தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், தனது உதவியாளர் வர்ஷா பரத் இயக்கியிருக்கும் ’பேட் கேர்ள்’ (BAD GIRL) என்ற படத்தை இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் அனுராக் காஷ்யப் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.
’விசாரணை’ மற்றும் ‘வட சென்னை’ ஆகிய படங்களில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா பரத், இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘எங்க ஊர் பாட்டுக்காரன்’ பட புகழ் சாந்தி பிரியா நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹிருது ஹரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி இப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஃப்ரீதா ஜெயராமன் (ISC), ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் டைகர் காம்படிசன் (Tiger Competition) பிரிவில் ’பேட் கேர்ள்’ (BAD GIRL) திரைப்படம் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘பேர்ட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி ஆகியோர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன், “என்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றுபவர்கள் அவ்வபோது சில யோசனைகளை சொல்வார்கள், அதை கேட்டுவிட்டு வெளிப்படையாக நன்றாக இல்லை என்று சொல்வேன், இது படமாகாது, என்று சொல்லி விடுவேன். அப்படி இருந்தும் என்னிடம் தொடர்ந்து அவர்களுக்கு தோன்றும் யோசனைகளை சொல்லி, கருத்து கேட்பார்கள். அப்படி தான் வர்ஷாவும் என்னிடம் சில யோசனைகளை சொல்லிவிட்டு, பிறகு இந்த படம் பற்றி சொன்னார். ஆனால், அவர் சொல்லும் போது கருத்து மட்டும் கேட்காமல், இந்த படத்தை அமேசான் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொன்னார். மேலும், அனைத்தும் ரெடியாகி விட்டது, அவர்கள் ஒரு தயாரிப்பு நிறுவனம் உடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், என்றார். சரி, நமது நிறுவனமே இருக்கட்டும், என்று நான் சொன்னேன். அப்படி தான் இந்த படத்திற்குள் நான் வந்தேன். அதன்படி பார்த்தால் நான் தான் இந்த படத்திற்குள் கடைசியாக வந்தேன். ஆனால், சில காரணங்களால் அமேசான் நிறுவனத்தினால் இந்த படத்தை பண்ண முடியாமல் போனபோது நானே தயாரிக்க முடிவு செய்து விட்டேன். அப்போது, இயக்குநர் அனுராக் காஷ்யப் சென்னை வந்திருந்த போது, இந்த படம் பற்றி அவரிடம் பேசினேன், அவர் சேர்ந்து பண்ணலாம் என்று சொன்னார், அப்படி தான் இந்த படத்திற்குள் நாங்கள் வந்தோம்.
வர்ஷா ரொம்ப தெளிவாக இருக்கிறார். அவரது கதையை அவரை விட, அவர் படத்தில் பணியாற்றியவர்கள் அதிகம் நம்புகிறார்கள். படப்பிடிப்பு தொடங்கிய போது நான் சாந்தி பிரியா அவர்களை சந்தித்தேன், அப்போது அவர் படம் நிச்சயம் தேசிய விருது பெறும் சார், சர்வதேச திரைப்பட விழாக்களுக்கான படம் சார், என்று படம் குறித்து ரொம்ப ஆர்வமாக பேசினார். நடிகை டாப்ஸி என்னிடம், உங்கள் படங்களில் பெண்கள் கதாபாத்திரம் அதிகம் இருப்பதில்லை ஏன்? என்று அடிக்கடி கேட்பார். நாங்களும் பெண்களைப் பற்றிய படம் எடுப்போம், இதுபோன்ற படங்களை தயாரிப்போம், என்பதை காட்டுவதற்காக தான் அவரை இன்று சிறப்பு விருந்தினராக அழைத்தேன். அனுராக் காஷ்யம் பலருக்கு முன் மாதிரியாக இருக்கிறார். கிரியேட்டிவிட்டியாகவும், தயாரிப்பாகவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அதனால், இனி எங்கள் கூட்டணில் பல முயற்சிகள் உருவாகும்.
‘பேட் கேர்ள்’ படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம். எங்கள் நிறுவனத்திற்கு முக்கியமான படம். ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தை சர்வதேச ரசிகர்கள் பார்க்கிறார்கள், என்பது பெரிய விசயம். பேட் கேர்ள் படம் க்ராஸ் ரூட் நிறுவனத்தை பெருமைப்பட வைக்கும்.” என்றார்.
படத்தின் இயக்குநர் வர்ஷா பரத் பேசுகையில், “வெற்றிமாறன் சார் சில பிரபலங்களுக்கு படத்தை போட்டு காண்பித்தார், அப்போது பலர் எதற்கு பேட் கேர்ள் என்று தலைப்பு வைத்தீர்கள், அதுவே படத்திற்கு நெகட்டிவை கொடுக்கும் என்றார்கள். என் படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் நல்லவளா? கெட்டவளா? என்பது தெரியாது. அவர் சில தவறுகள் செய்கிறாள், சில தவறான முடிவுகளை எடுக்கிறாள், அவ்வளவு தான், அதற்காக அவளை கெட்டவள் என்று முடிவு செய்துவிட முடியாது. இந்த படத்தின் கதையை எழுதிவிட்டு, பிறகு பல மாற்றங்களை செய்தோம். எனக்கு சில சமயங்களில் சரியாக செய்கிறோமா, என்ற சந்தேகம் வரும், அதனால் அடிக்கடி மாற்றங்கள் செய்தோம். படம் முடிந்த பிறகு கூட எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்தது, ஆனால் அனுராக் காஷ்யப் சார் படத்தை பார்த்துவிட்டு எங்களை பாராட்டியது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது.
என் கதையின் பெண் கதாபாத்திரத்தை விட, மோசமான செயல்கள் செய்யும் ஆண் கதாபாத்திரங்களை ஹீரோவாக சித்தரித்த படங்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக, பெண்கள் சிகரெட் புகைக்கலாம், மது குடிக்கலாம், என்று நான் சொல்ல வரவில்லை. பெண்கள் என்றாலே தாய், தெய்வம், பத்தினி என்று பல பாரங்களை சுமக்க வேண்டியுள்ளது. இது ரொம்பவே அதிகம் என்று தான் சொல்கிறேன். இந்த கருத்தை தான் என் படம் வலியுறுத்துகிறது, என்பதை சொல்லும் போது பல பெண்கள் என்னை பாராட்டினார்கள். ஆண்களும் கொஞ்சம் தயக்கத்துடன் பாராட்டினார்கள், அதனால் தான் இந்த கதையை படமாக எடுத்திருக்கிறேன். நான் சொல்ல வருவது எல்லாம், பெண்கள் புனிதர்களாக இருக்க வேண்டும் என்று இல்லை, அவர்களை மனிதர்களாக இருக்கலாம், அது தான் முக்கியம்.” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் வர்ஷாவை பாராட்டியதோடு, ‘பாட்டல் ராதா’ பட நிகழ்வில் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக மனிப்பு கேட்டார். மேலும், தனது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டவர், தனது பேச்சுக்கான விளக்கமளித்து, அதை தவறாக புரிந்துக் கொண்டு கருத்து கூறியவர்களிடத்தில் சில கேள்விகளையும் முன் வைத்தார்.
நடிகை சாந்தி பிரியா பேசுகையில், “இயக்குநர் வர்ஷா வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் முடியுமா? என்று கேட்டார். உடனே ஓகே சொல்லிவிட்டேன். பிறகு தான் தெரிந்தது அவர் தயாரிப்பு மட்டுமே என்று. இருந்தாலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்கிறோம், என்ற மகிழ்ச்சியோடு நடிக்க வந்தேன். தொடக்கத்திலேயே நோ மேக்கப், என்று வர்ஷா சொல்லிவிட்டார். அதனால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆனால் அவர் தைரியம் சொல்லி நடிக்க வைத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது, நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
நடிகை அஞ்சலி சிவராமன் பேசுகையில், “வர்ஷா மிகவும் திறமையான இயக்குநர். அவரது எழுத்து நிச்சயம் பெரும் அதிர்வலைகளை எழுப்பும். இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.” என்றார்.
இறுதிக்கட்டப் பணிகளை எட்டியிருக்கும் ‘பேர்ட் கேர்ள்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...