Latest News :

டப்பிங் சங்கத்தில் முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி! - எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு
Wednesday November-06 2024

ஏறத்தாழ 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டப்பிங் சங்க கட்டிடம் இடிக்கப்பட காரணம், கட்டிட அனுமதி வாங்கியதாக 75 ஆயிரம் ரூபாய் (ரொக்கம்) கணக்கு காட்டிவிட்டு, அந்த பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி கட்டிட அனுமதி வாங்காமல் சங்க அலுவலகம் கட்டியதால், அது தொடர்பான வழக்கில் டப்பிங் சங்கம் தோல்வி அடைந்தது.  

 

முறைகேடான கட்டிடத்தை இடிக்கும்படி நீதிமன்றமே உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசாங்கம் அல்ல. 

 

ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு தொடர்ந்து அவதூறு பேசி வரும் ராதாரவி தமிழ்நாடு அரசாங்கம் தன்னை பழிவாங்கவே பதில் சங்க கட்டிடத்தை இடித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

திரைத்துறை தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வரும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமான விமர்சனங்களையும் கருத்துகளையும் சங்க விழாக்களிலும் சங்க கூட்டங்களிலும் ராதாரவி பதிவு செய்வதும், அதை ஃபெப்சி தலைவர் செல்வமணி வெளிப்படையாக ஆதரித்து வருவதும் ஒட்டு மொத்த தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் எதிரான துரோகம்.

 

சங்கக் கட்டிடம் இடிக்கப்பட்ட வழக்கில் பெரும் முறைகேடு செய்திருக்கும் ராதாரவி மற்றும், அவர் நிர்வாகம் மீது தொழிலாளர் நலத்துறையில் சங்க உறுப்பினர்கள் புகார் தந்த பின்பும், துரை சார்ந்த நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தவிர்த்து வருவது வேதனைக்குரியது.

 

இந்த நிலையில், சமீபத்தில் திருத்தப்பட்ட டப்பிங் சங்க விதிகள் ஜூலை 2024-ல் தான் நடைமுறைக்கு வந்தது. ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அதில் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே, திருத்தப்பட்ட கட்ட‌ண‌ங்க‌ள்  உட்பட பல விதிகள் பொருந்தும்.  

 

சுமார் 40 வருட‌ங்க‌ளாக‌  உறுப்பினர்களாக இருப்பவர்கள் பல ஆண்டுகளாக இன்னொரு சங்கத்திலும் உறுப்பினராக இருந்தால், சமீபத்தில் திருத்தப்பட்ட சட்டப்படி,  டப்பிங் சங்க உறுப்பினர் அந்தஸ்தை இழப்பார்கள் என்று சொல்வது பொருந்தாது. அது ஏற்புடையதும் அல்ல. 

 

ஆனால் அப்படி குறிப்பிட்டு திரு.எஸ்.வி

சேகர், திரு.நாசர், திரு.மயிலை குமார், திருமதி.எல்.பி.ராஜேஸ்வரி, திரு.சர்தார், திரு.கோபிநாத், திருமதி.சுமதி உட்பட 10 உறுப்பினர்களுக்கு மட்டும் ராதாரவி நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது.

 

அந்த பத்து நபர்களும் வேறு சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் பட்டியல் லேபர் கமிஷனர் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது. அந்த பட்டியலை ராதாரவி நிர்வாகத்திற்கு தந்து லேபர்  கமிஷனர் அலுவலகம் உதவி செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இது அரசாங்க சம்பளம் வாங்கும் லேபர் கமிஷனர் அலுவலகத்தின் அதிகாரிகள் செய்யும் மிகப் பெரிய முறைகேடு. இது கண்டிக்கத்தக்கது, தண்டிக்கத்தக்கது.

 

ஒருவர் எத்தனை சங்கத்தில் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்க அடிப்படை உரிமைகள் அனுமதிக்கும் போது, அதற்கு விரோதமாக ஒரு சங்கம் சட்ட திருத்தம் செய்தால், அதை தொழிலாளர் நலத்துறை அதிகாரி அங்கீகரிக்கக் கூடாது. அது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தும், அது சங்க உறுப்பினர்களால் தொழிலாளர் நலத்துறைக்கு புகாராக தெரிவிக்கப்பட்டும், நீதிமன்றத்தை உதாசீனம் செய்யும் விதமாக, சுயலாபத்திற்காக ராதாரவியின் சங்கத்திற்கு ஆதரவாக செயல்படும் ஒரு குறிப்பிட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலக அதிகாரியும் அவரது சகாக்களும், மற்ற அலுவலர்களை கட்டாயப்படுத்தி அந்த சனநாயக விரோதமான சட்டங்களுக்கு அவசரமாக அங்கீகாரம் தந்திருக்கிறார்கள்.

 

ஆக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பொதுச்சட்டத்தையும் மதிக்கவில்லை. நீதிமன்றத்தையும் மதிக்கவில்லை. 

 

தொழிலாளர்களான உறுப்பினர்கள் தந்த புகார் மனுவையும் மதிக்காமல் எதேச்சதிகாரத்துடன் செயல்பட்டு வருவது நிரூபணமாகி உள்ளது.

 

இதுகுறித்து கடந்த சுமார் 10 ஆண்டுகளாக ராதாரவியின் நிர்வாகத்திற்கு எதிராக போராடிவரும் டப்பிங் சங்கத்தின் முறைகேடுகளை சட்டரீதியாக அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுத்து வரும் பின்னணி குரல் கலைஞர், நடிகர், எழுத்தாளர் திரு.வே.தாசரதி அவர்களிடம் கேட்டபோது 'போலி டத்தோ ராதாரவியின் ஒடுக்குமுறையில் இருந்து டப்பிங் சங்க உறுப்பினர்களை மீட்டு திரைத்துறையின் விஷக்களையாக விளங்கும் ராதாரவி மற்றும் அவர் நிர்வாகத்தின் மீதும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டத்திற்கு எதிராக அவருக்கு உதவும் அரசு அதிகாரிகள் மீதும், இனியும் தாமதிக்காமல் அரசாங்கம் சட்டபூர்வமாக தகுந்த நடவடிக்கை எடுக்க  வேண்டும்' என்றும் 'ராதாரவி மற்றும் அவர் நிர்வாகத்திற்கு கிடைக்கும் தண்டனை, இனி எந்த சங்கத்திலும் முறைகேடு செய்ய நிர்வாகிகள் பயம் கொள்ளும் வகையில் அமைய வேண்டும்' என்றும் கருத்து தெரிவித்தார்.

 

கொரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கில் தன் சுயநிதியை அளித்து டப்பிங் சங்க உறுப்பினர்களுக்கு பேருதவி செய்த அதன் உறுப்பினரான நடிகர் திரு. சூர்யா அவர்கள் சமீபத்தில் ரூபாய் 200 சந்தா செலுத்தவில்லை என்று காரணம் கூறி அவரையும் ராதாரவியின் நிர்வாகம் சங்க நீக்கம் செய்ததும், அவர் அளித்த நிதி பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு இன்று வ‌ரை சென்று சேரவே இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

லட்சக்கணக்கில் நிதி உதவி செய்தவர் ரூபாய் 200 செலுத்தவில்லை என்று குறிப்பிட்டு அவரை சங்க நீக்கம் செய்த நன்றி கெட்ட ராதாரவியின் நிர்வாகத்தை அரசுத் துறை அதிகாரிகளும் பெப்சி நிர்வாகமும் தொடர்ந்து ஆதரித்து வரும் காரணம் புதிராக உள்ளது.

 

முறைகேடாக கட்டப்பட்ட டப்பிங் சங்க கட்டிடம் நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது, சங்க உறுப்பினர்களில் தமிழ் பின்னணிக் குரல் கலைஞர்களின் சம்பளத்தில் பத்து சதவிகிதத்தை சங்கம் கட்டாய பிடித்தம் செய்து வருவது, தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை ராதாரவி சங்க நீக்கம் செய்து வருவது, தொழிற்சங்க விதிகளுக்கு முரணாக சர்வாதிகார பொதுக்குழு நடத்துவது, குறிப்பிட்ட வரைமுறைக்கு மேல் பெரும் சங்க நிதியை வீண் செலவுகளுக்கு விரயமாக்குவது என ராதாரவியும் அவர் நிர்வாகமும் தொடர்ந்து செய்யும் எல்லா சட்டவிரோத செயல்கள் குறித்தும் உறுப்பினர்கள் புகார் செய்த பின்பும் அதைத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

 

திரைத்துறை தொழிலாளர் சங்கங்கள் அனைத்திற்கும் களங்கமாக இருந்து வரும் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம், கேள்வி கேட்கும் உறுப்பினர்கள் மீது கட்டவிழ்த்து விடும் சங்க நீக்க நடவடிக்கை, வேலை வாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் அறிந்தும், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய பெப்சி அமைப்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

 

தற்போதும் குடிசை மாற்று வாரியத்தால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மிகச் சலுகை விலையில் தரப்பட்ட குடியிருப்புக்கான இடத்தில், டப்பிங் சங்க அலுவலகத்தை கட்டி கோலாகல கிரகப்பிரவேசம் நிகழ்த்தி சங்கம் நடத்த ராதாரவிக்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளித்தது ஏன்?

 

சக தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடாது என ராதாரவியும், அவர் நிர்வாகமும் வேலை வாய்ப்பு தருபவர்களை அலைபேசியில் அழைத்தும், கடிதம் மூலமாகவும் மிரட்டுவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பும், லேபர் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் ராதாரவி மற்றும் அவர் நிர்வாகத்தை கேடயமாக நின்று பாதுகாத்து வருவது பெரும் வேதனைக்குரியது.

 

அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுச் சட்டங்களும், தொழிற்சங்க சட்ட விதிகளும் தொடர்ந்து மீறப்பட இது ஒரு முன்னுதாரணமாக மாறுவதற்கு வழி வகுத்து தந்தது போல அமைந்து விடும்.

Related News

10158

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் விநாயகராஜ்!
Saturday December-21 2024

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...

சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிவி பிரகாஷ் குமார்!
Saturday December-21 2024

முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...

”பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல” - சூர்யா உருக்கம்
Friday December-20 2024

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...

Recent Gallery