Latest News :

தளபதி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி சர்பிரைஸ் கொடுக்கப் போகும் ’தீபாவளி போனஸ்’ திரைப்படம்!
Thursday October-24 2024

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது முயற்சியின் மூலம் ‘தீபாவளி போனஸ்’ சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்த்ரிகையாளர்கள் படம் மிக எதார்த்தமாகவும், மக்களின் வாழ்வியலாகவும் இருப்பதாக பாராட்டியதோடு, படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கான தீபாவளி கொண்டாட்டமாகவும் இருக்கும், என்றும் பாராட்டியுள்ளனர். மேலும், படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன் பேசுகையில், “என் நண்பர் மந்த்ரா வீரபாண்டியனுக்கு முதல் நன்றி, அவர் இல்லனா இந்த படம் எனக்கு கிடைத்திருக்காது. என்னை நம்பி இந்த படத்தை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எங்களை நம்பி இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை படங்கள் பார்க்கிறீர்கள், எத்தனை பேரை பார்க்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும், அதனால் இந்த படத்தை பற்றி நாங்கள் சொல்வதை விட, படம் பார்த்த நீங்கள் தான் சொல்ல வேண்டும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

படத்தொகுப்பாளர் பார்த்திவ் முருகன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். முதலில் என் இயக்குநர் சாருக்கு நன்றி, என் தயாரிப்பாளர் சாருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

 

Deepawali Bonus Press Meet

 

இசையமைப்பாளர் மரிய ஜெரால்ட் பேசுகையில், “நாங்கள் இளைஞர்கள் குழு. நான் பல வருடங்களாக இசையமைப்பாளராக வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நானும், இயக்குநர் ஜெயபாலும் 15 வருட நண்பர்கள், நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் தான் ஜெயபால் கல்லூரியில் படிக்கிறார் என்பதே எனக்கு தெரியும். அவர் கல்லூரிக்கே வர மாட்டார், விளையாட்டில் தான் அதிகம் ஈடுபடுவார். அப்போது என்னுடைய நண்பர் மூலமாக ஒருவர் இருக்கிறார், அவர் பாடல்கள் எழுதுவார் என்று கூறி தான் என்னை ஜெயபாலனிடம் அறிமுகம் செய்து வைத்தனர், அன்று தொடங்கிய எங்கள் நட்பு இன்று வரை பயணிக்கிறது. படத்தின் தயாரிப்பாளரை நான் இன்று தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு அவர் இயக்குநர் ஜெயபாலன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை மூலம் இத்தனை இளைஞர்களுக்கு அவர் வாய்ப்பளித்திருக்கிறார், அவருக்கு நன்றி. எங்கள் குழுவினர் அனைவரும் தற்செயலாக இணைந்தவர்கள் தான். படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் அப்படி தான் சேர்ந்து ஒரு குழுவாக பணியாற்றினோம். நான் முழுக்க முழுக்க டவினில் வளர்ந்தவன், ஜெயபால் கிராமத்தில் வாழ்ந்தவர். அதனால், இந்த படத்தின் பாடல்கள் உள்ளே வருவதற்கு கொஞ்சம் காலம் ஆனது. பிறகு ஜெயபால் தான் எனக்கு தைரியம் கொடுத்தார், உன்னால் பண்ண முடியும் என்ற நம்பிக்கை அளித்து என்னை பணியாற்ற வைத்தார். முதல் பாடலுக்கு தான் நேரம் ஆனது, பிறகு அனைத்து பாடல்களையும் விரைவாக முடித்து விட்டோம். படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாக பாடல்களை முடித்துவிட்டேன். தற்போது அனைத்தும் முடிந்துவிட்டது, படமும் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. எங்களின் பல வருடன் கனவு உங்கள் முன்பு இருக்கிறது. நீங்கள் தான் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்து வெற்றி பெற செய்ய வேண்டும், நன்றி.” என்றார்.

 

நடன இயக்குநர் நிசார் கான் பேசுகையில், “முதலில் என் தாய், தந்தைக்கு நன்றி. ஜெயபால் அண்ணனை எனக்கு முதலிலேயே தெரியும். அவருடன் சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன். இந்த படத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, உழைப்பு அனைத்தும் மிகப்பெரியது. இந்த படத்திற்காக நடனக் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், மாண்டேஜ் போல் தான் பணியாற்றியிருக்கிறோம். எங்களை அணைத்து பணிகளிலும் அவர் ஈடுபடுத்துவார். அவர் போல் தயாரிப்பாளரும் எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார். ஜெயபாலன் அண்ணன் மீது இருக்கும் ஒரு பற்று போல் தயாரிப்பாளர் மீதும் எங்களுக்கு இருக்கிறது, அதற்காக அவருக்கு நன்றி. இந்த படம் இப்போது உங்களிடம் இருக்கிறது, அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது போல் எங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி” என்றார்.

 

விக்ராந்தின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஜெயபாலன் சாருக்கு நன்றி. இந்த படத்திற்காக ஆடிசன் நடந்த போது என் தந்தை மதுரைக்கு அழைத்துச் சென்றார். ஆடிசனில் கலந்துக்கொண்ட பிறகு நான் தேர்வானேன். அதன் பிறகு ஒருவாரம் அவர்களே எனக்கு நடிப்பதற்கு பயிற்சி அளித்தார்கள், மதுரை ஸ்லாங் பேச சொல்லிக் கொடுத்தார்கள். அதை நன்றாக கற்றுக்கொண்டு நன்றாக நடித்தேன், நன்றி.” என்றார்.

 

படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஷ் பேசுகையில், “தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சிறு முதலீட்டு படங்களை வெளியிடும் நிறுவனம் என்றும், குறைந்த திரையரங்கம் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் நிறுவனம் என்று தான் இதுவரை இருந்தது. ஊடகங்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் ஆதரவால், ‘தீபாவளி போனஸ்’ படம் மூலம் நல்ல கமர்ஷியல் படம் மற்றும் வணிக ரீதியாக பெரிய வருமாணம் ஈட்டக்கூடிய படத்தை கையாளும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எங்களிடம் வருவதற்கு ஒரு நீண்ட பயணம் தேவைப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு இந்த படம் வர வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் இயக்குநர் தவம் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு படத்தை வெளியிடும் போதும், இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து கனமான பதிவு வரும்.  நம்ம படம் எப்போது வரும், என்று உருக்கமாக கேட்பார். அதில் இருந்தே அவருடைய ஏக்க, தவிப்பு தெரியும். அதேபோல், இந்த படத்தின் தயாரிப்பாளர் இதுவரை எந்த விசயத்திலும் தலையிடவில்லை. கதையை கேட்டு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டார். அவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்றியிருக்கிறார்கள். தயாரிப்பாளரின் நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு அனைவரும் உண்மையாக உழைத்து இப்படி ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் பெருமையான விசயம் என்னவென்றால், இதுபோன்ற பணிகளை செய்ய தமிழ் சினிமாவில் ஐம்பது பேர் இருப்பார்கள், அவர்களைப் பற்றி விசாரித்து நான் தான் வேண்டும் என்று கேட்டு, ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் மூலம் தான் படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் தான் நாங்களும் இந்த அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 100 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் ஆடியோ உரிமையை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுத்திருக்கிறோம். அதேபோல் வெளிநாட்டு திரையிடலும் இன்று உறுதியாகியுள்ளது. அதை இப்போது தான் இயக்குநரிடம் தெரிவிக்கிறேன். அதேபோல், இரண்டு முன்னணி ஒடிடி தளங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதுவும் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். தீபாவளிக்கு ஒருவாரம் முன்பு வெளியாகும் போது சிலர் சில கருத்துக்களை சொன்னார்கள். குறிப்பாக தீபாவளியன்று வெளியிடலாமே, என்றார்கள். அதற்கு நாங்கள் ரெடி தான், ஆனால் தற்போதைய சூழல் என்னவென்று உங்களுக்கே தெரியும். தீபாவளிக்கு முன்பு வெளியிடுவது, தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஒரு சூழலாக இருக்கிறது, எனவே இது தீபாவளிக்கான சரியான படமாக இருக்கும். படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும் படத்தை பாராட்டியுள்ளனர். எனவே, இந்த தீபாவளி போனஸ் எங்களுக்கு போனஸாகவே இருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் தீபக் குமார் தாலா பேசுகையில், “நான் படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது எப்படி வந்தது என்றால், நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சென்னையில் துணை நடிகர்களுடன் புத்தாண்டு கொண்டாடினேன். அப்போது அவர்களின் கஷ்ட்டத்தை நான் பார்த்தேன். சினிமாவில் இவ்வளவு கஷ்ட்டங்கள் இருக்கிறதா, இவ்வளவு பேர் இதில் ஜெயிக்க போராடுகிறார்களா, என்று யோசித்தேன். அதனால் தான் நாம் ஒரு படம் எடுத்து கஷ்ட்டப்படுகிறவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க்லாம் என்று நினைத்தேன். அப்போது தான் என் நண்பர் மூலம் ஜெயபாலனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவரிடம் பல நிபந்தனைகள் வைத்தேன். படம் குடும்பமாக பார்க்க கூடிய படமாக இருக்க வேண்டும், இயல்பாக இருக்க வேண்டும், பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும், என்று சொன்னேன். அவரும் அதை கேட்டு ஒரு கதை சொன்னார், எனக்கு பிடித்திருந்தது உடனே படத்தை தொடங்கி விட்டேன். அதுமட்டும் இன்றி புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஜெயபாலனிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அவரைப் போல் வாய்ப்பு தேடுபவர்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்திருக்கிறார். இப்போது படம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். படமும் சிறப்பாக இருக்கிறது, பாடல்கள் நன்றாக இருக்கிறது. எனவே இந்த படம் வெற்றி பெற வேண்டும், அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். இது எனக்காக கேட்கவில்லை, இதில் பணியாற்றியவர்களுக்காக தான் கேட்கிறேன். நன்றி.” என்றார்.

