நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக ரூ.1 லட்சம் நிதி வழங்கியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் செம்மொழியான தாய்மொழி தமிழ். புவிப்பந்தில் ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குவதோடு மட்டுமன்றி முதன்மையும் பெறுகிறது.
ஆகவே, உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களை ஈர்க்க முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் குறிப்பிட்ட அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களாக உள்ளன.
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியதும், அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் பற்றாக்குறை சரிசெய்யப்படலாம். இந்த அடிப்படையில்தான் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழே அரசு மொழியாகக் கோலோச்சுகிறது. உலகம் முழுவதும் பரவியும் புலம்பெயர்ந்தும் வாழும் 8 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் தாய்மொழியாகவும், 2,500 ஆண்டுகள் தொன்மையான இலக்கிய வளமும் கொண்டு விளங்குகிறது தமிழ். இப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு “ஹார்வர்டில் தமிழ் இருக்கையை அமைத்தால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்” என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழையும் அதன் இலக்கிய இலக்கணப் பரப்பையும் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். தமிழ் மொழியைப் பேசும் மக்களாகிய தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல், வரலாறு, தொல்லியல் ஆகிய தளங்களிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும். ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு அவை சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப் படும். ‘உலகுக்கே பொதுவான ஒரு தமிழ் இருக்கை’ மூலம்தான் இந்தப் பணிகளை உலகறிச்செய்ய முடியும். என் போன்றோர் தமிழ் பற்றாளர்கள் நம்புகிறோம்.
உலகமெங்கும் 7,102 மொழிகள் பேசப்படும் நிலையில் அதில் தமிழ், சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் மற்றும் சீனம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழிகளாக உள்ளன. அந்த ஏழு மொழிகளில் தமிழை தவிர்த்து மற்ற ஆறு மொழிகளுக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் உள்ளன.
ஆகவே நமது மொழியின் உயர்வை உலகின் பார்வைக்கு தொடர்ந்து முன் நகர்த்த ஹார்வர்ட் பல்கலைகழகத்தோடு இணைந்து நாமும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதிகளை வழங்குகின்றனர். தற்போது தமிழக அரசும் பத்து கோடி வழங்கியுள்ளது.
நாமும், நமது தமிழுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற வகையில் தன்னால் முடிந்த நிதியை பலரும் பகிரவேண்டும். நான் எனது முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் ரூ. 1,000,00/- ( ஒரு லட்சம்) வழங்குவதில் பெருமையடைகிறேன். மற்றவர்களையும் பங்களிப்பு செய்ய தூண்டுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது மொழியை இளைய தலைமுறையின் வழிகாட்டும் ஒளியாக்குவோம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...