Latest News :

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’. தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ்  மற்றும் அனீஷ் அர்ஜுன் தேவ் தலைமையிலான வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து உருவாக்கியிருக்கும் ‘அகத்தியா’ திரைப்படத்தை பிரபல பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜய் இயக்கியிருக்கிறார்.

 

வரும் ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘அகத்தியா’ திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலுடன், படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட சாகசம் நிறைந்த ‘அகத்தியா கேம்’ வெளியிடப்பட்டுள்ளது. 

 

அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத்  தூண்டுவதாக அமைந்துள்ளது. 

 

கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜீவா, “என்னை ஒரு வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது.  இந்த முயற்சி அகத்தியா திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும்.  இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்.” என்றார்.

 

படத்தின் கதாநாயகி ராஷி கண்ணா பேசுகையில், “ஒரு படத்தை விளம்பரப்படுத்த, இது முற்றிலும் புதுமையான வழி. கேமிங் மூலம் மில்லினியல்கள் மற்றும் ஜென் Z ஜி பார்வையாளர்களைக்  கவரும் புதிய பொழுதுபோக்கு வழியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஒரு அருமையான முயற்சியின் அங்கமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிரமாண்டமான நிகழ்வினில் ஒரு பகுதியாகப் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில்,  படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.  திரை ஆளுமை மேஸ்ட்ரோ இளையராஜாவிடமிருந்து இந்த பாடல் உருவாகியுள்ளது.  இளையராஜாவின் இசையில், காலத்தால் அழியாத கிளாசிக் பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலை, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா வெகு அழகாக மறு உருவாக்கம் செய்துள்ளார்.” என்றார்.

 

இயக்குநர் பா.விஜய் பேசுகையில், “இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இளையராஜா சாரின் மாஸ்டர் பீஸை, யுவனின் நவநாகரீக இசையுடன் கலப்பது,  இந்த மெல்லிசை பாடலின் புத்திசாலித்தனத்தனமான கொண்டாட்டமாகும். இந்தப் பொங்கலில் ரசிகர்களுக்கு இது சரியான பரிசாக இருக்கும்.” என்றார். 

 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான  டாக்டர். ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “அகத்தியா ஒரு பிரம்மாண்ட ஃபேண்டஸி முயற்சியாகும், இதன் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய தரத்துடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டை உருவாக்கும் கருத்தை, எனது நல்ல நண்பரும் கூட்டாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் எனக்கு முதலில் முன்மொழிந்தபோது, முதலில் நான் ஆச்சரியப்பட்டேன், அந்த ஐடியாவை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு நாள் தேவைப்பட்டது. இருப்பினும், அதன் புதுமை மற்றும் படத்தைப் பிரபலப்படுத்த  அற்புதமான வழி அது தான் என்பதை விரைவாக உணர்ந்தேன், உடனடியாக எனது ஒப்புதலை அளித்தேன். பார்வையாளர்களை மேலும் மகிழ்விப்பதற்காக, குறிப்பாகப் பொங்கல் பண்டிகையின் போது, புதிய தலைமுறைக்காக மறுவடிவமைக்கப்பட்ட “என் இனிய பொன் நிலாவே” என்ற ஐகானிக் பாடலை வெளியிட முடிவு செய்தோம். அகத்தியாவின் மூலம் இந்த சிறப்பான இசைப் பயணத்தைச் சாத்தியமாக்கிய பழம்பெரும் ஆளுமை இசைஞானி இளையராஜா சார் மற்றும் திறமை மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

Aghathiya Movie Game Launch

 

அகத்தியா கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் பேசுகையில், “இந்த கேம் அனைவரும்  எளிமையாக விளையாட வேண்டும் என்பதை  மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் முதல் முறையாக விளையாடுபவர்கள் கூட சிரமமின்றி வெகு எளிதாக இந்த விளையாட்டை அனுபவிக்க முடியும். ஜீவா மற்றும் அர்ஜுன், ஏஞ்சல்ஸ் போன்ற கதாபாத்திரங்கள், மற்றும் எட்வர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் டெவில்ஸ் போன்ற கதாபாத்திரங்களுடன், இந்த கேம் பார்வையாளர்களைக் கவரும் அதே நேரத்தில், திரைப்படத்தின் தனித்துவமான கதைக்களம் பற்றிய தனித்துவமான பார்வையையும் வழங்கும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், “விண்டேஜ் பாணியில் ஒரு பாடலை உருவாக்குவது குறித்து, பா.விஜய் என்னை அணுகியபோது, அதைப் பற்றி யோசிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள், "என் இனிய பொன் நிலாவே" பாடலை மறு உருவாக்கம் செய்யலாம் என, என்  மனதிலிருந்த ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவரது முகத்தில்  உடனடியாக பெரும் உற்சாகம் தெரிந்தது. இப்பாடலை முதலில் பாடியவர் கே.ஜே. யேசுதாஸ், இந்த புதிய பதிப்பை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் பிரியா ஜெர்சின் ஆகியோர் அழகாக உயிர்ப்பித்துள்ளனர். முதன் முதலாக இப்பாடலை உருவாக்கிய அதே இசைக்கலைஞர்களுடன் மீண்டும் இணைந்து, இப்பாடலை உருவாக்கினோம். காலத்தால் அழியாத ஒரு தலைசிறந்த படைப்பிற்கான அஞ்சலியாக இந்தப் பாடல், என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் எனது தந்தையின் இசை எப்போதும் வழங்கிய அதே மேஜிக்கை இப்பாடல் மீண்டும் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இது வெறும் பாடல் அல்ல; இது காலத்தைக் கடந்து, தலைமுறைகளை இணைக்கும் இசையின் கொண்டாட்டம்." இப்பாடலை மீண்டும் உருவாக்கியதைப்  பெருமையாக உணர்கிறேன்.” என்றார்.

 

மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை  ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், அகத்தியா ஒரு அற்புதமான திரை அனுபவமாக விஷுவல் விருந்தாக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 31, 2025 இல் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Related News

10280

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

’விடுதலை - பாகம் 2’ எங்களுக்கு மிகவும் லாபகரமான படமாக அமைந்தது - தயாரிப்பு தரப்பு அறிவிப்பு
Monday January-13 2025

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...

Recent Gallery