Latest News :

”பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல” - சூர்யா உருக்கம்
Friday December-20 2024

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக  நடைபெற்றது. 

 

விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம்,வி.இசட்.துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி. எஸ் வினோத் ராஜ், பாரி இளவழகன், ஜி. ஆர். ஆதித்யா, நாகேந்திரன், சுரேஷ், அஜயன் பாலா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜன், நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவாஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உதயா, ஆர். கே.கிரண் ( ஆர்ட் டைரக்டர்), தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன்,நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

.  

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தினார்கள். அடுத்து வந்த தப்பாட்டம் அரங்கை அதிரவைத்து அடங்கியது. 

 

அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “ஒருமுறை தான் சிவகுமார் சாரை சந்தித்தேன். அவர் ஓர் அற்புதமான மனிதர். நாம் பலரையும் இழந்துவிட்டோம். சிவகுமார் அவர்கள் தான் தமிழ் சினிமாவுக்கே தந்தையாக இருந்து வருகிறார். 25 ஆண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று பாலாவிடம் கேட்டேன். நான் என்ன செய்துவிட்டேன். எனக்கு ஏன் விழா எடுக்கிறீர்கள் என்றார். நிச்சயமாக விழா எடுத்தே தீரவேண்டும் என்று அப்போது உறுதியாக நினைத்தேன். சினிமாவில் சாதனை படைத்த பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்றவர்களை நாம் பாராட்டவில்லை. இனிமேலாவது நாம் எல்லோருக்கும் விழா எடுத்துப் பாராட்டத் தொடங்க வேண்டும்.” என்றார். 

 

நிகழ்வின் இடையே தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் இயக்குநர் பாலாவுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர். பொன்னாடையுடன் மேடையேற்றி தயாரிப்பாளர்கள் தாணு, தியாகராஜன், கதிரேசன், சிவா, தனஞ்ஜெயன் போன்றவர்கள் பாலாவின் இயக்கத்தைப் பற்றியும் அவரது கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிப் பேசினார்கள். 

 

அடுத்து பாலாவுடன் கதை விவாதங்களில் ஈடுபட்ட பவா செல்லதுரை, சிங்கம்புலி, அஜயன் பாலா, யூகி சேது ஆகியோரை இயக்குநர் மிஷ்கின் சுவாரசியமான கேள்விகளுடன் பேட்டி எடுத்தார்.

 

விழா தொடங்கிய சில நிமிடங்களில் பரபரப்பாக அரங்கிற்குள் நுழைந்தார்கள் சிவகுமாரும் சூர்யாவும். முதலில் சூர்யா பேச அழைக்கப்பட்டார்.  அப்போது நடிகர் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்கச் செயினை அணிவித்து மகிழ்ந்தார். இயக்குநர் பாலாவின் மீதான பேரன்பையும், நன்றியையும் தன் பேச்சில் சூர்யா நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார். 

 

நடிகர் சூர்யா பேசுகையில், “அண்ணன் பாலாவின் ‘சேது’ திரைப்படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகரால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா? ஒரு இயக்குநரால் இப்படி ஒரு படத்தை இயக்க முடியுமா என்று நினைத்தேன்.  பல நாட்கள் சேதுவின் தாக்கம் இருந்தது. அடுத்த படம் உன்னை வைத்து இயக்குகிறேன் என பாலா சொன்ன ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றி விட்டது. 2000 ஆம் ஆண்டு எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கையே இருந்திருக்காது. 

 

‘நந்தா’ படம் பார்த்துவிட்டு தான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன் பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயக்குநர் பாலாதான். உறவுகளுக்கு தனது படங்களில் பாலா மதிப்புக் கொடுப்பார். பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உறவு. நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு என்னுடைய அன்பும், மரியாதையும். ‘வணங்கான்’ முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

 

சூர்யா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பாலாவிடம் அர்ச்சனா கேட்க மிகுந்த தயக்கத்துடன் ஓர் அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார். “சூர்யா முன்னே நான்  சிகரெட் பிடிக்கமாட்டேன்.  தம்பி வருத்தப்படுவான். ஒருமுறை படப்பிடிப்பில் மறைந்து சிகரெட் குடித்தேன். ஆனால் படப்பிடிப்பில் எத்தனை முறை சிகரெட் குடித்தேன் என்று நினைவு வைத்து கேட்பான். என் உடம்பு மேல என்னைவிட அவனுக்கு அக்கறை அதிகம்” என்று நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் பாலா.”

 

Bala 25

 

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பை கொடுத்தது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியான போது படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்மறை முடிவாக இருக்கிறதே என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல தீபாவளிக்கு எதிர்மறை முடிவுடன் வந்து ஹிட் அடித்தது என்றும் சொன்னார்கள். அதே போல தான் நடந்தது. அவருடைய அவன் இவன் பட விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன். இன்றும் அது என் மனதில் நினைவிருக்கிறது. அருண் விஜய் அண்ணன் தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வர வேண்டும் தம்பி என கூப்பிட்டார். எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வது தான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

 

நடிகர் சிவகுமார் பேசுகையில், “பாலா சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதும் சேது படத்தில் அவர் வைத்த ஷாட்டுகள் எல்லாம் எனக்கு அப்படியே நினைவில் இருக்கின்றன. கிளைமாக்ஸில் விக்ரமின் கையை நான் பிடிக்கும் போது அவர் தட்டி விட்டு செல்வார். அப்போது நான் நிமிர்ந்து பார்ப்பேன். அந்த காட்சியை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது” என்றார்.

