பால்ம்ஸ்டோன் மல்ட்டி மீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு கதை சொல்லட்டுமா'. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையை வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்கள்.
ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றதோடு நின்று விடாமல், தன் தாய் மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டை பற்றிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். இந்தியாவிற்கு தலைநகரம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவனுடைய கிராமம் தான் தலைநகர், அதை ரசூல் புரிந்து வைத்திருக்கிறார். ஒலி தான் மொழி, சத்தம் எல்லாமே சங்கீதம். ஒலிப்பதிவாளர் என்பவர் ஒலியை பொறுக்குபவர். ரசூல் ஒரு சவுண்ட் எஞ்சினியர் அல்ல, அவர் ஒரு சவுண்ட் டிசைனர்.
உலகில் மிகச்சிறந்த லஞ்சம் பணிவு தான். அப்படி மிகவும் பணிவானவர் இயக்குனர் பிரசாத் பிரபாகர். மலையாளத்தின் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள். இந்தியாவே இந்த படத்தை கொண்டாடும்.” என்று தெரிவித்தார்.
இயக்குனர் ஷங்கர் பேசுகையில், “பூரம் திருவிழாவின் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் ரசூல் அதை பற்றி விளக்கி சொன்ன போது தான் அந்த பிரமாண்டம், அதன் பெருமை புரிந்தது. 10 லட்சம் மக்கள் கலந்து கொள்ள, 300 கலைஞர்கள் 3 மணி நேரம் இசையை நிகழ்த்துவார்கள். முன்னரே தெரிந்திருந்தால் என் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் காட்சியாக வைத்திருப்பேன். அந்நியன் படத்தில் வரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனையை படமாக்கியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம்.
பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு பண்ணியிருக்கிறார் ரசூல். வரலாற்றில் இது ஒரு முக்கியமான பதிவு. ஸ்டுடியோவில் மட்டுமே ஒலியை பதிவு பண்ணாமல் வெளியே போய் நல்ல ஒலியை பதிவு செய்து மக்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார் ரசூல் பூக்குட்டி.” என்றார்.
இசையமைப்பாளர் ராகுல் ராஜ் பேசுகையில், “2002 ஆம் ஆண்டு லண்டனில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களை சந்தித்து, உங்களின் மிகப்பெரிய ரசிகன் என சொல்லியிருக்கிறேன். 15 வருடங்களுக்கு பிறகு ஒரு இசையமைப்பாளராக, என்னுடைய இசை வெளியீட்டு விழாவில் அவரை சந்திப்பது எனது கனவு நனவான தருணம்.” என்று தெரிவித்தார்.
”எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். ராவணன் படத்தின் டப்பிங்கின் போது, வைரமுத்து அவர்கள் தம்பி தமிழுக்கு வா, நல்ல கதைகளை திரையில் கொடு, உனக்கு நான் ஆதரவு தருகிறேன் என்றார். இதோ வந்திருக்கிறேன், ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் முனைப்போடு. பார்வையில்லாதவர்களும் ரசிக்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்திருக்கிறோம்.” என்றார் இயக்குனர் பிரசாத் பிரபாகர்.
நாயகன் ரசூல் பூக்குட்டி பேசும் போது, “என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 22 மிகவும் முக்கியமான இரவு. அதிகாலை இரண்டு மணிக்கு எனக்கு ஒரு கதை சொல்ல வந்தார். அந்த கதை தான் இந்த 'ஒரு கதை சொல்லட்டுமா'. பூரத்தை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு. அந்த கனவை நிறைவேற்ற எனக்காக அமெரிக்காவில் இருந்து வந்தவர் தான் ராஜீவ் பனகல். இந்த படத்தின் ரெக்கார்டிங்கின் போது பல இடங்களுக்கு சென்று வந்தேன். பார்வையற்ற ஒருவர் கூட பூரம் திருவிழாவை உணர முடியும். எந்திரன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னை தென்னிந்திய சினிமாவுக்கு அழைத்து வந்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி.” என்று தெரிவித்தார்.
நடிகைகள் லிஸி, ரோகிணி, ரேவதி, குஷ்பூ, ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கனிகா, நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், நாசர், இயக்குனர் கே எஸ் ரவிகுமார், எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் பிரவீன் கோகுலன், பெருவனம் குட்டன் மாரார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பெருவனம் குட்டன் மாரார் மற்றும் அவர்களின் நேரடி இசை நிகழ்வும் நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...