Latest News :

கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகும் கலைஞர்கள் - சிவகுமார் வேதனை!
Tuesday October-24 2017

திறமைசாலிகள் கலைஞர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள், கெட்டுப் போகாதீர்கள். என்று ஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:.

 

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான 'சகலகலா வல்லபன்' நூல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே.பாக்யராஜ்  பெற்றுக் கொண்டார். இந்நூலை பிரபல பத்திரிகையாளர் அருள்செல்வன் தொகுத்துள்ளார். 

 

விழாவில் நூலை வெளியிட்டு நடிகர் சிவகுமார்  பேசும் போது, “திருத்துறைப்பூண்டியில் ஒரு அம்மா இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறேழு வயதில் ஒரு பையன் இருந்தான். பள்ளிக்கூடம் போகிற பையனுக்கு 4 இட்லி வைத்துவிட்டு குளிக்கப் போனாள் தாய். அப்போது அந்த பையன் இட்லி துணியை தூக்கி  மேலும் 2 இட்லியை எடுத்துச் சாப்பிட்டு விட்டான். கூடவே சித்தியும் இருந்தாள். குளித்து விட்டு வந்த போது சித்தி சொன்னாள் “நீயில்லாத போது உன் பையன் 2 இட்லியைத் திருடி விட்டான்.'' என்று. அப்போது “அவனுக்காகத்தானே நானே இந்தத் தொழிலைச் செய்கிறேன்?'' என்று கூறி மறுநாள் முதல் 3 இட்லியை கூடுதலாகக் கொடுக்க ஆரம்பித்தாள் அந்தத்தாய். அன்று இட்லி திருடிய பையன்தான் எஸ்.எஸ்.வாசன். 

 

அப்படிப்பட்ட வாசன் சைக்கிளோடு சென்னை வந்தார். பெரிய தயாரிப்பாளர் ஆனார், 1948ல் கல்கத்தாவிலேயே தன் படத்துக்கு 10450 லேம்ப் போஸ்டர் போட்டவர் எஸ்.எஸ்.வாசன். இப்படி பலர் பற்றியும் அறிய காரணமாக இருந்ததுதான் பேசும் படம்.

 

1934ல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்., கதாநாயகனான அவருக்கு 750 ரூபாய்தான் சம்பளம். கதாநாயகிக்கு 1000 ரூபாய் சம்பளம். இயக்குநருக்கு 500 ரூபாய் சம்பளம். இயக்கியவர் கே.சுப்ரமணியம். படம் பவளக்கொடி.

 

சைக்கிள் ஒட்டத் தெரியாமலேயே ஒரு சைக்கிளை தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் முதல் வாய்ப்பில் நடித்தவர் எம்.ஜி.ஆர். அவர் 10 ஆண்டுகள் போராடி 'ராஜகுமாரி'யில் நடித்தார். பல ஆண்டுகள் போராடினார். அப்படி குட்டிக்கரணம் போட்டுத்தான் எம்.ஜி.ஆர். மேலே வந்தார். ஆனால் கையில் பத்து ரூபாய் இருந்த போது  ஏழு ரூபாய் செலவு செய்து மூன்று ரூபாய் தானம் செய்தவர் அவர். எப்போது உன் கையில் பத்து ரூபாய் இருந்தால் ஒரு ரூபாய் தானம் செய்ய மாட்டாயோ, அப்படிப்பட்ட நீ 1000 ரூபாய் இருந்தாலும் நூறு ரூபாய் சத்தியமாக தானம் செய்யமாட்டாய்.. இன்று கோடிக்கணக்காக பணம் வைத்துள்ள நடிகர்கள் என்ன தானம் செய்வார்கள்? 

 

அன்று   நல்ல செய்தியை  மட்டுமே போட்ட பத்திரிகைதான் பேசும்படம். இப்படிப்பட்ட  நல்ல செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்ள உதவியதுதான் பேசும்படம். பிறகு மாடர்ன் ஆர்ட் வந்த பிறகு ஆர்ட்  மாறியது போல, வல்லபன் வந்தது மாடர்ன் ஆர்ட் காலம். 

 

அப்போதெல்லாம் நான் சிரமப்பட்ட போது இரண்டு வெள்ளை சட்டைதான் வைத்திருப்பேன்.  இரண்டு வெள்ளை சட்டை வைத்துக் கொண்டு தினமும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வருபவர் இவர் என்று பேச வைத்தேன். அப்படிப்பட்ட காலத்தில் பேசும் படத்தில் வல்லபன் இருந்தார். என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் சிவாஜி எம்.ஜி.ஆர். பத்தினி, சாவித்ரி என்று 

வரைய வைத்து 24 ஓவியங்களை பேசும்படத்தில் வெளியிட்டார்.