 

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் பேசுகையில், “நான் சினிமாவிற்கு வருவதற்கு மிக முக்கிய தூண்டுதலாக இருந்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் பாலா. அவருடைய 25 வது வருட விழா என்பது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் அவரது பல படங்களில் நான் இசையமைத்திருக்கிறேன். அவரது டைரக்ஷனில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் எனக்கு நடிப்பில் அவர் தான் குரு. ‘வணங்கான்’ படத்திற்கு’ நான் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்திருக்கிறார்” என்றார்.

 

இயக்குநர் விக்ரமன் பேசுகையில், “தமிழ் சினிமா எவ்வளவோ மாறி இருக்கிறது. டெக்னாலஜி மாறி இருக்கிறது. எஐ தொழில்நுட்பம் பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டோம். ஆனால் மாறாத ஒன்று என்றால் அது இயக்குனர் பாலாவும் அவரது எளிமையும் மட்டும் தான்” என்றார்.

 

இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சரியாக போகாத நிலையில் அப்படியே சோர்வுடன் அண்ணன் பாலா ஆபீஸ் இருந்த தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன், அப்போது என்னை பார்த்து பாலா உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தினார். கண்ணீரும் விட்டார். அடுத்து உடனே என்னிடம் நான் தயாரிக்கும் படத்தை நீ இயக்குகிறாயா என்று ஒரே வார்த்தை தான் கேட்டார். அப்படி அவர் எனக்கு மறுவாழ்வு கொடுத்த படம் தான் ’பிசாசு’. தோல்வியால் என் மீது எனக்கே நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் என்னை உற்சாகப்படுத்தி மேலே அழைத்து வந்தவர் அண்ணன் பாலா தான். இந்த விழாவுக்கு நான் மதியமே வந்து விட்டேன், ஏனென்றால் இது என்னுடைய வீட்டு விழா போல” என்றார்.

 

நடிகர் கருணாஸ் பேசுகையில், “இன்று நான் உங்கள் முன்னால் ஒரு நடிகனாக நிற்கிறேன் என்றால் இதற்கான அடையாளத்தை கொடுத்தது எனது குருநாதர் அண்ணன் பாலா தான். அவருடைய இந்த 25 ஆவது வருட விழாவிலும் அவர் இயக்கியுள்ள இந்த வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “என் தம்பி பாலா இந்த தேதியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருப்பது போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது” என்றார்.

 

நடிகை வேதிகா பேசுகையில், “பாலா சாரின் ஒரு மாணவியாகத்தான் நான் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். அவர் ஒரு இயக்குநர் மட்டுமல்ல அற்புதமான கதை சொல்லியும் கூட” என்றார்.

 

Vanangaan Audio Launch

 

நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், “இயக்குனர் பாலா ஒரு ஒப்பீடற்ற உலகத்தரம் வாய்ந்த இயக்குநர். ஜாதி, மதம், இனம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு கொரியன், அமெரிக்கன் போன்ற படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் மக்களுடைய வாழ்வியலை சரியாக படம் பிடித்து தன்னுடைய படங்களில் காட்டியவர். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது” என்றார்.

 

நடிகை வரலட்சுமி பேசுகையில்,  “இயக்குநர் பாலாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் என்னுடைய குரு அவர் தான். அவருக்காக தான் இந்த விழாவிற்கு நான் வந்திருக்கிறேன். என்னுடைய அம்மா இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இரட்டிப்பு சந்தோஷத்துடன் வந்திருக்கிறேன்” என்றார்.

 

இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “எங்கள் பாலு மகேந்திரா சார் பட்டறையிலிருந்து முதன் முதலாக இயக்குநராகி அந்த நம்பிக்கை ஒளியை ஏற்றியவர் அண்ணன் பாலா தான். பாலுமகேந்திரா பட்டறையின் தலை மகன் என்று அவரை சொல்லலாம். அவருடைய ஒவ்வொரு பட தலைப்புகளும் அவரின் சுபாவத்தை, அவரது நம்பிக்கையை, கருணையை கேள்வியை வெளிக்காட்டுவது போலவே இருக்கும்” என்றார்.

 

நடிகரும் சண்டை பயிற்சியாளருமான ஸ்டண்ட் சில்வா பேசுகையில், “ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு இயக்குனர்கள் தங்களது படங்களால் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள் அந்த வகையில் இயக்குனர் பாலாவும் தன் பங்களிப்பை அதில் கொடுத்திருக்கிறார். அவரது படங்களை பார்த்து ரசித்து வளர்ந்த எனக்கு தற்போது வணங்கான் படத்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு முதன் முறையாக கிடைத்துள்ளது. பாலா ஒரு டெரரான மனிதர் என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் அவருடன் பழகும் போது தான் தெரிந்தது அவர் ஒரு குழந்தை என்று” என்றார்.

Related News

10233

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியானது!
Monday December-30 2024

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...

கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Monday December-30 2024

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...

இசையுலகில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜின் வாரிசு!
Monday December-30 2024

சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும்  'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது...

Recent Gallery