‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் பரோட்டா காமெடி மூலம் பிரபலமான சூரி, தான் தற்போதைய கோடம்பாக்கத்து காமெடி ராஜா. பரோட்டா சூரி என்று இருந்தவர், தற்போது புஷ்பா புருஷனாக தொடர்ந்து தனது காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் சூரி, தான் கடந்து வந்த பாதை குறித்தும், பயணம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டது இதோ!
1997 ஆம் ஆண்டு சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்த நான், முதலில் சென்னையில் தங்க மற்றும் உணவு போன்ற அத்தியாவாசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பல வேலைகளை செய்து வந்தேன். ஆர்ட் டிபார்ட்மெண்டில் பலருடன் பணிபுரிந்ததோடு, பெயிண்டிங் உள்ளிட்ட பல வேலைகளையும் செய்து வந்தேன். பிறகு தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மேடை நாடகங்கள் போட தொடங்கினேன். அப்படி நான் போட்ட முதல் மேடை நாடகம் தான் ‘என்னது கோரிக்கையா?’. வீரப்பனை மையமாக கொண்ட அந்த மேடை நாடகத்தை ஏவிஎம் ஸ்டுடியோ எதிரே உள்ள தெரு ஒன்றில், விநாயகர் கோவில் திருவிழாவுக்காக போட்டேன். அதைப்பார்த்து போலீஸார் சிலர் எங்களுக்கு ரூ.400 பரிசு கொடுத்தார்கள். அப்படி பல நாடகங்களை போட்டுக்கொண்டிருக்கும் போதே, சில டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்த எனக்கு அஜித் சாரின் ஜீ படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு எதிர் கோஷ்ட்டியில் உள்ள ஒரு வேடம். ஒரு காட்சியில் அவரை கலாய்க்க வேண்டும். ஆர்வத்துல என்ன என்னவோ சொல்லி நான் கலாய்த்துவிட்டேன். டேக் முடிந்ததும் என்னை அழைத்து இயக்குநர் லிங்குசாமி சார், “என்ன பேசின..” என்று என்னிடம் கேட்டதும் எனக்கு உதர ஆரம்பித்துவிட்டது. ஐய்யயோ ஏதோ தவறாக பேசி விட்டோமோ என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை கட்டிபிடித்து பாராட்டியதோடு, தல அஜித்தும் என்னை பாராட்டி, எந்த ஊரு என்றெல்லம் விசாரித்தார். பிறகு காதல் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் ‘வெண்ணிலா கபடி குழு.
முதலில் சுசீந்திரன் சார், எனது வேடத்தை சிறிதாக தான் வைத்திருந்தார். ஆனால், எனது நடிப்பை பார்த்து எனது வேடத்தை பெரிதாக்கினார். அப்போது தான் பரோட்டா காட்சி கிடைத்தது. அது தான் தற்போது உங்கள் முன்பு என்னை நிற்க வைத்திருக்கிறது.
பிற காமெடி நடிகர்கள் போல உங்களுக்கு காமெடி காட்சிகள் எழுத குழு இருக்கிறதா?
ஆரம்பத்தில் எனக்கு அதுபோல யாரும் கிடையாது. நானே தான் என் காட்சிகளை வடிவமைத்துக் கொள்வேன். இப்போது இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் உள்ளிட்ட சிலர் எனக்கு உதவி செய்கிறார்கள். படப்பிடிப்பில் இருக்கும் போது காட்சிகள் குறித்து எதாவது டவுட் வந்தால், அவர்களுக்கு போன் செய்வேன் அவர்கள் உதவுவார்கள்.
நாடகங்களுக்கு ரிகல்சர் பார்த்தது போல, தற்போது படங்களுக்கு ரிகல்சர் பார்க்கிறீர்களா?
நிச்சயமாக, இப்போதும் நான் நடிக்கும் அனைத்து படங்களுக்கும், காட்சிகள் குறித்து இயக்குநர்கள் சொல்லிய பிறகு, அதை எப்படி மெருகேற்றலாம் என்று முயற்சிப்பேன். படப்பிடிப்பு முடிந்தாலும், அந்த காட்சியில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிப்பேன். ஒரு படப்பிடிப்பு முடிந்து, அப்படத்தின் வசனம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிறகும் கூட, நான் வேறு படப்பிடிப்பில் இருந்தாலும், திடீரென்று எதாவது வசனம் நினைவுக்கு வந்தால், உடனே அந்த இயக்குநருக்கும் போன் செய்து, அந்த வசனத்தை பேசிவிட்டு வருவேன்.
ஆரம்பகாலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறதே...
அப்படியெல்லாம் ஏதும் இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நான் முயற்சித்த போது என்னுடன் இருந்த நண்பர்கள் பலருக்கு நான் வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறேன். சிலர் இந்த துறையைவிட்டுவிட்டு வேறு துறைக்கு சென்றுவிட்டார்கள். வாய்ப்பு வாங்கி கொடுக்கும் சிலர் தங்களது வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளாமல் போய்விட்டார்கள். ஒரு இயக்குநரிடம் என்னால் அறிமுகப்படுத்த தான் முடியும், அவர் தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அவர்களை கவர வேண்டும். எப்படி வெண்ணிலா கபடி குழு படத்திற்காக எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொண்டேனோ அதுபோல. சினிமாவில் நேர்மையாக முயற்சிப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் படங்களில், உங்கள் மனைவி பிள்ளைகளுக்கு பிடித்த படம் என்ன?
என் மனைவிக்கும், எனக்கும் ‘வெண்ணிலா கபடி குழு’ பிடிக்கும். என் பிள்ளைகளுக்கு ‘அரண்மனை-2’ பிடிக்கும்.
சிக்ஸ் பேக் வைக்க முயற்சி செய்கிறீர்களாமே...
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கண்ட நேரத்தில், கண்டதை சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்கு, இயக்குநர் ஒருவர் அறிவுரை சொன்னார். அவர் சொன்ன அறிவுரை அர்த்தமுள்ளதாக இருந்தது. அதனால் தற்போது உணவை குறைத்து உடற்பயிற்சி செய்து, உடம்பை பிட்டாக வைத்துக்கொண்டிருக்கிறேன். இப்படி பிட்டாக இருந்தால் இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு ஹீரோக்களில் நண்பராக வண்டிய ஓட்டலாமே அதனால் தான். இப்படியே உடற்பயிற்சியை தொடர்வதால், அந்த சிக்ஸ் பேக் வந்தால் வரட்டுமே, அதை என்ன பிச்சி எரிச்சிடவா முடியும்.
காமெடியில் உங்களது ரோல் மாடல் யார்?
என் அப்பா தான். அவர் தான் எனது ரோல் மாடல், எனது ஹீரோ எல்லாமே. அவர் செய்யும் காமெடியில் நான் பத்து சதவீதம் தான் செய்கிறேன் என்று எனது ஊர் மக்கள் சொல்கிறார்கள். அவரிடம் இருந்த காமெடியில் ஐம்பது சதவீதம் செய்தாலே, நான் பெரிய ஆளாகிவிடுவேன் என்றும் சொல்கிறார்கள்.
ஹீரோவாக எப்போது நடிக்க போகிறீர்கள்?
ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வரமாட்டேங்குது. காமெடியில் இன்னும் செய்ய வேண்டியதே அதிகமாக இருக்கிறது, என்று தான் தோன்றுகிறது.
எந்த ஹீரோயினுடன் டூயட் பாட ஆசை?
எல்லாருடனும் தான். குறிப்பா நயந்தாராவுடன் டூயட் பாட ஆசையாக தான் இருக்கிறது. ஆனால், இதை அறிந்து அவர்கள் என் மீது வழக்கு ஏதாவது போடப்போகிறார்கள் என்று பயமாகவும் இருக்கிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...