 

அப்படி எனக்கு நட்பாக வந்தவர் தான் வல்லபன். அவர் பிறந்த ஊர்  கேரளா திரிச்சூர். பிறந்த ஆண்டு 1943. அவர் 60 வயதில் இறந்து விட்டார். அங்கே 5 ஆம் வகுப்புவரை கேரளாவில் படித்து விட்டு 6ஆம் வகுப்பிலிருந்து இங்கு படித்து எஸ்எஸ்.எல்.சி யில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார். அவர் அப்பா பிரியாணி கடை ஓட்டல் வைத்திருந்தார்.  கல்லூரியில் படித்த போது டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால்  விருது வாங்கியிருக்கிறார். அந்த இளைஞன் தான் பிலிமாலயா வல்லபன்.

 

பிலிமாலயாவில் ஒரு மோட்டோ போட்டிருப்பார் 'நல்லதைச் சொல்லும் போது நன்றி கூற நேரமில்லாதவர்கள், அல்லதைச் சொல்லும் போது எரிந்து விழா உரிமையில்லாதவர்கள்' என்று. என்ன ஒரு தைரியம் பார்த்தீர்களா? 

 

பிலிமாலயாவில் 'எரிச்சலுடடும் எட்டு கேள்விகள்' என்று கேட்டு வாங்கிப் போடுவார். பொதுமக்கள் பேசிக் கொள்வதை தைரியமாகக் கேள்வியாகக் கேட்டுப் பதில் பெற்றுப் போடுவார். என்னிமும் கேட்டார்கள் மகாவிஷ்ணு, சிவன் என்று சாமி வேடமே போடுகிறீரே நடிக்க வராதா என்று. இப்படிப் பலரிடமும் கேட்டுப் போட்டுள்ளார். வாசனிடமும் கேட்டதுண்டு, சினிமாவே விஷூவல் மீடியா என்று சொல்கிறார்கள் நீங்கள் பக்கம் பக்கமாக வசனம் வைத்துள்ளீர்களே என்று.

 

முதன் முதலில் ஆபாவாணனையும் பாரதிராஜாவையும் பீச்சில் சந்திக்க வைத்து பேட்டி போட்டவர் வல்லபன். இதைவிடப் பெரிய விஷயம் இளையராஜா என்கிற மாணிக்கத்தைக் கண்டுபிடித்து உலகத்துக்கு முதலில் சொன்னது வல்லபன். எவ்வளவு பெரிய விஷயம்?

 

செல்வராஜுக்கு இன்று உடல்நிலை சரியில்லை. அவரை நாம் கொண்டாட வேண்டும். முதன்முதலில் வல்லபனை 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் பாடல் எழுத வைத்தவர் அவர். அதற்கான சன்மானம் 200 ரூபாயை டெல்லி திரைப்பட விழாவுக்குச் சென்ற வல்லபனுக்கு சித்ரா லெட்சுமணன் மூலம் கொடுத்து அனுப்பினார்.

 

தயாரிப்பாளர் கோவைத்தம்பி கதையோ திரைக்கதையோ வசனமோ வல்லபனைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார். 

இறுதியாக ஒன்று, கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள். ஆமாம் கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள். படைப்புக்கலைஞன் கொஞ்சம் விட்டால் கடவுளையே கேள்வி கேட்பான் என்று, மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான்.

 

ஒருவன் கலைஞனாக இருந்தாலும் சரி, பாடகனாக இருந்தாலும் சரி, நடனம் ஆடுபவனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, அவனுக்குப் புகை, மது, மாது என்கிற மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான். 

 

இதை உலக அளவில் சொல்வேன், கலைஞர்கள் மறைந்தவர்கள்  என்று எடுத்துக்கொண்டால் நடிகர்களும் சரி நடிகைகளும் சரி இயக்குநர்களும் சரி  பலருக்கும் புகை, மது, மாது  பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் இருந்திருப்பார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலம் முக்கியம். கலைஞர்களே புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள்.” என்று தெரிவித்தார்.

 

விழாவில் நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள் சித்ராலெட்சுமணன், பேரரசு,  ஈ.ராம்தாஸ், த.செ.ஞானவேல், கவிஞர்கள் அறிவுமதி, யுகபாரதி, பத்திரிகையாளர்கள் தேவி மணி, 'மக்கள் குரல்' ராம்ஜி, குங்குமம் கே.என். சிவராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

 

முன்னதாக நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். விழாவை ராஜசேகர் தொகுத்து வழங்கினார்.

Related News

1077

‘அகத்தியா’ மூலம் புதுமையான உலகைப் படைத்திருக்கும் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் - பா.விஜய் கூட்டணி!
Tuesday December-24 2024

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,  அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அகத்தியா’...

Coke Studio Tamil Season 2 wraps up with pride in Tamil music, culture and diversity
Tuesday December-24 2024

Coke Studio Tamil has wrapped up its remarkable Season 2, leaving a lasting impact by celebrating Tamil music and culture with a stellar lineup of artists...

’பரோஸ்’ ஒரு மேஜிக் உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும் - நடிகர் மோகன்லால் உறுதி
Tuesday December-24 2024

ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...

Recent Gallery