Latest News :

“தம்பி கலக்கிட்டான்” - கவுதம் கார்த்திக்கை மனம் திறந்து பாராட்டிய நடிகர் ஆர்யா
Sunday February-23 2025

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் ஏஎ.வெங்கடேஷ் இணை  தயாரிப்பில்  மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ்' (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா,  அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,  காளி  வெங்கட்  மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். 

 

இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.  இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசுகையில், “இந்த படத்துக்கு எனக்கு சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார் தான்.  இந்தக் கதையைக் கேட்டுவிட்டு இது மிகப்பெரிய பட்ஜெட் ஆகுமே என தயாரிப்பாளரிடம் கேட்டபோது, ரசிகர்களுக்கு பிரமிப்பான திரையரங்கு அனுபவத்தை கொடுப்பதற்காக சமரசம் இல்லாமல் இந்த படத்தை எடுத்து தான் ஆக வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார். இப்போ இருக்கும் காலகட்டத்தில் ஓடிடி எல்லாவற்றையும் தாண்டி திரையரங்குகளை மட்டுமே நம்பி நாம் படம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் தான் லப்பர் பந்து. அதனாலேயே அவர் இந்த கதை மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார். 

 

இயக்குநர் மனு ஆனந்த் எல்லாவற்றிலும் பர்ஃபெக்சன் ஆக இருக்கக்கூடியவர். எந்த ஒரு காட்சியையும் அழகான முன்கூட்டிய திட்டமிடலுடன் படமாக்கினார். அதனால் தான் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் எடுக்க வேண்டிய படத்தை சரியான நேரத்திற்குள் எடுத்து முடித்தார். 

 

இந்தப் படத்திற்காக மும்பையில் தண்ணீருக்கு அடியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது அப்போது என்னுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளரும் தண்ணீருக்குள் டைவ் அடித்து இந்த காட்சிகளைப் படமாக்கினார். இப்படி ஒரு ஒளிப்பதிவாளரை பார்ப்பது ரொம்பவே அரிது. ஆக்சன் படம் என்பதால் இசை ரொம்பவே முக்கியம். 

 

இசையமைப்பாளர் திபு நிணன்  அந்த அளவிற்கு இந்த படத்திற்கு தனது ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளார். சில்வா மாஸ்டர் கிட்டத்தட்ட 80 நாட்கள் இந்த படத்தில் பணியாற்றினார். படம் முழுவதுமே ஒரு ஆக்சன் மூடு இருக்கும். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட படத்தின் இணை இயக்குநர் போலவே அவர் பணியாற்றினார்.

 

கவுதம் கார்த்திக் ரொம்பவே கூலான, அதேசமயம் ஒரு செக்ஸியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷான ஒரு நடிப்பை அவர் கொடுத்துள்ளார். நானும் மனுவும் பேசும் போது கூட “தம்பி கலக்கிட்டான்” என்று தான் அவரது நடிப்பைப்  பற்றி கூறுவோம். இந்த கதாபாத்திரத்தை தமிழில் இவரைத் தவிர வேறு யாருமே பண்ண முடியாது என்பது போல சரத்குமாருக்கு என அளவெடுத்து தைத்த சட்டை போன்று அவரது கதாபாத்திரம் அமைந்துவிட்டது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியில் அவர் நடித்திருந்தார். இப்படி எல்லாம் இந்த வயதில் பண்ண முடியுமா என பிரமித்துப் போனேன்.

 

மஞ்சுவாரியார் இந்த படத்தில் கதாநாயகியாக கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை என்று மனு ஆனந்த் புலம்பும் அளவுக்கு இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரொம்பவே வலுவானது. கிட்டத்தட்ட ஆறு மாதமாக அவரைப் பின் தொடர்ந்து இந்த படத்திற்கு நடிக்க அழைத்து வந்துள்ளார். நாயகி அனகா ஒவ்வொரு காட்சிக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள் கேட்பார். ஒரு படத்தில் கூட இவ்வளவு சந்தேகங்கள் கேட்க முடியுமா என ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.

 

அதுல்யா ரவி, ரைஸா வில்சனும் ஆக்சன் காட்சிகளுக்காக தினசரி ஆறு மணி நேரம் ரிகர்சல் எடுத்தார்கள். காரணம் பெண்கள் சண்டை போடுகிறார்கள் என்றால் பார்ப்பதற்கு அது போலியாக இருப்பது போல் இருக்கக் கூடாது என்பதற்காக அவ்வளவு மெனக்கெட்டார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்த படத்தில் மட்டுமே நடித்தேன். இந்த படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

 

தயாரிப்பாளர் S.லஷ்மன் குமார் பேசுகையில், “இந்த படம் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு படம். மனு ஆனந்த் எஃப்ஐஆர் படத்தை முடித்துவிட்டு இந்த கதையை எங்களிடம் சொன்னார். சொன்னபோது எதுவுமே நம்புகிற மாதிரி இல்லை.. ஆனால் அவர் சொன்ன நான்கு சம்பவங்கள் பற்றி கூறியதும் தான் அவற்றை நம்ப முடிந்தது. 1965ல் இந்தியாவின் உளவுத்துறை அமைப்பு சீனாவை சமாளிப்பதற்காக இமயமலையில் உள்ள நந்தாதேவி மலைக்கு ஏழு புளூடோனியம் கேப்சூல்ஸ் எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் அங்கு எதிர்பாராமல் அவை தொலைந்து விடுகின்றன. இப்போது வரை அவை கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத ஆபத்து நிறைந்த ஒரு விஷயம் அது. 1977-ல் அமெரிக்காவில் வெளியான ஒரு பத்திரிக்கை செய்தி மூலமாகத் தான் இது வெளியே தெரிய வந்தது. இந்த படத்தின் ஆரம்பப் புள்ளியே அதுதான்.

 

அப்படி ஒரு நியூக்ளியர் கேப்ஸ்யூல் காணாமல் போனதன் பின்னணி, அதன் விளைவு ஆகியவற்றை உண்மைக்கு ரொம்ப நெருக்கமாக கொஞ்சம் கற்பனை கலந்து உருவாக்கியுள்ளோம். போலீஸ் அதிகாரிகளுக்கு, ராணுவ வீரர்களுக்கு அவர்களுக்கான செயல்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. ஆனால் நாட்டுக்காக தங்களை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணியாற்றும் உளவுத்துறை வீரர்களுக்கு அது கிடைக்காமலேயே போய் விடுகிறது. 

 

சர்தார் படத்திற்காக அந்த படத்தில் பணியாற்றிய இரண்டு நடிகர்களின் தந்தைகளே கூட இப்படி உளவுத்துறையில் பணியாற்றியவர்கள் தான். அந்த சமயத்தில் கதைக்காக பேசும்போது தான் அது அவர்கள் பற்றிய உண்மை தெரிய வந்தது. அவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்புக்காக தடுத்து நிறுத்திய விஷயங்கள் பல.. அப்படி வெளியே தெரியாமல் போன அந்த வீரர்களின் தேசப்பற்றுக்கு காணிக்கை செலுத்தும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

இப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டாலும் ரொம்பவே கற்பனையை விரித்து விடாமல் நிஜத்திற்கு பக்கத்தில் இருந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். இப் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் அனைவருமே ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்காக போடப்பட்ட செட்டுகளாகட்டும் அல்லது நிஜமான லொகேஷன் ஆகட்டும் எல்லாமே பிரம்மாண்டமானவை தான். ரசிகர்களுக்கு நிச்சயமாக திரையரங்கு அனுபவத்தை இந்த படம் தரும் என நம்புகிறோம்” என்றார்.

 

நடிகர் கவுதம் கார்த்திக் பேசுகையில், “இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து உருவாக்கலாம். ஆனால் அதில் நடிப்பவர்களை பாதுகாப்பதில் சில்வா மாஸ்டர் மிகுந்த அக்கறை காட்டினார். அது மட்டுமல்ல ரொம்பவே வித்தியாசமான முறையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். 