 

நடிகை ரித்விகா பேசுகையில், “என்னை பற்றி தொகுப்பாளி நன்றாக அறிமுகம் கொடுத்தார், ஆனால் அவர் சொன்னது போல் என் சொந்த ஊர் சேலம் இல்லை, சென்னை. நான் சென்னை பெண் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்திற்காக என்னை தொலைபேசியில் தான் முதலில் தொடர்பு கொண்டார் இயக்குநர் ஜெயபால். அப்போது ஒரு ஒன்லைன் சொன்னார், அதை கேட்டதும் இந்த படம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு விசயம் கேட்டால் அது நன்றாக வரும் என்று நம் உள்ளுணர்வு சொல்லும் அல்லவா அது போல் இந்த படத்தின் கதை கேட்கும் போது இது நன்றாக இருக்கும் என்று என் உள்ளுணர்வு சொன்னது, அதனால் ஓகே சொல்லிவிட்டேன். அதன்படியே படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் தலைப்பும் ஈர்க்கும் விதமாக இருக்கிறது. இந்த படக்குழுவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நடித்தவர்களை தவிர அனைவரும் புதியவர்கள். இயக்குநர், தயாரிப்பாளர், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என அனைவரும் புதியவர்களாக இருந்தார்கள், அவர்களின் செயல் என்னை அதிகம் கோபப்பட வைக்கும். இருந்தாலும் அதை எல்லாம் சமாளித்து சிறப்பாக பணியாற்றினார்கள். என்னிடம் 22 நாட்கள் கேட்டார்கள், ஆனால் என்னுடைய பகுதியை 19 நாட்களில் முடித்து விட்டார்கள். சில தடுமாற்றங்கள் இருந்தாலும், திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை முடித்ததோடு, பின்னணி வேலைகளையும் சரியாக திட்டமிட்டு செய்து முடித்தார்கள். தவறு செய்தாலும் அதை சரி செய்துக்கொண்டு, என்னையும் சமாதானப்படுத்தி அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்ததற்காக அவர்களுக்கு நன்றி.

