Latest News :

’ஐடென்டிட்டி’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள்! - உற்சாகத்தில் படக்குழு
Tuesday January-07 2025

மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில், அவரது நடிப்பில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஐடென்டிட்டி’ திரைப்படம் கேரளாவில் மட்டும் இன்றி தமிழகத்திலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

 

ராகம் மூவிஸ் சார்பில் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடண்ட் குரூப் சார்பில் சி.ஜே.ராய் தயாரிப்பில், அகில் பால் மற்றும் அனஸ் கான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க, திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் வினய் ராய் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

 

தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பினால் தற்போது தமிழகத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், தமிழகத்தில் ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு நேற்று பத்திரிகையாளர்களுக்கு படத்தை திரையிட்டதோடு, படம் முடிந்த உடன் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, “நான் உங்களை நிறைய தமிழ்ப் படங்களுக்காகச் சந்தித்துள்ளேன், முதல் முறையாக, ஒரு மலையாளப்படத்திற்காக சந்திக்கிறேன். பொதுவாகவே மலையாளப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக உள்ளது. நான் நிறைய முறை சொல்லியுள்ளேன், எனக்கு மலையாளப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். நிறைய மரியாதை உள்ளது. வருடத்திற்கு ஒரு மலையாளப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. ஐடென்டிட்டி டீமிற்கு மிகப்பெரிய நன்றி. மிக புத்திசாலித்தனமான திரைக்கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அகில் கதை சொன்ன விதமே பிரமாதமாக இருந்தது. டோவினோ மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம். அகில் சிரித்துக் கொண்டே இருந்தாலும் மிக சீரியஸாக வேலை செய்வார். வினய் ரொம்ப காலமாகத் தெரியும். இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் ஷூட் செய்யும் போதே வெற்றி பெறும் எனும் நம்பிக்கை இருந்தது. மலையாளத்தில் எப்போதும் பெண்களுக்கு நல்ல கேரக்டர்கள் எழுதுவார்கள். இங்கு ரிலீஸ் நாளிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது. இப்போது தமிழில்  கிடைத்து வரும் வரவேற்பு  மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

 

நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில், “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். எனக்கு தமிழ் அவ்வளவாக வராது. இந்தப்படம் 2020 யிலிருந்து நானும் அகிலும் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்போதே ஷாட் டிவிசனோடு தயாராக இருந்தார். இந்தப்படம் சீரியஸ் என்றாலும், ஷூட்டிங் ரொம்ப ரொம்ப ஜாலியாக இருந்தது. தமிழில் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்னுடைய எந்தப்படம் தமிழில் வெளியானாலும், தமிழ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு தருகிறார்கள். இன்னும் நல்ல தமிழ்ப்படங்களைத் தொடர்ந்து தருவேன். உங்களோடு என் படங்கள் பற்றி உரையாட எனக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த அன்பிற்கு நன்றி” என்றார்.

 

நடிகர் வினய் பேசுகையில், “அகில் 2020ல் இந்தப்படத்தின் கதை சொன்னார். யார் வந்தாலும், யார் வராவிட்டாலும்,  இந்தப்படம் நான் செய்வேன் என்றேன். பின் திரிஷா கமிட்டானதாகச் சொன்னார்கள். அப்போதே இந்தப்படம் வெற்றி என்பது புரிந்து விட்டது. என்னுடைய கேரியரில் இந்தப்படம் மாதிரி கதை வந்ததில்லை, டொவினோ தேர்ந்தெடுத்து படங்கள் செய்பவர். டொவினோ, அகில் இருவருக்கும் இந்தப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றிக் கூறிக்கொள்கிறேன். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான கட்டத்தில் வந்தது. மிக மிக என்ஜாய்  செய்தேன். தமிழ் ரசிகர்கள் இந்தப்படத்திற்குப் பெரிய வரவேற்பு தந்துள்ளீர்கள் நன்றி” என்றார்.

 

இயக்குநர் அகில் பேசுகையில், “எங்கள் படம் ஐடென்டிட்டி இங்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கலெக்சன் உயர்ந்து வருகிறது. இந்தப்படம் பார்த்து, பாராட்டி கருத்து தெரிவித்த, அனைத்து நண்பர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இப்படத்தில் கதை, ஆக்சன் காட்சிகள் எல்லாம் உங்களுக்காக 1 1/2 வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கியது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.

 

ஐடென்டிட்டி படத்தின் அகில இந்திய விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது, மேலும் ட்ரீம் பிக் பிலிம்ஸ் பேனரின் கீழ் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. GCC விநியோக உரிமையை ஃபார்ஸ் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

Related News

10270

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடிக்கும் ’எமன் கட்டளை’!
Tuesday January-07 2025

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...

விவசாயத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள ‘பூர்வீகம்’!
Tuesday January-07 2025

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...

Recent Gallery