 

குறிப்பாக க்ளைமாக்ஸில் நடக்கும் இறுதிச் சண்டைக் காட்சிக்காக ரைஸா, அனகா, அதுல்யா ரவி ஆகியோர் கடுமையாக ரிகர்சல் செய்ததை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். மஞ்சு வாரியருடன் முதல் காட்சியில் நடிக்கும் போது அவரைப் பார்த்து பிரமித்துப் போய் அப்படியே நின்று விட்டேன். ஏற்கனவே ஒரு படத்தில் நடித்த கையோடு மீண்டும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் சரத்குமார் சாரும் நானும் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டோம். எப்போதுமே அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்ற நபராகவே தெரிவார். 

 

ஆனால் காட்சிகளில்நடிக்கும் போது என வந்துவிட்டால் என்னை விட அவர் பயங்கர பிட்டாக இருக்கிறார். நான் இந்த திரையுலகில் நுழைந்ததிலிருந்து எனக்கு ரொம்பவே  கிரஷ் ஆன ஒரு நடிகர் என்றால் அது ஆர்யா தான். இப்போது வரை ஸ்டைலிஷான, அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கக்  கூடிய நடிகராக அவர் இருக்கிறார். அவருடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷம். ஆனால் படப்பிடிப்பில் ஒரு பார்த்தபோது ஒரு ஹல்க் போல மிகப் பிரம்மாண்டமாக தோன்றினார். அந்த அளவிற்கு தனது உடலைக்  கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். 

 

தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் அங்கே வெள்ளம் வந்தபோது கூட ஆர்யா தங்கி இருந்த இடத்தில் இருந்து வெளியேறி அங்கிருந்தவர்களிடம் ஜிம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர் எனக்கு ஒரு ரோல் மாடல் தான். இயக்குநர் மனு ஆனந்த்தும் நானும் பல வருடங்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசிக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் இந்த கதாபாத்திரத்தில் என்னை அழைத்து நடிக்க வைத்துள்ளார். எனக்குள் இருந்த நடிப்புத் திறமையைக் அவர் சரியாகக் கணித்து வெளிக்கொண்டு வந்துள்ளார். நானும் அதைச் சரியாக செய்துள்ளேன் என்று நம்புகிறேன்” என்றார்.

 

நடிகை மஞ்சு வாரியர் பேசுகையில், “மிஸ்டர் எக்ஸ் படத்தைப் பொறுத்தவரை எனக்கு இன்ட்ரஸ்டிங்கான படம். அந்தப் படம் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு புதுசு தான். இயக்குநர் மனு இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியை எடுக்கும் போதும் இந்த படத்தின் கதை என்ன என்று ஒவ்வொரு முறையும் விவரித்துக் கூறுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் நிறைய கடுமையான சவால்கள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்த படத்தை முடிக்க படக்குழுவினர் மிக பக்கபலமாக இருந்தார்கள்.  இந்த படத்தில் பணியாற்றும்போது எங்களுக்கு கிடைத்த உற்சாக அனுபவம் போல, படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் திரையரங்குகளில் அதே போன்று கிடைக்கும்” என்றார்.

 

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், “எப்போதுமே ஒரு படத்தில் காளி வெங்கட் என பெயர் எழுதி விட்டால் எனக்கான உடை லுங்கி அல்லது வேட்டி என்று எழுதி விடுவார்கள். மனு ஆனந்த்தின் குருநாதர் கவுதம் மேனனிடம் இருந்து எனக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஆனால் இவரிடம் இருந்து எனக்கு வாய்ப்பு வந்ததும் ஆச்சரியப்பட்டேன். அதன்பிறகு என்னுடைய கதாபாத்திரம் பற்றி அவர் கூறியதும் இன்னும் எனக்கு சந்தேகம் வந்தது. எப்படி என்னை இதற்காக தேர்வு செய்தார்கள் என்று. ஆனால் என்னை இந்த படத்தில் வேறு விதமாக காட்டியிருக்கிறார். கவுதம் கார்த்திக் நடித்த சில காட்சிகளை இயக்குநர் போட்டுக் காட்டினார். மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஒரு முறை நானும் ஆர்யாவும் படப்பிடிப்பில் இருந்தபோது நான் அவசரமாக விமானத்திற்கு கிளம்ப வேண்டி இருந்தது.  சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லை. ஆனால் அதைப் புரிந்து கொண்டு நான் கார் பயணத்தில் சாப்பிடுவதற்காகவே எனக்காக விதவிதமான அசைவ உணவுகளை கொடுத்து அனுப்பினார் ஆர்யா. அதை எப்போதும் மறக்க முடியாது” என்றார்.

 

நடிகை அனகா பேசுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க அழைத்த தயாரிப்பாளர்களுக்கும் இந்த கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் மனு ஆனந்த்திற்கும் நன்றி. எப்போதுமே நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு நீங்கள் நல்ல தூண்டுகோலாக இருந்திருக்கிறீர்கள்.. படப்பிடிப்பின் போது ஆர்யா எனக்கு சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள் என்னை நடிப்பில் மேம்படுத்திக் கொள்ள ரொம்பவே உதவியாக இருந்தது. ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. மஞ்சு வாரியரின் ஒரு ரசிகையாக இருந்து அவருடனேயே இணைந்து நடித்தபோது ஒரு கனவு நனவான தருணம் ஆகவே இருந்தது” என்றார்.

 

நடிகை அதுல்யா ரவி பேசுகையில், “என்னுடைய திரையுலக பயணத்தில் மிஸ்டர் எக்ஸ் முக்கியமான ஒரு படம். என்னால் இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் என என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநர் மனு ஆனந்த்துக்கு நன்றி. படப்பிடிப்பில் எனது காட்சிகளை பார்த்துவிட்டு ஆர்யா உடனடியாக பாராட்டுவார். அதேபோல சாப்பாட்டு விஷயத்தில் டயட் உணவு என்றாலும் சுவையான உணவு என்றாலும் ஆர்யா சாரிடம் இருந்து நிச்சயமாக கிடைக்கும். கவுதம் கார்த்திக்கின் அர்ப்பணிப்பு உணர்வு, கடைபிடிக்கும் ஒழுங்கு முறை, தனக்கென ஒரு பாடி லாங்குவேஜ் வைத்திருந்தது எல்லாமே என்னை ஆச்சரியப்படுத்தியது, மஞ்சு வாரியர் நடிக்கும் காட்சிகளை பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் கேரவனுக்கு போகாமல் மானிட்டரின் அருகிலேயே இருந்து அவரது நடிப்பைப் பார்த்து ரசிப்பேன். அந்த அளவுக்கு நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. ஏற்கனவே இசையமைப்பாளர் திபு நிணன் எனக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்  படமாக அமையும்” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசுகையில், “தயாரிப்பாளர்கள் S. லஷ்மன் குமார், A. வெங்கடேஷ் இருவரும் இரு துருவங்கள் என்றாலும் ஒரு அழகான காம்பினேஷன் என்பதை மறுக்க முடியாது. மஞ்சு வாரியர் இந்திய சினிமாவின் பெருமை என்று சொல்லலாம். ராஜஸ்தான் வெயிலில் காட்சிகளைப் படமாக்கிய சமயத்தில் கூட சரத்குமார் தனது ஷாட் முடிந்தாலும் கேரவன் பக்கம் போக மாட்டார்.. கேட்டால் சூரியன் படத்தில் நடித்த சமயத்தில் எல்லாம் கேரவனா பயன்படுத்திக் கொண்டிருந்தோம் என்று கூலாக சொல்வார். பஞ்சபூதங்கள் இந்த படத்திலும் இருக்கிறது. எங்களுக்குப் படப்பிடிப்பு சமயத்தில் தொடர்ந்தும் வந்தது. அதிலும் குறிப்பாக மழை நாங்கள் செல்லும் இடமெல்லாம்  தொடர்ந்து வந்தது” என்றார்.

 

இசையமைப்பாளர் திபு நிணன் பேசுகையில், “இந்த மாதிரி ஜானரில் ஒரு படம் எனக்கு முதல் தடவையாக கிடைத்திருக்கிறது இயக்குநர் மனு ஆனந்த்திற்கு இசை பற்றிய ஞானம் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்தது” என்றார்.

 

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசுகையில், “என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றிய காலத்தில் இருந்து இயக்குநர் மனு ஆனந்த் எனக்கு நல்ல பழக்கம். எப்போதுமே ஒவ்வொரு டீமுக்கும் என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு  தங்களுடைய குழுவினரை வருத்தி பக்காவாக தயார் செய்து கொடுத்து விடுவார் மனு ஆனந்த். இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சிங்கிள் சாட்டில் சரத்குமார் சார் ஒரு காட்சியை நடித்து முடித்த போது பிரமித்துப் போனேன். அந்த அளவிற்கு தன்னை ஃபிட்டாகத் தயார்படுத்தி வைத்துக் கொண்டுள்ளார். 

 

தூத்துக்குடியில் மழை கொட்டி வெள்ளம் போய்க்கொண்டிருந்த போது கூட தனது அறையில் இரண்டு நாற்காலிகளை போட்டுக்கொண்டு விடாமல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் ஆர்யா. இந்த படம் பார்க்கும் அனைவருமே கவுதம் கார்த்திக்கை லவ் பண்ணுவார்கள். மஞ்சு வாரியர் உள்ளிட்ட அனைத்து நடிகைகளுமே ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளனர். அதற்காக கடுமையான ரிகர்சலிலும் ஈடுபட்டனர்” என்றார்.

 

Mr X

 

நடிகர் சரத்குமார் பேசுகையில், “கதையைப் பற்றி தயாரிப்பாளர் இங்கே பேசும்போது எனக்கே ஷாக்காக இருந்தது. இயக்குநர் இப்படி எல்லாம் ஒரு விஷயம் தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறாரா என்று. நாளை இது பற்றி விசாரணை வந்தால் நீங்கள் இதெல்லாம் தெரிந்துதான் நடித்தீர்களா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது ? நாளை பத்திரிகைகளில் பரபரப்பாக பேசும் அளவிற்கு செய்தியைக் கொடுத்து விட்டார்.  படத்தின் கதையைக் கேட்டு அவ்வளவு பிரமாண்டமாகத் தயாரிக்க ஒப்புக்கொண்டதற்கே தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் உளவுத்துறையில் பணியாற்றுபவர்கள் தான் வெளியே தெரியாத கதாநாயகர்கள். அவர்களது தியாகம் அளவிட முடியாதது. வெறும் ஆக்சன் படமாக மட்டும் அல்லாமல் இதில் நிறைய உணர்வுகளும் பின்னிப் பிணைந்து இருக்கிறது.

 

ஆர்யா எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தார்.. எனக்கு மட்டும் கொடுக்கவில்லை,, ஸ்வீட் கொடுத்தார் என்று கூட சொன்னார்கள். ஒருவேளை ஸ்வீட் பாயாக இருந்திருக்கலாம். கவுதம் கார்த்திக் கூட இணைந்து நடிக்கும் போது அவருடைய பல ரியாக்சன்களை பார்க்கும்போது எனக்கு அவரது தந்தை கார்த்திக் ஞாபகம் தான் வரும். மனு ஆனந்த் பார்ப்பதற்கு சாஃப்ட் ஆகத் தெரிந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை..  படத்தில் எனக்கு ஒரு காதல் காட்சி கூட கொடுக்கவில்லை என்று வருத்தம் இருக்கிறது.. இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக அதைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

 

இயக்குநர் மனு ஆனந்த் பேசுகையில், “ஒரு இயக்குநருக்கு இரண்டாவது படம் கிடைக்க வேண்டும் என்றால் அந்த முதல் படம் வெற்றி அடைந்திருக்க வேண்டும். அப்படி ஒரு படத்தைத் தயாரித்து. அதில் நடித்து. எனக்கு இயக்குநராக வாய்ப்பு கொடுத்து கோவிட் காலகட்டத்தில் அந்தப்  படத்தை திரையரங்குகளில் தைரியமாக ரிலீஸ் செய்த விஷ்ணு விஷாலுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.  எஃப்ஐஆர் இல்லையென்றால் எனக்கு மிஸ்டர் எக்ஸ் வாய்ப்பு கிடைத்திருக்காது. இன்னும் சொல்லப் போனால் எஃப்ஐஆர் பட புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போதே பிரின்ஸ் பிக்சர்ஸில் இருந்து எனக்கு அழைப்பு வந்து விட்டது. சில கதைகள் பேசிய போது அது சரிவர அமையவில்லை. அதன் பிறகு தான் வேறு கதை முடிவு செய்தோம்.

 

ஆர்யாவுக்காக கதை இருக்கிறதா என்று கேட்டார்கள். ஆனால் ஆர்யா ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. திரையுலகில் எனக்கு தெரிந்த பல நண்பர்கள் வட்டாரத்தில் ஆர்யா பற்றி விசாரித்தபோது அவரிடம் கதை சொல்வது வேஸ்ட்.. ஏனென்றால் கதையை கேட்டுக் கொள்வார், ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்று கூறினார்கள். அந்த எண்ணத்தில் தான் அவரிடம் கதை சொல்ல சென்றேன். ஆனால் கதை கேட்க ஆரம்பித்த 20வது நிமிடத்தில் இந்த படத்தை நாம் பண்ணுகிறோம் என உறுதி அளித்து விட்டார்.

 

இந்த படத்திற்காக கேட்டதெல்லாம் கொடுத்ததற்கு தயாரிப்பாளர் டீம் கொடுத்த ஒத்துழைப்பு தான்.  இவ்வளவு பிரமாண்டமாக படத்தை எடுக்க உதவியது. இந்த படத்தில் நான் அதிகம் சண்டை போட்டது என்றால் சில்வா மாஸ்டருடன் தான். அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகளை நிறைய விவாதித்து கடைசியில் ஒரு புதிய ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருவோம். இசை அமைப்பாளர் திபு நிணன் நாம் போதும் என்று சொன்னாலும் அதையும் தாண்டி நம்மை திருப்திப்படுத்தும் விதமாக ஒன்றைக் கொடுப்பார். அவர் ஒரு மியூசிக்கல் ஜீனியஸ் என்றே சொல்லலாம். இந்த படம் எஃப்ஐஆர்-ஐ விட ரொம்பவே கடினமான ஒரு படம் தான். ஆனால் பிரசன்னா அதை ரசிகர்களுக்கு எளிதாக கடத்தும் விதமாக அழகாக படத்தொகுப்பு செய்துள்ளார். விஎஃப்எக்ஸ் காட்சிகளும் இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும். இன்று நான் இந்த இடத்தில் ஒரு இயக்குநராக நிற்கிறேன் என்றால் அதற்கு என் மனைவியின் தொடர்ந்த 14 வருட முழு ஆதரவு தான் காரணம்” என்றார்.

Related News

10335

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்
Sunday February-23 2025

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...

’நிறம் மாறும் உலகில்’ அம்மாக்களைப் பற்றிய தனித்துவமான படமாக இருக்கும் - இயக்குநர் பிரிட்டோ நெகிழ்ச்சி
Thursday February-20 2025

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

”’சப்தம்’ ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாகியிருக்கிறது” - நடிகர் ஆதி உறுதி
Sunday February-23 2025

7ஜி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 7ஜி சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு  இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  ’சப்தம்’...

Recent Gallery