இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், 70 வது சுதந்திரத்தை முன்னிட்டு இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் தற்கொலை, மீத்தேன் திட்டம் போன்றவற்றை குறித்து பேசியிருப்பவர், மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். தள்ளாத வயதில் அவர்கள் தலையில் சட்டியைச் சுமந்துப் போராடுகிறார்கள். இடுப்பில் வெறும் கோவணம் கட்டிப் போராடுகிறார்கள். இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் என்கிற நிலையில் அவர்கள் போராடுகிறார்கள். சமீபத்தில் தேசிய குற்றப் பதிவு கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி விவசாயிகளின் தற்கொலையில் நாட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். 2015-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 604 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். நாடு விடுதலை அடைந்து 70-வது சுதந்திர தினம் கொண்டாடும் இன்றைய நாளில் அவமானம் இது.
இன்னொரு பக்கம் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்கள் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கிராமங்களில் 23,000 ஹெக்டேரில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிற்சாலைகள் அமைப்பதாக சொல்கிறார்கள். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் 57,345 ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடம் பறிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும். இதனால் மேற்கண்ட நிலங்கள் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும். மக்கள் எதிர்ப்பால் இந்த திட்டத்தை மேற்கு வங்கம் அரசு மற்றும் கேரள அரசுகள் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டன. தமிழகத்திலும் மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடிவருகிறார்கள்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன், வறட்சி என்று தமிழக விவசாயிகள் முன் எப்போதும் சந்திக்காத ஆபத்துகளை இன்று சந்தித்துவருகிறார்கள். இன்றைய சுதந்திர தினத்தை கொண்டாட்டச் சூழலில் இவை எல்லாம் நமது சமூகத்தில் பெரியதாக எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. இன்று தமிழகம் சந்திக்கும் ஒவ்வொரு பெரிய பிரச்சினையுமே முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டியவை. ஒவ்வொன்றிலும் தும்பை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். இதுபோன்ற திட்டங்களால் கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை இன்றைக்கு வேண்டுமானால் வசதியாக தெரியலாம். ஆனால், நாளை நமது குழந்தைகளை சோற்றுக்கும் தண்ணீருக்கும் இல்லாமல் அல்லாட விடப்போகிறோம் என்பதே உண்மை.
இதுபோன்ற விவசாயிகளின் பிரச்சினைகளின்போது உச்சுக் கொட்டி ஒதுங்கிக்கொள்வது நமக்கு நல்லது அல்ல. ஏனென்றால் விவசாயிகள் தங்கள் குடும்பத்துக்காக மட்டும் உழைக்கவில்லை; அவர்கள் நம் வயிற்றுக்கு சேர்த்துதான் அவர்கள் உழைக்கிறார்கள். இவை எல்லாம் நம்மை பாதிக்கவில்லை என்றால் வேறு எதுதான் நம்மை பாதிக்கப்போகிறது? எனவே, திரைத் துறையினர் மட்டுமின்றி அனைத்துத் துறையினரும் மக்களும் மேற்கண்ட பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் பேச வேண்டும் என்று இன்றைய சுதந்திர தினத்தில் கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பதையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...