அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ட்ராமா’. (Trauma) இதில், விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.
வரும் மார்ச் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் 'டத்தோ' ராதா ரவி, இயக்குநர் கே . பாக்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி , இயக்குநர்கள் ராகவ் மிர்தாத், வெற்றி, நடிகர் லிங்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் பேசுகையில், ”வாய்ப்புகள் தேடி பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்காததால் என்னுடைய நண்பர்களின் ஆதரவுடன் இப்படத்தின் பணியை தொடங்கினேன். அவர்கள் தங்களது பெயரை வெளிப்படுத்த கூடாது என்று கட்டளையிட்டதால்.. தயாரிப்பாளராக என்னுடைய மனைவியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை பைலட் மூவியாகத் தான் முதலில் தொடங்கினோம். அது சிறப்பாக வந்தவுடன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.”என்றார்.
இசையப்பாளர் ராஜ் பிரதாப் பேசுகையில், ”இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பனுடன் இணைந்து பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அவரிடம் பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான். குறும்படங்கள் இயக்கும் காலகட்டத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். குறும்படத்தை கூட தரமாக உருவாக்க வேண்டும் என விரும்புவார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை என்றாலும்.. தரமான படைப்புகளை தான் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இது என்னை மிகவும் கவர்ந்தது. தினமும் மாலை ஏழு மணி அளவில் தான் படத்திற்கான பணிகளை தொடங்குவார். அவருக்காக அனைவரும் இந்த நேரத்தில் இணைந்து பணியாற்றினோம்.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனுக்கும் இது முதல் படம் தான். சிறப்பாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. இரண்டு பாடல்கள் படத்தில் இடம்பெறும். ஏனைய இரண்டு படத்திற்கான ப்ரோமோ பாடல்கள். இந்த பாடலுக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு வியாபாரத்திற்காக நிறுவனங்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் யார் நடிகர் என்பதைத்தான் முதலில் கேட்டார்கள். பின்னர் இந்தப் படத்தை பற்றிய கண்டன்ட்டை நாங்கள் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம், தொடர்ந்து வீடியோவாக வெளியிட்டோம். அதன் பிறகு தான் இப்படத்திற்கான வணிகம் தொடங்கியது. அதன் பிறகு ஆல்ஃபா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இளமாறன் எங்களுடன் இணைந்தார். அவர் இப்படத்தை 21ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
'ட்ராமா' திரைப்படம் ஒரு ஆந்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர் லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசுகையில், ”சின்ன படங்களுக்கு ஊடகங்கள் தான் முதலில் ஆதரவு அளிக்கும். இந்தத் திரைப்படத்தை என்னுடைய நண்பர் இளமாறன் விநியோகம் செய்கிறார். சினிமா மீது நேசம் கொண்டவர். அவர் மேலும் தொடர்ந்து திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க்கையில் எந்த துறையாக இருந்தாலும் முதல்முறையாக பணியாற்றும் போது அந்த அனுபவம் 'ட்ராமா'வாகத்தான் இருக்கும். அதிலும் சினிமாவில் இத்தகைய அனுபவம் அதிகமாக கிடைக்கும். இந்த ட்ராமாவை கண்டு அச்சப்படாமல் தொடர்ந்து பயணித்தால், அந்த ட்ராமா அனுபவம் நிச்சயம் வெற்றியாக மாறும். இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று இதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.
நடிகை சாந்தினி தமிழரசன் பேசுகையில், ”இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னை திரையுலகில் அறிமுகம் செய்த குரு கே. பாக்யராஜ் இங்கு வருகை தந்திருக்கிறார். நான் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். அதற்காக இந்த தருணத்திலும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வரை நான் படப்பிடிப்பு தளத்தில் அவர் சொல்லிக் கொடுத்த பயனுள்ள குறிப்புகளை பயன்படுத்தி தான் நடித்து வருகிறேன்.
