Latest News :

’கங்குவா’ தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் - சூர்யா நம்பிக்கை
Thursday November-07 2024

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தி, சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக உருவெடுத்துள்ளது. 

 

தமிழ், தெலுலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளையும் கடந்த உலக மொழிகள் பலவற்றில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ’கங்குவா’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் படத்தின் 3டி டிரைலர் திரையிடல் நிகழ்ச்சி ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் படம் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில், “உலக நாயகன் கமல்ஹாசனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஆரோக்கியமாக சந்தோஷமாக அவர் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ’கங்குவா’ போன்ற ஒரு பரிசோதனை முயற்சியை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தைரியமாக முன்னெடுத்துள்ளது பெரிய விஷயம். 170 நாட்களுக்கும் மேல் இந்த படத்தை எடுத்திருப்போம். ’கங்குவா’ படத்தில் அனைவரது உழைப்பும் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகி இருக்காது. வெற்றியுடைய ஒளிப்பதிவு நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிதாக பேசப்படும். சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் சொன்னால் நான் பத்தாவது மாடியில் இருந்து கூட குதிப்பேன். அந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை எனக்கிருக்கிறது. சண்டைக்குள் ஒரு கதை வைத்து அசத்திவிடுவார். படத்தின் ஆன்மா இசை தான், அதை சரியாகக் கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இன்று மாலை வெளியாகவுள்ள மன்னிப்பு பாடல் எனக்கு மிகப்பிடித்தமானது. தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். வழிபடக்கூடிய கடவுள் தீயாக, நெருப்பாக, குருதியாக இருந்தால் அந்த நில மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வழிபாடு என்ன என்ற விஷயங்களை இதில் கொண்டு வந்திருக்கிறோம். ‘கங்குவா’ திரைப்படம் வெறுமனே ஆக்‌ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயமும் இருக்கும். மன்னிப்பை பற்றி இந்தப் படம் உயர்வாகப் பேசும். ’கங்குவா’ தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். 3000 பேரின் உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். படம் நெருப்பு மாதிரி இருக்கும். உங்கள் அன்பு ‘கங்குவா’ படத்திற்கு தேவை” என்றார்.

 

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை பேரை வைத்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் இதுவரை செய்த படங்களிலேயே குறைவான பதட்டத்துடன் இருந்த படம் இதுதான். சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும். முழுப்படமும் நேற்று இரவுதான் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியோடு இந்த விழாவிற்கு கிளம்பி விட்டேன். படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வரக் காரணம் சூர்யா சாரின் அன்பான ரசிகர்கள்தான். 10,500- 11,500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகியிருந்தால் நமக்கு 4000 ஸ்கிரீன்ஸ்தான் கிடைத்திருக்கும். பான் இந்திய அளவில் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இது அடுத்த வெலவல் பாய்ச்சலாக இருக்கும். நன்றி” என்றார்.

 

Siva and Gnanavel Raja

 

இயக்குநர் சிவா பேசுகையில், “’கங்குவா’ படத்தின் கதையை எழுதும்போது இதை நம்மால் எடுக்க முடியுமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், என் டீம் மீது இருந்த நம்பிக்கையால் ’கங்குவா’ என் வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக இருக்கும் எனத் தோன்றியது. நேற்று படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு மகிழ்ச்சி. ’கங்குவா’ படம் தொடர்பாக நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றபோது அன்பான ரசிகர்கள் எல்லோருமே ‘அண்ணனுக்கு ஒரு வெற்றிப்படம் வேண்டும்’ எனக் கேட்டார்கள். நிச்சயம் ‘கங்குவா’ அப்படியான படமாக அமையும். நான்கு மணிக்கு எழுந்து மலை, காடு என நாங்கள் கூட்டிப்போனாலும் முழு உழைப்பைக் கொடுத்தார் சூர்யா. படத்தில் ஸ்டண்ட் விதவிதமாக கொரியோகிராஃப் செய்திருக்கிறோம். வெற்றி, மதன் கார்க்கி சார் என படத்தில் கடுமையாக உழைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “’கங்குவா’ படத்தின் புரமோஷன்கள் ஒவ்வொரு இடத்திலும் திருவிழா போல நடந்து வருகிறது. நேற்று படம் பார்த்த அனைவரும் படத்திற்கு நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கொடுத்து வருகிறார்கள். சிவா அண்ணன் மற்றும் சூர்யா சாருடைய கடின உழைப்பு உலகம் முழுவதும் கொண்டாடப்படும். நிச்சயம் இது சூர்யா ரசிகர்களுக்கு இரண்டாவது தீபாவளியாக இருக்கும்” என்றார்.

 

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “ஒவ்வொரு நாளும் ‘கங்குவா’ படத்திற்கு புதிய மகுடம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு படத்தை திரையில் கொண்டு வருவதற்கு சிவாவிற்கு பெரிய திரை அனுபவம் வேண்டும். அது அவருக்கு கைகூடியிருக்கிறது. சிறந்த இலக்கிய வார்த்தைகளைக் கொண்டு இந்தப் படத்தில் நான் பாடல்கள் கொடுப்பதற்கு சிவா முக்கிய காரணம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற சூர்யாவின் முனைப்புதான் ‘கங்குவா’. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

 

Kanguva Team

 

ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பேசுகையில், “எங்கள் உழைப்பை நம்பிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கும் அதை செயல்படுத்திய சிவாவுக்கும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி. என்னுடைய ஆக்‌ஷன் இந்தப் படத்தில் பேசப்படும் என்றால் அதற்கு முக்கிய காரணமாக சூர்யா இருப்பார். அவரது உழைப்பு படம் வெளியான பிறகு அதிகம் பேசப்படும்” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் வெற்றி பேசுகையில், “’கங்குவா’ படம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இயக்குநர் சிவா எங்கள் மனதில் பதிய வைத்துவிட்டார். நாங்கள் கேட்ட எல்லா விஷயங்களுக்கும் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தார். அதற்கு சூர்யா சாருக்கும் சிவா சாருக்கும் நன்றி. இதில் கலை இயக்குநர் மிலன் மற்றும் எடிட்டர் நிஷாந்துடைய மறைவு எங்களுக்கு பெரிய இழப்பு. இவர்கள் எல்லோருடைய உழைப்பும் படம் வெளியான பிறகு கொண்டாடப்படும்” என்றார்.

 

சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கங்குவா’ உலகம் முழுவதும் 11,500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Kanguva Team

Related News

10160

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery