Latest News :

”சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை” - பா.இரஞ்சித் பேச்சால் அதிர்ந்த மேடை
Wednesday December-04 2024

அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ் .தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

 

வரும் டிசம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் சி.வி.குமார் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இயக்குநர்கள் பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “தயாரிப்பாளர்கள் சி.வி.‌குமார் மற்றும் தங்கராஜ் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிக்கும் படி சுவாரசியமாக இருக்கின்றன. நிச்சயமாக இந்த திரைப்படம் வெற்றி பெறும். ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். 

 

சென்னை 28 படத்தில் நான் பணியாற்றும் போது மிர்ச்சி சிவாவும் அதில் நடித்திருந்தார். அவருடைய திறமை இன்னும் வெளிப்படவில்லை என்று தான் நான் கருதுகிறேன். நல்லதொரு தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவர் வெல்வார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.‌ 

 

தயாரிப்பாளர் சி வி குமாரிடம் வாய்ப்பு பெற்றது தனி கதை. நானும் என்னுடைய நண்பரும் இணைந்து எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதன் மூலமாக வாய்ப்பினை பெற்றோம். அது மறக்க இயலாத நிகழ்வு.  பின்னர் நான் சந்தோஷ் நாராயணனை சந்தித்தேன். அவருடைய இசையில் உருவான பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வேறு மாதிரியான இசை வேண்டும் என்று கேட்டேன். அவர் அதற்கும் தயாராக இருந்தார். இன்று அவர் தனித்துவமான அடையாளத்துடன் இருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்தார். இன்று புதிய சினிமா உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளிகளுக்கு அவர்தான் முதல் தேர்வு. அவருடைய திறமையை கண்டெடுத்த சி வி குமாருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ சூது கவ்வும் 2 படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தர வேண்டும் என வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி, நன்றி,” என்றார். 

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், “இயக்குநர்கள் பா ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இதுவரை எந்த நிகழ்வுக்கும் ஒன்றாக வந்ததில்லை என நினைக்கிறேன். இங்கு அவர்கள் ஒன்றாக வந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அட்டகத்தி படத்திற்கு முன்பு என்னை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரிடத்திலும் அறிமுகப்படுத்தி திறமையான இசை கலைஞர் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டவர் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா.‌ நான் எப்போதெல்லாம் சோர்ந்து  போகிறேனோ அப்போதெல்லாம் உற்சாகப்படுத்துபவர் மிர்ச்சி சிவா தான். 

 

மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் தான் நான் இசையமைக்க வேண்டிய முதல் திரைப்படமாக இருக்க வேண்டியது.‌ அந்தப் படத்தின் இசை வேறு வடிவமாக இருக்கும் நீ வேண்டாம் என்று நாசுக்காக மறுத்தவர் மிர்ச்சி சிவா.

அதன் பிறகு சி.வி.‌குமார் என்னை ஒருநாள் சந்தித்தார். என்னுடைய இசை எல்லாம் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது, ஒரு மூன்று மாதம் காத்திருங்கள் என்றார். சொன்னது போல் மூன்று மாதம் கழித்து வந்தார், பா. ஞ்சித்தை அறிமுகப்படுத்தினார்.‌ அவருக்கு என்னுடைய இசை பிடிக்கவில்லை. இந்த மக்களை பார் என்று அழைத்துச் சென்று காண்பித்தார். அதன் பிறகு ஃபோக் மியூசிக்கை பற்றி தெரிந்து கொண்டேன்.‌ உண்மையை சொல்லப் போனால் என்னை ஒரு கலைஞராக மாற்றியது பா. ரஞ்சித் தான்.

 

எனக்கு கிடைத்த முதல் மூன்று படங்கள் என்னை அடையாளப்படுத்தியவை. இதற்காக இந்த மூன்று இயக்குநர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைக்கும் போது உணர்வுப்பூர்வமாக இருந்தது. அது மறக்க முடியாத அனுபவம். இந்த மூன்று இயக்குநர்களிடம் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். சூது கவ்வும் 2 படத்திற்கு இசையமைத்த அறிமுக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். அவர் இங்கு மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தினார்.  இது என்னை மிகவும் கவர்ந்தது. இந்த இசை அமைப்பாளருக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் வாய்ப்பு வழங்குங்கள் என்று தயாரிப்பாளர் சி வி குமாரிடம் கேட்டுக்கொள்கிறேன். சூது கவ்வும் 2 குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.‌ இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள், நன்றி” என்றார். 

 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ”பா ரஞ்சித் மின்னஞ்சல் அனுப்பி தயாரிப்பாளர் சி வி குமாரை கவர்ந்தார். நான் அவருக்கு ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி வாய்ப்பினை பெற்றேன். நானும் நலன் குமாரசாமியும் குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட பிறகு திரைப்படங்களை உருவாக்குவதற்காக தயாரிப்பாளர்களை அணுகத் தொடங்கினோம். தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் ஸ்டைல் எனக்கு என் மீது இருந்த தன்னம்பிக்கையை குறைத்து விட்டது. கதை சொல்லும் விதம் எனக்கு பிடிபடவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி அவர்களை சம்மதிக்க வைப்பதெல்லாம் முடியாது. அதனால் நமக்கெல்லாம் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று நம்பினேன்.  அந்த தருணத்தில் தான் அட்டகத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தயாரிப்பாளர் மதுரையிலிருந்து வருகை தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரை ஃபேஸ்புக்கில் பின் தொடர்ந்தேன். ஒரு நாள் அவருடைய சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து கதையை கேட்டார்.‌ அவரை சந்தித்த உடன் நான் சொன்ன முதல் வார்த்தை எனக்கு கதை சொல்ல வராது என்றேன், அவர் பரவாயில்லை திரைக்கதையை கொடுங்கள் என்றார். அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் கதையை வாசித்து விட்டு படம் தயாரிக்கலாம் என்றார். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேடையில் தற்போது நின்றிருக்கும் அனைத்து திறமைசாலிகளையும் உருவாக்கியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

 

சூது கவ்வும் படத்தின் கதையை நலன் குமாரசாமி எழுதும்போதே எனக்கு தெரியும். அவர் ஃபாதர் ஆப் டார்க் ஹுயூமர். அவருடைய திரைக்கதை சிறப்பாக இருக்கும்.  சூது கவ்வும் படத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்புள்ள ஒரே கதாபாத்திரம் அருமை பிரகாசம். அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்” என்றார். 

 

இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், ”சூது கவ்வும் படத்தை உருவாக்கும் போதே மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. அதனை 47 நாட்களில் உருவாக்கினோம். அதன் பிறகு நீண்ட தூரம் பயணித்து விட்டேன். அது ஒரு மேஜிக் போல்  நடந்தது. சி வி குமார் ஸ்கிரிப்ட் படித்து அதனை நன்றாக ஜட்ஜ் செய்யக்கூடிய திறமை பெற்றவர். அவர் ஸ்கிரிப்டை மட்டுமல்ல டைரக்டரையும் ஜட்ஜ் செய்யக்கூடியவர். திறமையான இயக்குநர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றால் அதில் அவருடைய கணிப்பும் இருக்கிறது. சூது கவ்வும் 2 படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்” என்றார். 

 

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ”பா ரஞ்சித் அவருடைய திருமணத்திற்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அழைப்பிதழை அனுப்பி இருந்தார். அதன் பிறகு அவருடனான நட்பு தொடர்ந்தது. ஒரு நாள் அவர் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது.‌ அட்டகத்தி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கார்த்திக் சுப்பராஜ் சொன்ன பீட்சா கதை பிடித்தது, அந்த படத்தின் பணிகளையும் தொடங்கினேன். இவரிடம் நல்ல ஒரு கதை இருக்கிறது என்று நலன் குமாரசாமியை அறிமுகப்படுத்திய பிறகு கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் சொன்னார்.‌ அதன் பிறகு அவர் சொன்ன கதையும் பிடித்தது. 

