Latest News :

”’எம்புரான்’ மலையாள சினிமாவுக்கே மிக முக்கியமான படம்” - நடிகர் மோகன்லால்
Tuesday March-25 2025

நடிகர் பிரித்விராஜ்  இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஒபராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’லூசிஃபர்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் படம் ‘எம்புரான்’. நடிகர் பிரித்விராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில், முரலி கோபி திரைக்கதையில் பிரமாண்ட ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் ,ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

மோகன்லால் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ’Game of Thrones’ புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் ’எம்புரான்’ மூலம் அறிமுகமாகிறார். அபிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, கிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

 

ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா என உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டு, அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள ’எம்புரான்’ திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். 

 

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார். 

 

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘எம்புரான்’ படத்தின்  புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது.  படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் நடிகர் டோவினோ தாமஸ் பேசுகையில், “இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப்படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவில் இது முக்கியமான படம்,  அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் தீபக் தேவ் பேசுகையில், “எல்லா இசையமைப்பாளருக்கும், இது போலப் பெரிய படம் செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். லூசிஃபர் போலவே இந்தப்படமும் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இப்படம் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்தப்படம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை மஞ்சு வாரியர் பேசுகையில், “என் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையைத் தந்த படம் லூசிஃபர். எனக்கு இந்த வாய்ப்பை தந்த பிரித்திவிராஜுக்கு நன்றி.  பிரியதர்ஷினி எனும் கதாபாத்திரத்தை எனக்குத் தந்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இவ்வளவு பெரிய படமாக இப்படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. லாலேட்டனுடன் ஒரு சில படங்கள் மட்டும் தான் செய்துள்ளேன், இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை, எல்லாமே மறக்க முடியாத அனுபவம். இப்படம் கண்டிப்பாக உங்களைத் திருப்திப்படுத்தும்.” என்றார்.

 

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசுகையில், “இந்தப்படத்தின் முதல் பாகம், மிக எளிதாகச் செய்துவிட்டோம். அப்போது இத்தனை பதட்டம் இல்லை, ஆனால் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு, நிறையப் பதட்டம் இருந்தது. இயக்குநராக பிரித்திவிராஜுக்கு நான் ஃபேன் ஆகிவிட்டேன், அவர் என்னிடம் கதை சொன்ன பிறகு, தூக்கமே வரவில்லை என்றார். அத்தனை அர்ப்பணிப்போடு படத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார். மிக அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சாருக்கு நான் ரசிகன், மிகப் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களைப் பிரமிக்க வைக்கும் நன்றி.” என்றார்.

 

சவுண்ட் இன்ஜினியர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் பேசுகையில், “எல்லா கலைஞர்களுக்கும் இன்டர்நேஷனல் புராஜக்ட் செய்ய ஆசை இருக்கும், எனக்கு இந்தப்படம் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் பிரித்திவிராஜ், மோகன்லால், மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி சாருக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் அபிமன்யூ சிங் பேசுகையில், “மோகன்லால் சாருடன் ஒர்க் செய்ய வேண்டும் என்கிற கனவு, இந்தப்படம் மூலம் நனவாகியுள்ளது. அவரது இத்தனை வருட அனுபவத்தை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். பிரித்திவிராஜ் மிகச்சிறந்த இயக்குநர், ஒரு நடிகராக அவர் இருப்பதால் அவரால் எளிமையாக நடிப்பை வாங்க முடிகிறது. இந்தப்படத்தை மிக அருமையாக எடுத்துள்ளார். எனக்குப் படிக்கும் காலத்தில் நிறைய மலையாள நண்பர்கள் இருந்தனர், அவர்கள் மூலம் மலையாளப்படம் பார்ப்பேன், இப்போது மலையாளப் படங்கள் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப தரத்துடன், பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் கார்த்திகேயா தேவ் பேசுகையில், “நான் சலார் படத்தில் பிரித்திவிராஜ் சாரின் சின்ன வயது கேரக்டர் செய்தேன், பிரசாந்த் நீல் சார் என் நடிப்பைப் பார்த்து பிரித்திவிராஜ் சாரிடம் அறிமுகப்படுத்தினார்.  அவர்  என்னை இந்தப்படத்திற்கு காஸ்ட் செய்தார். அவருக்கு என் நன்றி. மோகன் லால் சாருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமை. அவர் ஒரு லெஜெண்ட்.  இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய படமாக இருக்கும், எல்லோரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார். 

 

தமிழில் வசனம் எழுதியிருக்கும் ஆர்.பி.பாலா பேசுகையில், “நான் முதலில் புலிமுருகன் படம் செய்தேன்,  பின்னர் லூசிஃபர் படத்திற்குச் செய்த போது, மோகன்லால் சாரை டப்பிங் பார்க்க அழைத்தேன் ஆனால் வரவே மாட்டேன் என்றார், என் கட்டாயத்தால் பார்க்க வந்தார், பாதி படம் பார்த்து சூப்பராக செய்திருக்கிறாய் எனப் பாராட்டினார். அப்போதே எம்புரான் நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார். அவரால் தான் என் வாழ்க்கை மாறியுள்ளது. என் வாழ்க்கையை புலி முருகனுக்கு முன் புலி முருகனுக்குப் பின் எனப் பிரிக்கலாம், நான் இன்று நன்றாக இருக்கக் காரணம் அவர் தான், இந்தப்படமும் மோகன்லால் சார் கலக்கியிருக்கிறார் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் பிரித்திவிராஜ் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான நிகழ்வு, முதல் பாகம் வந்த போது இப்படத்தை இந்திய அளவில், வெளியிடும் வசதி,  படத்தைப் பற்றிப் பேச வைக்கும் வசதி இல்லை. இந்த 6 வருடத்தில் பல விசயங்கள் மாறியிருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அவரவர் மொழியில் ரசிக்கும் வண்ணம் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப்படம் மலையாள சினிமாவின் பெருமை, இப்படி ஒரு படம் செய்யக் காரணமான மோகன்லால் சார், ஆண்டனி பெரும்பாவூர் சார் ஆகியோருக்கு நன்றி. அனைவரும் படம் பார்த்து ரசியுங்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் மோகன்லால் பேசுகையில், “இது ஒரு டிரையாலஜி படம், லூசிஃபர், இப்போது எம்புரான் அடுத்து இன்னொரு படம் வரவுள்ளது. இது மலையாள சினிமாவுக்கே மிக முக்கியமான படம். கொஞ்சம் புதுமையாகப் பல விசயங்கள் முயற்சி செய்துள்ளோம். அதற்காகத் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இது தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாதிரி படம் ஓடினால் தான் பல பெரிய படங்கள் வரும். அதற்காகவும் இப்படம் ஓட வேண்டும். உங்களைப் போல நானும் மார்ச் 27 ஆம் தேதி, ரிலீஸுக்கு காத்திருக்கிறேன் நன்றி.” என்றார்.

Related News

10387

’ஆர்பிஎம்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!
Sunday March-30 2025

வில்லன், குணச்சித்திர வேடம், கதையின் நாயகன் என பல கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆர்பிஎம்’ (RPM) திரைப்படத்தின் டிரைலர் விழாவோடு, அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது...

வித்தியாசமான ஜாலியான இணையத் தொடராக உருவாகியுள்ள ‘செருப்புகள் ஜாக்கிரதை’ ஜீ5 தளத்தில் வெளியானது!
Sunday March-30 2025

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது...

”ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்” - இயக்குநர் ராம்கோபல் வர்மா
Sunday March-30 2025

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’...

Recent Gallery