 

இந்த படத்தின் தலைப்பை வடிவேலு சார் வெளியிட்டார். இதை பார்த்துவிட்டு இந்த படத்தில் நான் பணியாற்றுகிறேன், என்று கூறி படத்தை இந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு சென்ற பி.ஆர்.ஓ தர்மா அவர்களுக்கு நன்றி. அதேபோல், எடிட்டர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் அனைவரும் சப்போர்ட்டிங்காக இருந்து பணியாற்றினார்கள். நாயகனாக நடித்த விக்ராந்த் நல்ல நடிகர், அவரால் இன்று இங்கு வர முடியவில்லை. அவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். என்னுடைய மகனாக நடித்த குட்டி பையன் ஹரிஷ் சிறப்பாக நடித்தார். எனக்கும், விக்ராந்துக்கும் அடுத்து என்ன வசனம், என்ன காட்சி என்று தெரியாது, ஆனால் அந்த குட்டி பையனுக்கு எல்லாமே தெரியும். அந்த அளவுக்கு அவனுக்கு பயிற்சி கொடுத்திருந்தார்கள். அவன் மட்டும் அல்ல, படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர்களுக்கு கூட இயக்குநர் பயிற்சி கொடுத்திருந்தார், அதை என்னிடம் வீடியோவாக இயக்குநர் காண்பித்து, நாங்கள் இவ்வளவு தயாராக இருக்கிறோம் இப்போது நீங்கள் படப்பிடிப்புக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்தார். நன்றி ஜெயபால் சார். நல்ல டீம், நல்ல படம் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் தான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இப்போது சிறிய படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஊடகங்கள் பெரிய ஆதரவு கொடுத்து பெரிய இடத்தில் கொண்டு செல்கிறார்கள், அதுபோல் எங்கள் படத்தையும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

என் வாழ்க்கையில் நான் தீபாவளி போனஸ் வாங்கியதில்லை. உங்களுக்கே தெரியும் சினிமாவில் யாருக்கும் போனஸ் என்பது இல்லை. நான் படிப்பு முடிந்ததும் சினிமாவுக்குள் வந்துவிட்டேன், அதனால் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் போனாஸ் வாங்கும் வாய்ப்பும் அமையவில்லை. ஆனால், இந்த 2024 ஆம் ஆண்டு எனக்கு தீபாவளி போனஸ் கிடைத்திருக்கிறது. எனவே நீங்கள் அனைவரும் எனக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

 

Deepavali Bonus

 

இயக்குநர் ஜெயபால்.ஜெ பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த என் தயாரிப்பாளர் தீபக் சாருக்கு முதல் நன்றி. அவர் இன்று இங்கு அமர்ந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது, அவர் பிஸியான மனிதர். அவரை அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது, அந்த அளவுக்கு பிஸியானவர். அதனால் தான் மொத்த பொறுப்பையும் எங்களிடம் கொடுத்தார். அவர் முதலில் என்னிடம் சொன்னது, உங்களுக்கு நான் வாய்ப்பளிப்பது போல், கஷ்ட்டப்படுகிறவர்களுக்கு நீ வாய்ப்பளிக்க வேண்டும். உன்னை போல் சினிமாவில் சாதிக்க நினைத்து போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த படம் வாய்ப்பாக இருக்க வேண்டும், என்று கூறினார். அவரது இந்த வாய்ப்பை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் அவர், அவர் அடுத்தடுத்து படம் தயாரிக்க வேண்டும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

 

இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பைலட் படம், ஆவணப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது தான் உலக மாணவர்கள் ஆந்தம் என்ற பாடல் இயக்க வாய்ப்பு கிடைத்தது. மதன் கார்கி எழுதின அந்த பாடலை இயக்கினேன். சுமார் 78 நாடுகளில் யுனெஸ்கோவால் அந்த பாடல் ஒளிபரப்பட்டு வருகிறது. பிறகு விளம்பர படங்களை எடுக்க தொடங்கி தற்போது நான் ஆசைப்பட்டது போல் இயக்குநராகியிருப்பது மகிழ்ச்சி. இந்த படத்திற்கு இசையமைத்த மரிய ஜெரால்ட் நானும் கல்லூரி நண்பர்கள். அவர் தூத்துக்குடி என்பதால் ஹாஸ்டலில் தங்கி படித்தார். அப்போது அவர் வெள்ளிக்கிழமை என்றால் ஊருக்கு சென்று விடுவார். நான் எழுதிய பாடல்களை எடுத்துச் சென்று அதற்கு இசையமைத்து அவரே பாடி சிடியில் எடுத்துக் கொண்டு வருவார், அதற்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். அப்போது நான் அவரிடம், நான் இயக்குநரானால் நீ தான் இசையமைப்பாளர் என்று சொன்னேன், அதன்படி அவருக்கு இன்று என் படத்தில் வாய்ப்பு கொடுத்தது மகிழ்ச்சி. மரிய ஜெரால்ட் படத்திற்காக பெரிதாக செய்ய வேண்டும் என்று சொல்வார். பாடல் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகளை ஹங்கேரியில் உள்ள பெத்தாபெஸ் ஸ்டுடியோவில் தான் பண்ண வேண்டும் என்று அவர் சொன்னார். அதன்படி இசையமைப்பாளரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோ, சந்தோஷ் நாராயணன் சார் ஒரு பாடல் பாடியுள்ளார். ஆந்தோணி தாஸ் மற்றும் அமெரிக்கவில் இருக்கும் அக்‌ஷயா மேடம் ஒரு பாடல் பாடியுள்ளனர். இசைக்காக தயாரிப்பாளர் அதிக செலவு செய்தது எங்களுக்கு மகிழ்ச்சி.  படத்தொகுப்பாளர் எனக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோல், இந்த படத்திற்கு நான் சொல்வதை கேட்கும் ஒரு ஒளிப்பதிவாளர் வேண்டும் என்று நினைத்தேன். நான் கோபப்பட மாட்டேன், அமைதியாக தன இருப்பேன், என்னைப் போல் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நண்பரிடம் கேட்டேன். அவர் தான் கெளதமை சிபாரி செய்தார். ஒளிப்பதிவாளர் கெளதம் எனக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். மதுரை திருப்பரங்குன்றத்தை வித்தியாசமாக காண்பித்திருக்கிறார். டிசைனர் பால முருகனிடம் இருந்து தான் இந்த கதை தொடங்கியது. திருப்பரங்குன்றத்தில் உட்கார்ந்து கொண்டு இப்படி ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று அவரிடம் தான் பேசிக் கொண்டிருந்தேன், அது இன்று நடந்திருக்கிறது. இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமார் 70 டிசன்கள் இதுவரை செய்திருக்கிறார், இப்போது கூட எங்கள் பத்திற்காக எதாவது டிசைன் ரெடி பண்ணி அனுப்புவார், அந்த அளவுக்கு அவர் பணியாற்றுகிறார், அவருக்கு நன்றி. என்னுடைய உதவி இயக்குநர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எளிய மக்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் படம் மக்களுடன் கனெக்ட் செய்யும் என்று நம்புகிறேன். இனி உங்களிடம் தான் இருக்கிறது. பல படங்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் ஊடகங்கள் எங்கள் தீபாவளி போனஸ் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக கடந்த நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டிருந்தேன். அதனால், என் மனைவி, பிள்ளைகளை நான்கு வருடங்களாக பார்க்கவில்லை, இந்த நேரத்தில் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை என் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் பி.லெனின் இப்படத்திற்காக படைப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். கெளதம் சேதுராமன் ஒளிப்பதிவு செய்ய, மரிய ஜெரால்ட் இசையமைத்துள்ளார். மஹா மற்றும் மரிய ஜெரால்ட் பாடல்கள் எழுதியுள்ளனர். பார்த்திவ் முருகன் படத்தொகுப்பு செய்ய, டிபி டீம் கலையை நிர்மாணித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன், அந்தோனி தாசன், அக்‌ஷயா ராமநாத் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர். மக்கள் தொடர்பாளர்களாக தர்மதுரை, சுரேஷ் சுகு பணியாற்றியுள்ளனர்.

Related News

10135

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery