அஜித்தின் ‘ராஜா’, விக்ரமின் ‘காதல் சடுகுடு’, ‘ஜனனம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா உபேந்த்ரா, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். தற்போது ஆக்ஷன் நாயகி அவதாரம் எடுத்திருக்கும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உக்ராவதாரம்’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரியங்கா உபேந்த்ரா வழங்க, எஸ்.ஜி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜி.சதீஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் குருமூர்த்தி கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். நந்தா குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணா பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். இவர் ‘கே.ஜி.எப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் சகோதரர் ஆவார். வேங்கி படத்தொகுப்பு செய்ய, ஆக்ஷன் காட்சிகளை மாஸ் மாதா, அஷோக், சிவு ஆகியோர் வடிவமைத்துள்ளனர். பாடல்கள் மற்றும் வசனம் கின்ணாழ் ராஜ் எழுதியிருக்கிறார். கோவிந்தராஜ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
ஆக்ஷன் குயின் என்ற பட்டத்துடன் நடிகை பிரியங்கா உபேந்தரா ஆக்ஷன் நாயகியாக களம் இறங்கும் இப்படத்தில் ரோபோ கணேஷ், நட்ராஜ், சுமன், சாய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக வைத்து ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 21 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படத்தின் டிரைலரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகி பிரியங்கா உபேந்தரா பேசுகையில், “எங்களை வாழ்த்த வந்திருக்கும் பேரரசு சாருக்கு நன்றி, ஊடகங்களுக்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களை பார்ப்பது மகிழ்ச்சி. சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கிருக்கும் உணவு, கடற்கரை என அனைத்து விசயங்களும் எனக்கு பிடிக்கும். நிறைய படங்களின் நல்ல நினைவுகள் என் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. ‘உக்ராவதாரம்’ எனக்கு முக்கியமான படம், காரணம் இது என் முதல் ஆக்ஷன் படம். இதில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். இது நல்ல மெசஜ் சொல்லும் படமாக மட்டும் இன்றி, காவல்துறை பெண்களின் பாதுகாப்பில் எப்படி பங்கு வகிக்கிறது என்பதை சொல்லும் படமாகவும் இருக்கும். கமர்ஷியல் அம்சங்கள், சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவைகளை கடந்து பெண்களின் சக்தி மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மிக சிறப்பாக காண்பித்திருக்கிறார்கள். எனவே, என் சினிமா பயணத்தில் இது மிகவும் முக்கியமான படம். இந்த படக்குழுவுடன் பணியாற்றியது இனிப்பான நினைவுகளாக இருக்கிறது. இயக்குநர் குருமூர்த்தி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ஊடக நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்து வந்திருக்கிறீர்கள், தொடர்ந்து உங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். அஜித் சாரின் ‘ராஜா’, விக்ரம் சாருடன் ‘காதல் சடுகுடு’ உள்ளிட்ட 5 தமிழ் படங்களில் நடித்திருக்கிறேன். என்னை இப்போதும் தமிழ் ரசிகர்கள் நினைவு வைத்திருக்கிறார்கள், என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று ஒரு பேட்டியில் கூட, “நீங்க தயிர் சாதம் தானே..” என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு என் பட காட்சிகள் மக்கள் மனதில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அதிகமான தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படத்தில் நல்ல மெசஜ் சொல்லியிருக்கிறோம். இது நிச்சயம் மக்கள் பார்க்க வேண்டிய படம். வரும் நவம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
சிறப்பு விருந்தினர் இயக்குநர் பேரரசு பேசுகையில், “ராமர் அவதாரம், நரசிம்மர் அவதாரம், விஷ்ணு அவதாரம் என நிறைய அவதாரங்களை பார்த்து இருக்கிறோம், இப்போது உக்ராவதாரத்தை பார்க்கிறோம். அவதாரம் என்றாலே வெற்றி தான், அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். படத்தின் இயக்குநர் குருமூர்த்தி, ஒளிப்பதிவாளர் நந்தா குமார், ரோபோ கணேஷ் என அனைவருக்கும் வாழ்த்துகள். இங்கு பேசியவர்கள் பிரியங்கா மேடம் பற்றி சொல்லும் அழகு தேவதையாக இருந்தார்கள், என்று சொன்னார்கள். அவர்கள் இப்போதும் அழகாக, தேவதையாக இருக்கிறார்கள். ராஜா படத்தில் அவர் இன்னோசண்டாக இருந்தார், அதனால் தயிர் சாதம் என்று சொன்னார்கள், ஆனால் இந்த படத்தில் காரசாரமாக இருக்கிறார். டிரைலரில் அவரது சண்டைக்காட்சிகள் பட்டய கிளப்பிடுச்சு.