தம்பிதுரை மாரியப்பன் திறமையான இயக்குநர். இந்த படத்திற்கான கான்செப்ட் மிகவும் பெருந்தன்மையானதாக இருந்தது. அவரிடம் கதையைக் கேட்ட பிறகு அவர் ஒரு வீடியோவை காண்பித்தார். அதுவும் சிறப்பாக இருந்தது. எப்போதும் சிரித்த முகமாகவே அவர் இருப்பார். பாசிட்டிவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் செய்து வரும் வேலையையும் விடாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட் என்பதால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மார்ச் 21ம் தேதியன்று அனைவரும் தியேட்டருக்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தாருங்கள். சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும். விவேக் பிரசன்னா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது.” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், ”இந்த திரைப்படம் நிறைய கலைஞர்களுக்கு முதல் படம். அவர்களுக்கு இந்த மேடை முக்கியமானது. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இயக்குநர் தம்பிதுரைக்கு சினிமா மீது இருக்கும் தீவிரமான காதலால் அவர் வேலைக்கு சென்று கொண்டே இப்படத்தின் அனைத்து பணிகளையும் செய்தார். அவருக்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் . அவர் தன்னுடைய சக்திக்கு மீறி உழைப்பை கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து வரும் இளமாறனுக்கு நன்றி. கடந்த 20 நாட்களாக இப்படத்தினை மக்களிடம் சேர்ப்பதற்காக தொடர்ந்து விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தம்பிதுரை போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். அவர் இன்னும் உயரங்களை தொட வேண்டும். அதற்கு இந்த ட்ராமா படத்தின் வெற்றி அவசியம் . இதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
விநியோகஸ்தர் இளமாறன் பேசுகையில், “இது எனக்கு முதல் மேடை. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. பதினாறு ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். இதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். இந்த நிறுவனத்தின் சார்பில் முதல் முதலாக 'ட்ராமா' படத்தை வெளியிடுகிறேன். முதல் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் 'ட்ராமா' படத்தை பார்த்தேன். இப்படத்தின் பாடல்கள் தான் என்னை முதலில் கவர்ந்தன. பாடல்களைப் போல் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. மக்கள் மத்தியில் இப்படத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில், ’இது எனக்கு வித்தியாசமான மேடை. இயக்குநர் தம்பிதுரை ஒரே சமயத்தில் இரண்டு வேலை அல்ல, பத்துக்கும் மேற்பட்ட வேலைகளை பார்த்திருக்கிறார். 24 மணி நேரமும் சினிமாவுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உளவியல் ரீதியாகவும் அவர் தயாராகி இருக்க வேண்டும். இல்லை எனில் இது சாத்தியமாகி இருக்காது. இது ட்ராமாடிக்காக யாருக்கு இருந்திருக்கும் என்றால், இயக்குநர் தம்பி துரைக்கு தான் ட்ராமாடிக்காக இருந்திருக்கும். இந்தப் படத்தை எடுப்பதில் அவருக்கு ட்ராமா இருந்திருக்கும். நான் வழக்கறிஞர் என்ற முறையில் தினந்தோறும் ட்ராமாக்களை எதிர்கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அரசியல்வாதி என்ற முறையில் நிறைய மக்கள் ட்ராமாவுடன் தான் என்னை சந்திக்க வருவார்கள். அவர்களுடைய ட்ராமாவை தீர்த்து வைப்பதற்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன். அதனால் ட்ராமா என்பது நான் தினந்தோறும் சந்திக்கும் விஷயம்தான். நான் மட்டுமல்ல இங்கு இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு நாளும் ட்ராமாவை எதிர்கொள்கிறீர்கள். அது உங்களுக்கே தெரியாமல் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. ட்ராமாவில் இருந்து விடுதலையானால் சந்தோஷம் தான்.
நாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தை தான் இந்தப் படம் பேசுகிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நிச்சயமாக நன்றாக இருக்கும் என நம்புகிறேன். இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். ஒரு பாடல் கூட சோடை போகாது. இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை பாடலாசிரியர் மகேஷ் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார், அவர் என் உறவினர் தான். தற்போது இல்லை, இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் என விரும்பி இருந்தார். இந்தப் படத்தின் தொடக்க கட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவர் எழுதிய இரண்டு பாடல்களும் ஹிட் ஆகும் என்பது என் நம்பிக்கை. பாடல்கள் மட்டுமல்ல படமும் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்.” என்றார்.
