Latest News :

‘ஆண் தேவதை’ படக்குழுவுக்கு இயக்குநர் வைத்த வித்தியாசமான போட்டி..!
Wednesday December-06 2017

இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. 

 

சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் 'ஆண் தேவதை' படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.  'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர்  இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

 

சற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம்  என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு தான்  களத்தில் குதித்துள்ளார் இயக்குநர் தாமிரா. வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் தாமிரா.

 

பெண்கள் தான் தேவதையாக சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில் ‘ஆண் தேவதை’ வித்தியாசமாக படுகிறதே..?

 

தேவதை என்பது சிறப்பியல்பு கொண்ட ஒரு கேரக்டர்.. அதற்கு ஆண் பெண் என பாகுபாடு இல்லை.. பெண்களை ஏமாற்றுவதற்காகவே ‘பெண் தேவதை’ என தவறாக கற்பிதம் செய்து வைத்திருக்கிறார்கள். நல்லியல்புகள் கொண்ட எல்லோரும் தேவதையே.. எல்லாம் சரியாக இருக்கிற, குறைகள் பெரிதும் இல்லாத ஆணும் ஒரு தேவதை தான். அவன் தான் இந்தப்படத்தின் ஹீரோ.. படம் பார்க்கும்போது உங்களுக்குள் இருக்கும் சில விஷயங்களை அவன் பிரதிபலிப்பதை உணர்வீர்கள்.

 

ஆண்களை தேவதையாக்கும் முயற்சியில் இறங்கியது ஏன்..?

 

எல்லோருக்குள்ளும் ஒரு நல்ல தன்மை இருக்கிறது. ஆனால் நமக்குள் இருக்கும் நல்லது எது, கெட்டது எது என யோசிக்கவிடாமல் காலம் நம்மை ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது. ஒருகாலத்தில் நாமாக ஆசைப்பட்டது போய், இன்று ஆசைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. இன்றைய நுகர்பொருள் கலாச்சாரத்தில் அதைநோக்கி நாம் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்வதற்காக வேலை செய்கிறோமா..? இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா..? இந்த புள்ளியில் இருந்துதான் கதை துவங்குகிறது.

 

சமுத்திரக்கனி எப்படி இதற்குள் வந்தார்..?

 

அது யதேச்சையாக அமைந்தது. சமுத்திரக்கனியை பார்க்க சென்றிருந்தபோது, இந்த கதைபற்றி சொல்லி, நானே தயாரிக்கிறேன் என்று சொன்னதும் சரி நான் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார். 

 

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் நான் உருவாக்கிய கதாபாத்திரத்தில் எண்பது சதவீத குணாதிசயங்கள் சமுத்திரக்கனியிடம் இயல்பாகவே இருந்தது.. மீதி, இருபது சதவீதம் என்பது நான் கொடுக்கின்ற வசனங்களை பேசி நடிக்கவேண்டிய வேலை மட்டும் தான். 

 

தன்னியல்பாகவே ஒரு சில மனிதர்கள் அப்படி இருப்பார்கள் தானே.? அதில் சமுத்திரக்கனியும் ஒருவர். ஆனால் படம் பார்க்கும்போது சமுத்திரக்கனி தெரியமாட்டார்.. அவரது கதாபாத்திரமான இளங்கோ தான் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும்.

 

குழந்தை வளர்ப்பு இதில் பிரதானமாக சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்லியிருந்தது எந்த அடிப்படையில்..?

 

பெண் வளர்க்கும் குழந்தை, ஆண் வளர்ப்பில் வளரும் குழந்தை என பகுத்துப் பார்க்காமல் அன்பால் வளர்க்கின்ற குழந்தை எப்படி வளர்கிறது.. பொருளாதாரத்தால் வளர்க்கப்படும் குழந்தை எப்படி வளர்கிறது  இதற்கான வித்தியாசத்தைத்தான் சொல்கிறோம்.. 

 

குழந்தைகள் மனநிலையைச் சார்ந்து பெரியவர்கள் முடிவெடுப்பது இல்லை. பெரியவர்களின் முடிவுக்கு குழந்தைகளைக் கட்டுப்பட வைக்கிறோம். வீட்டில் எடுக்கும் முடிவுகளில் குழந்தைகளின் கருத்தையும் கேட்கவேண்டும். அதை இதில் அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.

 

படத்தலைப்பை பார்க்கும்போது பெண்களை விட ஆண்களை உயர்த்திப்பிடிப்பது போலத் தெரிகிறதே..?

 

நிச்சயமாக இல்லை.. ஒரு தலைப்பு என்பது குறியீடு தானே தவிர மொத்தப்படத்தையும் அது அடையாளப்படுத்த வேண்டும் என்பதில்லையே.. ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே வாழ்க்கை?? அதனால் ஆணாதிக்கமும் தவறு, பெண்ணாதிக்கமும் தவறு. ஆண், பெண் இருவரும் சமம் என்கிறபோது, இதில் ஆளுமை என்பதே தேவையில்லாதது.. சேர்ந்து வாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகித்தல், இணைந்து மகிழ்தல் இதுதான் கணவன் மனைவி உறவுக்கான இடம்.

 

படம் பார்த்துவிட்டு வரும் ரசிகனிடம் ‘ஆண் தேவதை’ என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்..? 