 

சந்தோஷ் நாராயணனை சந்தித்தபோது அவர் வேறு ஒரு படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய திறமை எனக்கு பிடித்திருந்தது, நம்பிக்கையும் இருந்தது. பா. ரஞ்சித் என்னை சந்தித்த போது இசை யுவன் ஷங்கர் ராஜா தான் வேண்டும் என்று கேட்டார்.  அவரை சமாதானப்படுத்தி சந்தோஷ் நாராயணனை ஒரு முறை சந்தியுங்கள், அவருடன் பணியாற்றுங்கள், பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் என்றேன்.  

 

சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதிக் கொடுங்கள் என்று நலன் குமாரசாமியிடம் கேட்டேன். அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை, அதன் பிறகு அவரிடம் கதை கருவை கொடுங்கள். நாங்கள் திரைக்கதை எழுதிக் கொள்கிறோம் என்று நான் அனுமதி கேட்டேன். அர்ஜுன் திறமையான எழுத்தாளர்.  அவருக்கு கதையைப் பற்றிய அறிவு நிறைய இருக்கிறது.  இன்று ஏராளமானவர்களுக்கு காமெடியை காட்சிப்படுத்த தெரியவில்லை. ஆனால் இயக்குநர் அர்ஜுன் அதனை இந்தப் படத்தில் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்.‌ இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்கள். 

 

இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு ரசிகர்களை சென்றடைகிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் தயாரிப்பாளர் தங்கராஜ் தான். திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது, திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையிலான படம். அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தின் பணிகள் நிறைவடையும் முன்பே அடுத்த பாகத்திற்கான கதையையும் அர்ஜுன் எழுதிக் கொடுத்து விட்டார். அந்த படமும் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன். எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

தயாரிப்பாளர் தங்கராஜ் பேசுகையில், ''சி வி குமார் ஸ்கூலில் இருந்து ஏராளமான திறமைசாலிகள் உருவாகி இருக்கிறார்கள்.‌ அந்த வரிசையில் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் என்னை சந்தித்தார். அவர் முதலில் 'பீட்சா 4 ' படத்தை உருவாக்குவதற்காக தான் சந்தித்தார். அந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி முடித்த பிறகு ஒரு நாள் 'சூது கவ்வும் 2' படத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன். உங்களிடம் சொல்கிறேன், கேளுங்கள் என்றார். அப்போது அவரிடம் முதலில் பீட்சா 4 படத்தை தயாரிப்போம். சூது கவ்வும் 2 படத்தின் பட்ஜெட் அதிகமாகும் என நினைக்கிறேன் என்றேன். கதையை முழுமையாக கேளுங்கள், அதன் பிறகு தீர்மானிக்கலாம்.

 

நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் 'சூது கவ்வும்' முதல் பாகத்தை தொடர்ச்சியாக மூன்று காட்சிகள் பார்த்து வியந்து இருக்கிறேன்.‌ அது ஒரு கல்ட் கிளாசிக் மூவி.‌ இது மனதில் ஓடியதால் பீட்சா 4 படத்திற்கு முன்பாக சூது கவ்வும் 2 படத்தினை தயாரிக்கலாம் என ஆசைப்பட்டேன். அப்படித்தான் இந்த படத்தின் பணிகள் தொடங்கின. முதலில் மிர்ச்சி சிவாவிடம் பேசி ஒப்பந்தம் செய்தோம். அவர் 'கலகலப்பு', 'சென்னை 28', 'தமிழ் படம்' ஆகிய படங்களின் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். அனைத்தும் வெற்றி பெற்ற படங்கள். இந்த செண்டிமெண்ட் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்தோம். அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியை தந்தது. 

 

அதன் பிறகு நானும், சி வி குமாரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கத் தொடங்கினோம்.‌  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அதற்காக இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் வரும் 13ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

இயக்குநர் எஸ் ஜே அர்ஜுன் பேசுகையில், ”தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய விஷயங்களை மனதிற்குள் வைத்திருப்பார்.‌ அது நடைபெறும் போது தான், சாத்தியமாகும் போது தான், அவர் என்ன நினைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்வு திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்டின் ரீ யூனியன் நிகழ்வாக இருக்கிறது. 

