Latest News :

ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி ரசிகர்கள் அறியாததை சொல்லும் ‘ஒன் ஹார்ட்’
Thursday August-10 2017

’ஒன் ஹார்ட்’ என்ற தலைப்பில் உருவாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்வு திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இப்படத்தில் இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து ரசிகர்கள் அறிந்திராத, பார்த்திராத காட்சிகள் இடம்பெறப் போகிறது என்ற தகவல் வெளியாகியவுடன், படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

 

தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட் ’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏஆர் ரஹ்மான். கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம். 

 

ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக்கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை முன் வைத்து இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்ட திஸ் இஸ் இட் (This is it) என்ற கான்சர்ட் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவிலும் இது போன்ற முன்னணி இசைக்கலைஞராக புகழ்பெற்று திகழும் ஏ ஆர் ரஹ்மானை முன்னிறுத்தி உருவான கான்சர்ட் ஃபிலிம் தான் ஒன்ஹார்ட். 

 

ஏ ஆர் ரஹ்மான், அமெரிக்காவில் மேற்கொண்டஇசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசைப்பயணத்தின் போது பதினாறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பதினாறு இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒரே படமாக உருவாக்குவதின் முதல் முயற்சி தான் ஒன் ஹார்ட்.

 

இந்த படத்திற்கான ஒலிகலவை முழுவதும் டால்பி அட்மாசில் செதுக்கியிருக்கிறார்கள். இதைக் கேட்ட டால்பி நிறுவனம், தாமே முன்வந்து இப்படத்திற்கு விளம்பரதாரராகியிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலியின் தரத்தையும் உலகளாவிய அளவில் பாராட்டி அங்கீகரித்திருக்கிறது. 

 

இப்படத்தை கனடாவில் ஒரு முறை ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருக்கிறது.  இத்தகைய சிறப்பைப் பெற்ற ஒன் ஹார்ட் படம் உலகமெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த ஒன்ஹார்ட் படத்தில் பதினாறு பாடல்கள் இருந்தாலும் தமிழ் பாடல்களும்  இடம்பெற்றிருக்கின்றன.

 

இது வரை நீங்கள் ஏ ஆர் ரஹ்மான், மேடையில் பாடியிருப்பதை கண்டு ரசித்திருப்பீர்கள். அவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆஸ்கார் விருது வாங்கியதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு இசைநிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு குறித்தோ, அதற்கான பணிகளில் எப்படி தன்னுடைய குழுவினருடன் ஈடுபடுகிறார் என்பது குறித்தோ, மேடைகளில் பாடவேண்டிய மற்றும் இடம்பெறவேண்டிய நிகழ்வுகளின் வரிசை பட்டியல் குறித்தோ அதற்கான பின்னணி குறித்தோ அறிந்திருக்கமாட்டீர்கள். அதனை சுவைப்பட சொல்வது தான் இந்த படம்.

 

இது அவருடைய ப்ரொபஷனல் பயோகிராபி என்று சொல்லலாம். இந்த படம் ரசிகர்களுக்கு அவரைப்பற்றிய புரிதலை புதிய கோணத்தில் அளிக்கும் என்று உறுதியாக சொல்லலாம். அவர் ஒரு இசைக்குறிப்பை எப்படி உருவாக்குகிறார்? அதனை ஏனைய இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார் ? அவர் தன்னுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை, அவர்களின் திறமையைக் கடந்து, எந்தவொரு தனித்துவமான பண்பின் அடிப்படையில் அல்லது எமோஷனல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பதையும் அவர் விளக்கி கூறும் போது புது அனுபவமாக இருக்கும்.

 

ஏ ஆர் ரஹ்மானும் அவருடைய இசைக்குழுவினர் தான் இதன் நாயகர்கள் மற்றும் நடிகர்கள். இதில் அவருடன் பாடகர்கள் ஹரிசரண், ஜொனிதா காந்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்குபெற்றிருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு கலைஞரையும் அவர் ஏன் தேர்வு செய்தார்? அதன் பின்னணி என்ன? அவர்கள் மேடை நிகழ்ச்சியில் பங்குபெறும் போது அவர்களிடமிருந்து வெளிப்படும் திறமை என்ன?என பலவற்றை ஏ ஆர் ரஹ்மான் விவரிக்கும் போது சுவராஸ்யமாக இருக்கும். அவருடைய குழுவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கலைஞர்களும் முப்பது வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையினரே.

 

இதனை திரையரங்கத்தில் காணும் போது உங்களுக்கு சிரிக்கத்தோன்றும், அழத் தோன்றும். உணர்ச்சிமேலீடும். கோபம் வரும். பலவித உணர்வுகளின் கலவையாக இப்படம் இருக்கும். அவருடைய லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை துல்லியமான ஒலிகுறிப்புடன் கேட்டு ரசிக்கலாம். 

 

தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது. இம்மாதம் (ஆகஸ்ட்) 25 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related News

174

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...