நடிகர் ராதாரவி பேசுகையில், ”எனக்கும் இந்த திரைப்படத்திற்கும் சம்பந்தமில்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் இயக்குநர் தம்பிதுரை. அவர் இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தாருங்கள் என அழைப்பு விடுத்தார். நான் இங்கு வருகை தராமல் இருந்திருந்தால் ஒரு நல்ல விஷயத்தை தவறவிட்டிருப்பேன். நம் மக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது படத்தை திரையரங்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் மூலமாக படத்தைப் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். நான் ஒன்றைத் தான் சொல்ல விரும்புகிறேன். இது தமிழர்களின் படம். தமிழர்களாகிய நீங்கள் தான் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர்களுக்கு அடையாளம் என்பது முக்கியம். தற்போது கூட என் தந்தையார் எம் ஆர் ராதாவை பற்றி பல விஷ லயங்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரியோ தவறோ பேசுகிறார்கள். நமக்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கொடுப்போம். சினிமாக்காரர்கள் யாரும் தரக்குறைவானவர்கள் அல்ல. இயக்குநரை பற்றி மற்றவர்கள் அனைவரும் பேசும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகி 51 வருடங்கள் ஆகின்றன. நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு, என் சகோதரர் கமல் ஹாசனை போல் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எனக்கு ஏகப்பட்ட 'வெளி' வேலைகள் இருக்கின்றன. இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருக்கிறது. இங்கு படத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூட்டர் கூட அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இனி சிறந்த எதிர்காலம் உண்டு.
இந்தப் படத்தின் பெயர் 'ட்ராமா'. ஆனால் இந்தப் படத்தை பார்ப்பவர்களை ட்ராமாவில் விடாது. தற்போது சினிமா எடுப்பதும் எளிது, சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம். பொதுவாக படத்தை வெளியிடுவது தான் எளிதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதுதான் கடினமானதாக இருக்கிறது. தற்போது படத்தை வெளியிடுவதற்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. முன்பெல்லாம் 25வது நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள் என்று படம் வெற்றி பெறும். ஆனால் தற்போது படம் வெளியாகி மூன்றாவது நாளிலேயே 'வெற்றிகரமான மூன்றாவது நாள் ' என போஸ்டர் வெளியிடப்படுகிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடினால் தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. குறைந்தபட்சம் பத்து நாட்களாவது இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”ட்ராமா படத்தை வெளியிடும் இளமாறனுக்கு என் மனமார்ந்த வா்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய ஆர்டிஸ்ட் யாரும் இல்லாமல் புது முகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை நம்பி வெளியிடும் இளமாறனுக்கு என் நன்றி. இந்த குழுவில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது. இந்த குழுவை எனது மாணவன் பாடலாசிரியர் அருண் பாரதி தான் அறிமுகப்படுத்தி வைத்தார். எதிர்காலத்தில் பிரகாசமாக ஜொலிக்கவிருக்கும் குழுவினரை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் டிரைலரையும் , பாடல்களையும் பார்க்கும் போது இந்த குழுவினர் நிச்சயம் பிரகாசமாக வருவார்கள் என்ற நம்பிக்கை என் மனதுள் ஏற்பட்டது. இங்கு வருகை தந்த உடன் சாந்தினியிடம் 'பெயின் நெவர் எண்ட்ஸ்' என்ற வாசகம் இருக்கிறதே, அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு அல்லவா, அதனால் அது தொடர்பாக கேட்டேன். இந்தப் படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள் என தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இயக்குநர் தம்பிதுரைக்கு மேலும் பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு இந்தப் படத்தின் வெற்றி உத்திரவாதமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
ட்ராமா என்றால் என்ன அர்த்தம் எனக் கேட்டேன். இது தொடர்பாக என் உதவியாளரிடம் தமிழில் என்ன என்று கேட்டபோது, அவர் 'பாதிப்பு' என சொன்னார். சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. என்னுடைய உதவியாளர்களிடம் கதை விவாதத்தின் போது கதையை யோசிக்காதே, உன் மனதுக்கு எதை பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதை மனதிற்குள் அலசினால் நல்ல கதை கிடைக்கும் என சொல்வேன். எந்த நாட்டிலும் எந்த மக்களிடத்திலும் வரவேற்பை பெறும் ஒரே ஸ்டோரி லவ் ஸ்டோரி தான். இன்றைய இளைஞர்கள் கூட காதலிக்கிறார்களோ இல்லையோ காதலைப் பற்றி ஒரு கவிதையை எழுதி விடுவார்கள். அதனால் முதலில் அறிமுகமாகுபவர்கள் காதல் கதையை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக எழுதி இயக்கி விடுவார்கள். ஆனால் தம்பித்துரை அப்படி அல்ல. இந்த திரைப்படத்தில் மூன்று கதை களங்கள், கதைகள். மற்றவர்களைப் போல் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான சப்ஜெக்ட்டை தேர்வு செய்திருக்கிறார் தம்பிதுரை. இதற்காகவே அவரை பாராட்டலாம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...