 

ஒரு கதை எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்பதை நான் நம்பவில்லை. இந்தப்படம் உங்களுக்குள் இருக்கின்ற சில நினைவுகளை கிளறும்.. பழைய நினைவுகள், சம்பவங்களில் உங்களை கொஞ்ச நேரம் சுற்றவைக்கும்.. அவ்வளவுதான்.

 

நீங்களே தயாரிப்பிலும் இறங்க காரணம் என்ன..?

 

அதுவும்கூட இயல்பாக நடந்த ஒன்றுதான். சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் காசிவிஸ்வநாதன், ஆர்ட் டைரக்டர் ஜாக்கி என என்னைச்சுற்றி இருந்த நல்ல நண்பர்கள் தான் காரணம்.. 

 

இவர்களுடன் இணைந்து படம் பண்ணுவது ரொம்ப எளிதாக இருந்தது. சினிமாக்காரர்கள் படம் தயாரிப்பில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றால் இதுபோன்ற சின்னச்சின்ன கூட்டமாக இணைந்து தங்களுக்கான படைப்புகளை எளிமையாக தயாரிக்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற ‘நட்புக்கூட்டணி' படைப்புகள் அதிகமாக வரவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

 

படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் பற்றி சொல்லுங்கள்..?

 

மோனிகா, கவின் பூபதி என இரண்டு குழந்தைகள் மிக அற்புதமாக நடித்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் தான் இந்தப்படத்தின் ஜீவன் என்று சொல்லலாம். 

 

கதாநாயகியாக ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்திற்குப்பின் இதில் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்தப்படம் வெளிவந்தபின் தான் சினிமாவில் தனது அடுத்தகட்ட முயற்சியை எடுப்பேன். அந்த அளவுக்கு  தனக்கு ஒரு இடத்தைப் பெற்றுத்தரும் என இந்தப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்..தவிர, முக்கிய வேர்களாக ராதாரவி, இளவரசு, காளிவெங்கட்,  அறந்தாங்கி நிஷா, சுஜா வாருணி, ஹரிஷ் பேரெடி, E. ராமதாஸ் ஆகியோர் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். 

 

படப்பிடிப்பின்போது தினமும் ஏதோ போட்டி வைத்ததாக கேள்விப்பட்டோம்..?

 

உண்மைதான். மொத்தம் 43 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இதில் நூறு ரூபாய் கொண்ட ஒரு பொன்முடிப்பை வைத்திருந்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் படத்திற்காக சிறப்பான யோசனைகளை, பங்களிப்பை யார் வழங்குகிறார்களோ அவர் கைக்கு அந்த பொன்முடிப்பு போகும்.. 

 

அன்றைய தினமே அதே பொன்முடிப்பு அவரைவிட சிறப்பாக செயல்பட்ட இன்னொரு நபர் கைக்கு போகும்.. இதனால் அந்த பொன்முடிப்பை  தாங்களும் பெறவேண்டும் என்பதற்காக படக்குழுவினர் போட்டிபோட்டு உற்சாகமாக உழைத்தனர். 

 

இதில் கதாநாயகி ரம்யா பாண்டியனும், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும் மூன்றுமுறை அந்த பொன்முடிப்பை கைப்பற்றினார்கள். யாருமே அதை வெறும் நூறு ரூபாயாக பார்க்கவில்லை.. தங்களுக்கான அங்கீகாரமாகத்தான் பார்த்தார்கள்.

 

‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் வினீத் சீனிவாசனை இதில் பாடவைக்கக் காரணம்?.

 

‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு முன்பே அவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், பாடகர்.. அவர் திரைக்கதை எழுதி, நடித்திருந்த ‘ஒரு வடக்கன் செல்பி’ பட வெற்றி விழாவில் நானும் கலந்துகொண்டேன்.. 

 

அப்போது அவர் பேசும்போது, “இதற்குமுன் நான் தனியாளாக வெற்றி பெற்றபோதெல்லாம் பெரிதாக மகிழ்ச்சி ஏற்படவில்லை.. ஆனால் இப்போது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றி பெற்றபோது அந்த வெற்றி அர்த்தமுள்ளதாக தெரிகிறது. 

 

எல்லோருமே அவரவர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டு வெற்றியைப் பெறுங்கள். கூட்டு வெற்றிதான் நிலையானது. அழகானது” என்று சொன்னார். அந்த வார்த்தை எனக்கு பிடித்திருந்தது. என் மனதுக்குள்ளேயே ஓடிக்கொண்டு இருந்தது. 

 

அவர் சொன்னதுபோல இந்தப்படமும் நண்பர்களின் அழகான கூட்டு முயற்சிதான்.

 

அதனால் இந்தப்படத்தில் ஒரு மெலடி பாடலை வினீத் சீனிவாசன் பாடினால் நன்றாக இருக்குமே என நட்புடன் அழைத்து பாடவைத்தோம்.. ஆனால் ஜிமிக்கி கம்மல் பாடல் வருவதற்கு முன்பே அவர் பாடிய வேறொரு பாடலை கேட்டுத்தான், அவரை அழைத்து பாடவைத்தோம்.” என்றார் இயக்குநர் தாமிரா. 

 

இந்தப்படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Related News

1450

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery