’அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜித்துக்கு திருப்புமுனை படமாக அமைந்த ‘பில்லா’ மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ’ஆரம்பம்’ மூலம் மீண்டும் அஜித்துடன் கைகோர்த்தவர், பிறகு பாலிவுட்டுக்கு சென்றார். ‘ஷெர்ஷா’ என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தி படத்தை இயக்கி முடித்த நிலையில், மீண்டும் அஜித்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிமுக நடிகருடன் கைகோர்த்தது ஆச்சரியமாகவும், அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவும் அமைந்தது.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், விஜயின் ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘நேசிப்பாயா’ படம் குறித்தும், அறிமுக நடிகர் ஆகாஷ் முரளியுடன் கைகோர்த்தது குறித்தும் இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறுகையில், “தமிழ்ப் படம் இயக்கி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. எங்கு சென்றாலும், எந்த மாதிரியான படம் இயக்கினாலும் தமிழ்ப் படம் என்றால் மட்டுமே முழு திருப்தியாக இருக்கிறது, அந்த வகையில் நான் இப்போது ‘நேசிப்பாயா’ படம் மூலம் திருப்தியாக இருக்கிறேன்.
நேசிப்பாயா எப்படி தொடங்கியது என்றால், ‘ஷெர்ஷா’ படத்தின் டப்பிங் பணிகளில் நான் பிஸியாக இருந்த போது, என்னை ஆகாஷ் மும்பையில் சந்தித்தார். அப்போது அவரை வைத்து படம் இயக்கும் ஐடியா என்னிடம் இல்லை, நட்பு ரீதியாக என்னை அவர் சந்தித்தார், மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் பேசினோம். அந்த சந்திப்பை தொடர்ந்து அடிக்கடி அவரை சந்திக்க முடிந்தது, அப்போது அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. ஒருவரை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்பதை தாண்டி, அவருடன் பழகும் போது அவரை நமக்கு பிடித்துவிடும் அல்லவா அதுபோல் தான் எனக்கு ஆகாஷுடன் பழக பழக அவரை பிடித்துவிட்டது. ஒரு கட்டத்தில் இவருக்காக ஒரு படம் பண்ணலாமே என்று எனக்கே தோன்றியது. அப்படி தான் ‘நேசிப்பாயா’ உருவானது.
இது முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும் காதலை மையமாக வைத்துக்கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு திரைக்கதையோடு நல்ல ட்ராமாவாக இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள், அவர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்யவில்லை என்றால், அடுத்ததை நோக்கி எளிதில் நகர்ந்துச் சென்றுவிடுவார்கள். அதனால், காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்டு, இளைஞர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி சினிமா ரசிகர்களுக்கான விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கிறேன்.
இந்த கதை ஆகாஷ் முரளிக்காக எழுதப்பட்டது அல்ல, இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் இதை படமாக பண்ணலாம் என்று நினைத்தேன், ஆகாஷுக்காக படம் பண்ண முடிவான போது, ஏன் இந்த கதையை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதனால் தான் இந்த கதையை தேர்வு செய்தேன். இதற்கு ஆகாஷ் முரளி மிக சரியாக இருந்ததோடு, அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம், அதனால் அவருடன் பணியாற்றுவது எனக்கு ஆர்வமாக இருந்தது. ஆறடி உயரம், கணீர் குரல் என்று அவரை பார்க்கும் போது ரொம்ப பர்சனாலிட்டியாக இருப்பார், அதுவே ஒரு நடிகருக்கான முதல் தகுதியாகும். ஆனால், அவருடன் பழக பழக தான் தெரிந்தது அவர் குழந்தை போன்றவர் என்று, அது இந்த கதைக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் அவரை முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கான கதை அமைந்தால் நிச்சயம் மீண்டும் ஆகாஷுடன் இணைவேன்.” என்றார்.
அஜித்துடன் படம் பண்ணுவதாக இருந்த நிலையில், எப்படி இந்த படத்திற்குள் வந்தீர்கள்?
அஜித் சாருடன் இரண்டு முறை படம் பண்ணுவதாக இருந்து, பண்ண முடியாமல் போய்விட்டது. அதற்காக பெரிய நடிகர்களுடன், பில்லா போன்ற கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே இயக்கினால் ஒரு இயக்குநராக எனக்கு எந்த வித ஆர்வமும் இருக்காது. புதியதாக செய்தால் மட்டுமே என்னால் ஆர்வமாக பணியாற்ற முடியும். அப்படி தான் ஷெர்ஷா படமும் அமைந்தது. இதுவரை நான் ராணுவம் தொடர்பான படம் பண்ணதில்லை, அதுவும் வேறு ஒரு மொழியில் அப்படிப்பட்ட படம் பண்ணும் போது எனக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. அந்த படத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு, படித்தது என அனைத்துமே புதிய அனுபவம். அப்படி தான் ‘நேசிப்பாயா’ திரைப்படமும் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. அந்த அனுபவம் அப்படியே ரசிகர்களுக்கும் கிடைக்கும்.