 

நான் முண்டாசுப்பட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பா ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை பார்க்கும்போது எனக்குள் பயம் இருக்கும். அந்த பயம் தற்போது எனக்கு மீண்டும் வந்து விட்டது இவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கிறேன். சூது கவ்வும் 2 படத்தினை இயக்குவதற்காக எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. படத்தை ஓரளவு சிறப்பாகவே செய்து இருக்கிறோம். இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி பார்த்துவிட்டு திட்டாமல் இருந்தாலே வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன். இந்தப் படத்தில் நடித்த கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.  படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை  வழங்கினார்கள். அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

இந்தப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சி வி குமாருக்கும் நன்றி.  தயாரிப்பாளர் தங்கராஜை அவருடைய உணவகத்தில் சந்தித்து முதலில் பீட்சா 4 படத்தின் கதையை விவரித்தேன். அதன் பிறகு சூது கவ்வும் 2 படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன்.  அதை கேட்டுவிட்டு அவர் இந்த படத்தை தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

நடிகர் பாபி சிம்ஹா பேசுகையில், ”சூது கவ்வும் 2 படத்தின் முன்னோட்டம் சிறப்பாக இருக்கிறது, மிகப்பெரிய நகைச்சுவை படைப்பாக இருக்கும் என்று நம்பிக்கையே உண்டாக்குகிறது. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனென்றால் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்திருக்கிறார். சில பேரால் தான் சில கேரக்டர்களை ஏற்று நடிக்க முடியும்.  இந்த வகையில் இந்த படத்தில் இடம்பெறும் குருநாத் என்ற கேரக்டரை சிவாவால் மட்டுமே நடிக்க முடியும். அவர் நன்றாக நடித்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.‌

 

சி. வி. குமார் சார் 'சூது கவ்வும் 2' வெல்லும், கவலைப்படாதீர்கள்.  சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் நடித்தேன். என் நடிப்பு மீது இயக்குநருக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. எடிட்டர் சில காட்சிகளை பார்த்துவிட்டு பாபி சிம்ஹா நன்றாகத்தான் நடிக்கிறார் என்று சொன்ன பிறகுதான் இயக்குநருக்கு நம்பிக்கை வந்தது.  தயாரிப்பாளர் சி வி குமாரிடம் சம்பளம் வாங்கிய அனுபவம் மறக்க முடியாதது.‌ இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும்” என்றார். 

 

நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ”தயாரிப்பாளர் சி வி குமாரும், இயக்குநர் அர்ஜுனும் என்னை சந்தித்தனர். சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர். இந்தப் படத்திற்கு நலன் குமாரசாமி ஒரு அவுட்லைனை சொல்லி இருக்கிறார், அதனை நாங்கள் விரிவுபடுத்தி இருக்கிறோம் என இயக்குநர் அர்ஜுன் முழு கதையையும் சொன்னார், நன்றாக இருந்தது. தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் சினிமாவின் சொத்து. அவர் ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்தில் வசதி இல்லை என்றாலும் திறமையான மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். இன்னும் நிறைய புதுமுக திறமைசாலிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து அவர் படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 

 

தயாரிப்பாளர் தங்கராஜ் தங்கமான மனிதர். படப்பிடிப்பு முழுவதும் சுவையான உணவை வழங்கினார். இந்தப் படத்திற்கான சம்பளம் காசோலையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை விற்பனையான பிறகு சம்பளம் கிடைக்கும் என சொல்லி இருக்கிறார்கள். அதனை நினைவூட்ட விரும்புகிறேன். இந்த படத்தில் வாகை சந்திரசேகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தின் இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் அற்புதமான திறமைசாலி. அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துகள்” என்றார்.

 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற, ‘சூது கவ்வும் 2’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் எட்வின் லூயிஸ் விஸ்வநாத்தின் நேரடி இசை நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்றது.

Related News

10211

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery