதை விளக்கும் போது அதில் இருக்கும்.

 

ஒரு பிச்சைக்காரரின் வாழ்க்கை என்பது போல் படம் இருக்குமா?

 

ஒரு கதாபாத்திரமாக தான் பிச்சைக்காரராக வடிவமைத்திருக்கிறேன், மற்றபடி இது பிச்சைக்காரர்களைப் பற்றிய படமாகவும், அவர்களை குறை சொல்வது மற்றும் அவர்களது மனம் நோகும்படியான காட்சிகளை கொண்ட படமாக இருக்காது. இந்த கதைக்கான கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும். பொதுவாக பிச்சைக்காரர்கள் பற்றி எதுவும் இருக்காது. உண்மையாக கஷ்ட்டப்படுகிறவர்கள் பற்றி தவறாக எதுவும் சொல்லிவிட கூடாது, என்பதில் மிக கவனமுடன் இருந்தேன். ஒரு கர்ஷியலான படம், அதன் கதாபாத்திரத்தையும், அதை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் நம்பகத்தன்மையோடு எபப்டி சொல்ல வேண்டுமோ அப்படி தான் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் தலைப்பு நியாயம் சேர்க்கும் வகையில் தான் படம் இருக்கும்.

 

’ப்ளடி பெக்கர்’ படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டாலும், படத்தின் முக்கியமான மையப்புள்ளி என்ன? என்பதில் சஸ்பென்ஸ் வைத்திருக்கும் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், படத்தின் உண்மையான ஜானர் என்ன? என்பதை விளக்கும் வகையில் விரைவில் வெளியாக உள்ள படத்தின் டிரைலர் இருக்கும், என்றும் தெரிவித்தார்.

Related News

10117

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘தருணம்’! - ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது
Wednesday January-29 2025

சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது...

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Wednesday January-29 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...

Recent Gallery