ஒளிப்பதிவாளர், சண்டைப்பயிற்சியாலர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பது ஏன்?
நேசிப்பாயா கதை தமிழ்நாட்டில் தொடங்கினாலும், 90 சதவீதம் கதை போர்ச்சுக்கல் நாட்டில் தான் நடக்கிறது. கதைப்படி மொழி தெரியாத ஒரு நாடு தேவை. போர்ச்சுக்கல் நாட்டை இதுவரை யாரும் திரைப்படங்களில் பெரிய அளவில் காட்டவில்லை, அதே சமயம் எங்கள் கதைக்கும் அந்த நாடு சரியாக இருந்ததால், அந்த நாட்டை தேர்வு செய்தோம். அதேபோல், ஒளிப்பதிவாளர், ஆக்ஷன் இயக்குநர் ஆகியோரது தேதிகள் எனக்கு மொத்தமாக தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஓம்பிரகாஷ் தான் ஒளிப்பதிவு செய்தார், ஆனால் அவரது தேதிகள் மொத்தமாக கிடைக்காத சூழல் அமைந்ததால், பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரான கேமரோன் பிரைசன், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா ஆகியோர் எங்களுக்கு பக்கத்தில் இருந்ததாலும், நான் எதிர்பார்த்தது போல் அவர்களுடைய தேதி மொத்தமாக கிடைத்ததாலும் தான் அவர்களை ஒப்பந்தம் செய்தேன். அவர்களுடைய பணிகள் நிச்சயம் பேசும் வகையில் இருக்கும்.
படத்தில் நடித்த நடிகர்கள் பற்றி...”
கல்கி கொச்சலின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை எழுதும் போதே அவரை மனதில் வைத்து தான் எழுதினேன். சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர், சினிமாத்தனம் இல்லாத ஒரு பெண்ணாக இருப்பார், அதனால் தான் அவரை நாயகியாக தேர்வு செய்தேன். மேக்கப் இல்லாமல் அவர் மிகவும் அழகாக இருப்பார், அவருடைய உடல்மொழி, நடிப்பு என அனைத்தும் ஒரு நடிகையாக அல்லாமல் எளிமையான பெண் போல் இருக்கும், அந்த விசயம் படத்திற்கு நன்றாக இருக்கும் என்பதால் அவரை நாயகியாக நடிக்க வைத்தேன்.” என்றார்..
நாயகன் ஆகாஷ் முரளி தனது முதல் படம் பற்றி கூறுகையில், “நான் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம் தான். ஆனால், இடையில் கொரோனா பிரச்சனை வந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு திருமணம் நடந்தது. இதனால் தான் சற்று காலதாமதம் ஆனாது. விஷ்ணு சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை தான். ‘அறிந்தும் அறியாமலும்’ படம் போன்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால், என்னை வைத்து விஷ்ணு சார் படம் பண்ணுவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்தது, எனக்கும் அது தெரியும். இருந்தாலும் அவரை ஒரு முறை சந்தித்து சாதாரணமாக பேச வேண்டும் என்று முயற்சித்தேன். அப்படி தான் அவரை சந்தித்தேன், அப்போது என் ஆசையை அவரிடம் சாதாரணமாக சொன்னேன். அப்படி தான் எங்கள் நட்பு ஆரம்பித்து, இன்று நேசிப்பாயா படம் வரை வந்துள்ளது.” என்றார்.
ஆகாஷ் முரளியின் மனைவியும், தயாரிப்பாளருமான சினேகா பிரிட்டோ கூறுகையில், “ஆகாஷின் நீண்ட நாள் கனவு தான் நடிப்பு, அது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். அதற்காக அவர் நடிப்பு பயிற்சி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார். வேறு ஒரு நிறுவனத்திற்காக அவர் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், அவரை பிடித்துப் போனதால் என் அப்பா நம்ம நிறுவனத்திலேயே பண்ணலாம் என்று சொல்லி ஆரம்பித்தோம். நான் ஆகாஷை வைத்து படம் இயக்குவது எதிர்காலத்தில் நடக்கலாம்.” என்றார்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...