முன்பெல்லாம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அனைத்து படங்களின் படப்பிடிப்பும் இங்கு தான் நடக்கும். அனைவரும் ஒரு குடும்பமாக தான் இருந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களின் வீடுகளும் இங்கு தான் இருந்தது. இப்போதும் அவர்களின் வீடுகள் இங்கு இருக்கிறது. அதனால் தான் தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் என்று இருக்கிறது. பிறகு காலப்போக்கில் பல இடங்களில் ஸ்டுடியோக்கள் வந்ததால், அனைவரும் குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டார்கள். இப்போது பான் இந்தியா படங்கள் வரும்போது மீண்டும் ஒன்று சேர்ந்தது போல் இருக்கிறது. ஒரு படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. இதில் நாம் ஒரு ஒற்றுமையை பார்க்கிறோம், திரும்ப பழையபடி நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதில், கன்னட சினிமாவுக்கு தனி சிறப்பு உண்டு. முன்பெல்லாம் கன்னட படங்கள் பெரிய அளவில் பேசப்படாத நிலை இருந்தது. ஆனால், இன்று இந்திய அளவில் கன்னட படங்கள் தான் உயர்ந்து நிற்கிறது, பான் இந்தியா படங்களாகவும் அதிகம் வருகிறது. அந்த வரிசையில் ‘உக்ராவதாரம்’ படம் வருகிறது. அதிகமான பான் இந்தியா படங்களை கொடுப்பது கன்னட திரையுலகம் தான், இதற்காக அவர்களை பாராட்டியாக வேண்டும்.
நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். குற்றங்களிலேயே மிக கொடிய குற்றம் பாலியல் குற்றம் தான். நாட்டில் இப்போது இதுபோன்ற பல குற்றங்கள் நடக்கிறது. இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தான் குற்றங்கள் குறையும். ஒரு காலத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அவர்கள் வயதுக்கு வந்தால் பள்ளிக்கு அனுப்பவதை நிறுத்தி விடுவார்கள். சில காலத்திற்குப் பிறகு பத்தாம் வகுப்பு வரை படிக்க வைப்பார்கள். சில காலத்திற்குப் பிறகு பள்ளி படிப்போடு நிறுத்தி விடுவார்கள், கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். நான் படிக்கும் காலக்கட்டத்தில் 75 மாணவர்கள் இருந்தால், நான்கு பேர் தான் மாணவிகள் இருப்பார்கள். கல்லூரிக்கு பெண்கள் சென்றால் கெட்டுபோய் விடுவார்கள் என்றில்லை, அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் படிக்க தொடங்கி விட்டார்கள், அனைத்து துறைகளிலும் முன்னேறி விட்டார்கள், ஆண்களை விட படிப்பில் அவர்கள் தான் சிறப்பாக இருக்கிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், பெற்றோர்கள் மீண்டும் பெண்களை படிக்க வைப்பதை நிறுத்திவிடுவார்கள், அந்த சூழ்நிலை மீண்டும் வருவதற்கான ஆபத்தும் இருக்கிறது. பெண்ணுக்கு சம உரிமை, ஆணுக்கு நிகரானவர் என்றெல்லாம் பேசுவதை விட அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னைக்கு இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதோ அன்று தான் நம் நாடு சுதந்திர நாடு. காந்தி சொல்வார் ஒரு பெண் நடு இரவில் தனியாக சென்றுவிட்டு வருகிறாளோ அன்று தான் சுதந்திரம், என்று. இன்று அப்படி ஒரு நிலை இருக்கிறதா?, ஏதோ நகையை திருடினான் என்று இருந்தால் பரவாயில்லை, பெண்களின் கற்பை திருடி விடுகிறார்கள். 5 வயது சிறுமியை கற்பழித்து விட்டு, எங்கே மாட்டிக்க போறோம் என்று எரித்து கொன்று விடுகிறான். பாதிக்கப்படும் பெண்கள் எத்தகைய வலிகளை அனுபவித்திருப்பார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில், தன் முதல் படம் மூலம் நல்ல மெசஜ் சொல்லியிருக்கும் இயக்குநர் குருமூர்த்திக்கு சாரை பாராடியாக வேண்டும். அவர் நினைத்திருந்தால் முதல் படத்தை கமர்ஷியலாக எடுத்து பணம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நாட்டில் நடக்கும் தவறுகளை வெளிக்காட்டுவதற்காக இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார்.
நாட்டில் நடக்கும் குற்றங்களை குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை சினிமாக்கள் அதிகம் சொல்லி வருகிறது. அனைத்து மொழிகளிலும் இது போன்ற படங்கள் வருகிறது. அதனால் என்ன பயன், எங்களால் படங்கள் தான் எடுக்க முடியும், ஆனால் அந்த குற்றங்களை கடுப்படுத்த முடியுமா?, அதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு, அவர்கள் பாதுகாப்புடன் வலம் வர வேண்டும் என்றால் அதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும். இலவசமாக பெண்களுக்கு சலுகைகள் வழங்குவதை விட அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். நீங்கள் இலவச சேலை கொடுப்பீர்கள், அதை வேறு ஒருவன் உருவுகிறான். எனவே, பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அது மக்களுக்கு தெரிய வேண்டும். நான்கு பேர் சேர்ந்து கற்பழித்ததாக சொல்கிறார்கள், ஒரு செய்தி வருகிறது, பிறகு நீதிமன்றம், சிறையில் இருப்பதாக சொல்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. குற்றம் செய்தவன் சிறையில் சொகுசாக தான் இருக்கிறான். வேலை வேலைக்கு உணவு என்று அவன் வசதியாகவே இருக்கிறான். வெளியே இருப்பதை விட அது அவனுக்கு நன்றாக இருக்கும். பாலியல் குற்றங்களுக்கு எதிராக நிறைய படங்கள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. சினிமாக்காரர்கள் அதுபற்றி பல வகையில் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், அதற்கான தீர்வு என்பது அரசாங்கத்தால் மட்டும் கொடுக்க முடியும். குருமூர்த்தி நாட்டில் நடக்கும் சம்பவங்களை தான் கதையாக எடுத்திருக்கிறார். இப்படி நாட்டில் நடக்கும் குற்றங்களை பற்றி நாம் சொல்ல முடியும், அதற்கு எதிரான குரல் கொடுக்க முடியும், ஆனால் இதற்கான தீர்வு கொடுக்க முடியாது. அந்த தீர்வை அரசு தான் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கும் படக்குழுவுக்கு வாழ்த்துகள். பிரியங்கா அவர்களின் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருந்தது. அவர் தமிழிலும் ஆக்ஷனில் கலக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கு ஆக்ஷன் நாயகிகள் இல்லை, எனவே நீங்கள் உங்க அதிரடியை இங்கும் காட்ட வேண்டும், என்று கூறி வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.
இயக்குநர் குருமூர்த்தி பேசுகையில், “பிரியங்கா மேடமுக்கு நன்றி, எங்கள் படத்துக்கு ஆதரவளிக்க வந்திருக்கும் பேரரசு சாருக்கு நன்றி. ஊடகத்தின் மூலம் தான் எங்கள் படம் மக்களுக்கு தெரியப் போகிறது, எனவே உங்களுடைய உதவியும் எங்களுக்கு தேவை. இந்த படம் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்காக கமர்ஷியல் விசயங்களை சேர்த்திருந்தாலும், முழுக்க முழுக்க நாட்டில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். தற்போதைய காலக்கட்டத்தில், ஒவ்வொருவரும் தங்களது பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லாமல் அனைத்து பெண்களையும் தங்கள் வீட்டு பெண்களாக பார்க்க வேண்டும், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அத்தகைய விசயத்தை படத்தில் சொல்லியிருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. அப்படிப்பட்ட குற்றங்களை எப்படி தடுப்பது, என்பது குறித்த விழிப்புணர்வாகவும், நாட்டுக்கு தேவையான நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இது இருக்கும். தற்போதைய சூழலில் ஊடகங்கள் இல்லை என்றால், நாட்டில் அதிகமான தவறுகள் நடக்கும். காரணம், இன்று நாட்டில் எந்த மூளையில் எது நடந்தாலும் அதை நீங்கள் உலகத்திற்கு தெரியப்படுத்தி விடுகிறீர்கள், அதனால் தான் தவறு செய்ய நினைப்பவர்கள் பயப்படுகிறார்கள். குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு ஊடகங்கள் தான் மிக முக்கிய காரணம், ஊடகங்கள் இல்லை என்றால் குற்றங்கள் அதிகரித்துவிடும். அதனால், இந்த படத்தை மக்களிடம் ஊடகங்கள் கொண்டு சேர்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகிறது. நான்கு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது. எங்களுக்கு நீங்கள் தான் ஆதரவளிக்க வேண்டும். மீண்டும் பேரரசு சார், பிரியங்கா மேடம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் நல்ல மெசஜ் சொல்லியிருக்கிறோம், இந்த படத்தை பார்த்து நான்கு பேர் திருந்தினாலே எங்களுக்கு போதும், நன்றி.” என்றார்.
நடிகர் ரோபோ கணேஷ் பேசுகையில், “நான் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 20 படங்களில் நடித்துவிட்டேன். ‘உக்ராவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். நான் தமிழ் நாட்டில் பிறந்தாளும் எனக்கு முதலில் வாய்ப்பளித்த கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு எப்போது நன்றியுடன் இருப்பேன். நான் நாடு நாடாக சென்று மேடை நிகழ்ச்சிகள் செய்துக் கொண்டிருப்பேன், இப்போது கூட இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகாக அமெரிக்காவில் இருந்து வந்தேன், அடுத்த மாதம் மீண்டும் சென்று விடுவிவேன்.
எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் சாருக்கு நன்றி, தயாரிப்பாளர் சார், கேமராமேன் சார், நாயகன் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக நான் சிறு வயதில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது பியூட்டி குயின் என்று பார்த்த அழகான நாயகி பிரியங்கா மேடம். அவர் திடீரென்று ஒரு மாஸ் அவதாரம் எடுத்து அதிரடியை காண்பித்து விட்டார். இந்த படத்தின் டிரைலரில் நான் இருக்க மாட்டேன், காரணம் அது சஸ்பென்ஸ். ஆனால் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பேன். படத்தை பார்க்கும் போது அந்த கதாபாத்திரம் உங்களை பாதிப்படைய செய்யும். இயக்குநர் குருமூர்த்தி சார் என்னிடம் இது போன்ற ஒரு ஐடியா இருக்கிறது, என்று சொன்னார். பிறகு பிரியங்கா மேடம் நடிப்பதாக சொன்னார், உடனே ஒப்புக்கொண்டேன். எனக்கு இந்த வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி. ஊடகங்கள் எங்கள் குழுவினருக்கு ஆதரவளிக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து வந்திருக்கிறார்கள், தமிழில் இதுதான் அவர்களுக்கு முதல் படம் என்பதால், அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. இப்படி புது புது கலைஞர்களை வளர்த்து விட்டால் தான் சினிமா துறைக்கு நல்லது. ஒரு மரம் இன்றி பல மரமாக இருந்தால் அது காடாக மாறி நன்மை சேர்க்கும். எனவே புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், என்று திரைத்துறையினரிடம் கேட்டுக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் பேரரசு சாருக்கு நன்றி. சமூக அக்கறைக் கொண்ட படங்களை எடுத்த அவர் எங்களை வாழ்த்த வந்தது மகிழ்ச்சி. அவர் அடுத்தடுத்து படங்கள் பண்ண வேண்டும், அதில் என்னை போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். கூடிய விரைவில் நான் ஒரு படமும் இயக்கப் போகிறேன், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். மீண்டும் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி, என்றார்.”
ஒளிப்பதிவாளர் நந்தா குமார் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இது எனக்கும், இயக்குநருக்கும் தான் முதல் படம். எங்கள் படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான படமாக இருக்கும். படத்தின் இசையமைப்பாளர் ‘கே..ஜி.எப்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் சகோதரர். எங்கள் படத்தின் படத்தொகுப்பாளர் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். டி.ஐ செய்தவரும் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். எனவே எங்கள் படம் தொழில்நுட்ப ரீதியாக பலமாக இருக்கிறது. நீங்கள் இந்த படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
படத்தின் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் வெங்கட் பேசுகையில், “எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, குறிப்பாக ஊடக நண்பர்களுக்கு நன்றி. எது நடந்தாலும் நான்கு பேர் என்று சொல்வார்கள், அந்த நான்கு பேர் ஊடகங்கள் தான். இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மிக சக்தியோடு இருக்கிறது. அதனால் எங்கள் படத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு தயாரிப்பாளர் சதீஷ் சாருக்கு நன்றி. இயக்குநர் குருமூர்த்தி சாருக்கு இது முதல் படம் என்றாலும், படத்தை பார்த்தால் முதல் பட இயக்குநரின் படம் போல் தெரியாது. கொடூரமான சம்பவங்களை கமர்ஷியல் விசயங்களோடு, தொழில்நுட்ப ரீதியாக பலமாகவும் சிறப்பாக சொல்லியிருக்கிறார். என்னுடன் இணைந்து நடித்த ரோபோ கணேஷன் சார் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது லுக் பார்த்தால் நீங்கள் மெர்சலாகி விடுவீர்கள். இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா உபேந்த்ரா மேடமை அஜித் சார் படத்திலும், விக்ரம் சார் படத்திலும் பார்த்திருப்பீர்கள். ஒரு அழகான நடிகையாக நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்த படத்தில் அவர் நெருப்பாக, அக்ரோஷமான நடிப்பு, அதிரடி சண்டைக்காட்சிகள் என புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை சொல்ல முடியாது. ஒரு ராகவேந்திர சுவாமி வணங்குகிற ஆள், திடீரென்று நரசிம்ம சுவாமியை வணங்கினால் எப்படி இருக்கும், அது தான் என்னுடைய கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ். இந்த படத்தை மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். இன்று நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்துக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் கற்பழிப்பு குற்றங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். இது தெரிந்து நடக்கும் குற்றங்கள், ஆனால் தெரியாமல் நடப்பது எவ்வளவு என்பது தெரியாது, அது கடவுளுக்கு தான் தெரியும். அதில் ஈடுபடுபவர்கள் தெரிந்த ஆட்களாக இருக்கிறார்கள். உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேன் டிரைவர், ஆட்டோ டிரைவர் என்று நமக்கு தெரிந்தவர்களாக இருப்பது அசிங்கமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சோசியல் சப்ஜெக்ட்டை தான் இயக்குநர் காண்பித்திருக்கிறார். இந்த படத்திற்காக பல ஆய்வுகளை செய்திருக்கிறோம். எனவே, எங்களைப் போன்ற புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நான் நடிகர் விஜய் சார் ரசிகன். விஜய் சாரை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, அஜித் சாரை வைத்து திருப்பதி போன்ற மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பேரரசு சார் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவர் படங்களை நான் ஸ்கூல் கட்டடித்துவிட்டு பார்த்திருக்கிறேன். அவர் நான் நடித்த படத்தை வாழ்த்துவது பெருமையாக இருக்கிறது, நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் சதீஷ் குமார் பேசுகையில், “நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி. இது ஒரு நல்ல மெசஜ் மற்றும் விழிப்புணர்வு படம். இந்த படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மேடமுக்கு நன்றி. எங்களை வாழ்த்த வந்திருக்கும் பேரரசு சாருக்கு நன்றி.” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...